கோபுரம் கட்டாத கதை !

'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பார்கள். ஆனால், கோபுரம் இல்லாத கோயில்களும் ஏராளம் உண்டு நம் நாட்டில்! அவற்றுள் நாமக்கல் மாவட்டம், இழுப்புலி கிராமத்தில் அமைந்துள்ள சீர்காழிநாதர் கோயிலும் ஒன்று. இந்த ஆலயத்தில் கோபுரம் அமைக்கப்படாததற்கு, சுவாரஸ்யமான காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். 

பழங்காலத்தில் பெரும் நந்தவனமாகத் திகழ்ந்த இந்தப் பகுதிக்கு எண்ணற்ற முனிவர்களும் சித்தர்களும் வந்து வழிபட்டுச் சென்றுள்ளார்கள். எனவே, தெய்வ சாந்நித்தியத்துடன் திகழ்ந்தது இப்பகுதி. சீர்காழியைச் சேர்ந்த முனிவர் ஒருவரது தவத்துக்கு மகிழ்ந்து காட்சியளித்த சிவனார், அங்கேயே கோயில்கொண்டு விட்டார். இதையொட்டி இங்குள்ள இறைவனுக்கு சீர்காழிநாதர் என்று திருப்பெயர் ஏற்பட்டது. வெகுகாலம் நந்தவனத்திலேயே அருள்பாலித்துள்ளார் சீர்காழி நாதர்.

திப்புசுல்தான் படையெடுப்பு நிகழ்ந்த காலத்தில், கோயில்கள் இல்லாத இடங்களை அவர் தன்வசப்படுத்திக் கொள்வாராம். தங்களது கிராமத்துக்கும் அப்படியொரு நிலை வந்துவிடக்கூடாது என்பதால், இங்கே அவசர அவசரமாக ஆலயம் எழுப்பினார்கள் கிராம மக்கள். போதிய கால அவகாசம் இல்லாததால், கோபுரம் எழுப்ப இயலவில்லையாம்! பின்னர் வந்த நாட்களில் இந்த ஆலயத்துக்கு திப்புசுல்தானும் வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள்.

ஈஸ்வரன் மட்டுமின்றி ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ தட்சிணாமூர்த்தி,ஸ்ரீ பைரவர் மற்றும் நவகிரகங்களும் தனித்தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள்.

இந்த ஆலயத்துக்கு வந்து ஸ்ரீ சீர்காழிநாதரையும்,ஸ்ரீ சிவகாமி அம்பாளையும் மனமுருகி வேண்டினால் புத்திர பாக்கியம், திருமண வரம், தொழில்விருத்தி முதலான பலதரப்பட்ட வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறும்.

      கு.ஆனந்தராஜ்

படங்கள்: அ.நவின்ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick