10-ல் குரு... பதவி பறிபோகுமா ?

ராம்திலக்

வகிரகங்களில் முழு முதல் சுபகிரகமான குரு கோசாரப்படி, அதாவது சந்திர ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் இடங்களில் உலவும்போது சுப பலன்களைத் தருவார். 

1, 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் உலவும்போது கெடுபலன்களைத் தருவார். 4, 10ம் இடங்களில் உலவும்போது 50% நற்பலன்களையும் 50% கெடுபலன்களையும் தருவார்.

புலிப்பாணி சித்தர் குருவின் கோசார சஞ்சாரம்

பற்றிப் பாடியது:

ஜன்ம ராமர் வனத்திலே சீதையை விடுத்ததும்

தீதில் ஒரு மூன்றிலே வாலி பட்டமிழந்து போம்படியானதும்

ஈசன் ஒரு பத்திலே தலையோட்டினின் இரந்துண்டதும்

தர்ம புத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும்

சத்திய மாமுனி ஆறிலே இருகாலிலே தலை பூண்டதும்

வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டிலே வீழ்ந்ததும்

மன்னுமாகுருசாரி மாமனை வாழ்விலாதுறு மென்பவே.

இந்தப் பாடல் மூலம் 1, 3, 10, 4, 6, 12 ஆகிய இடங்களில் கோசாரப்படி குரு உலவும்போது கெடுபலன்களைத் தருவார் என்பது தெளிவு. என்றாலும், குரு மேற்படி ஸ்தானங்களில் இருக்கும்போதும் சில நற்பலன்கள் ஏற்படவே செய்கின்றன. அதுபற்றி விரிவாக அறிந்துகொள்வோமா?

ஜன்ம குரு வன வாசமா?

குருவானவர் தான் இருக்கும் இடத்தைவிட, பார்க்கும் இடங்களைப் புனிதப்படுத்துவார் என்கிறது சாஸ்திரம்.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் குரு இருந்தால், சுப பலன்களைத் தருவார். ஜன்ம குருவாக இருந்தாலும், மேஷத்துக்கு 9ம் வீட்டோன் என்ற வகையிலும், கடகத்துக்கு 9ம் வீட்டோன், சிம்மத்துக்கு 5ம் வீட்டோன், விருச்சிகத் துக்கு 5ம் வீட்டோன், தனுசுக்கு ராசி அதிபதி, மீனத்துக்கு ராசி அதிபதி என்ற வகையிலும் சுப பலன்களைத் தருவார். ஜன்ம குருவாக இருந்தாலும், மதிப்பும் அந்தஸ்தும் உயரும்; உடல் நலம் சீராகும்.

நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். ஜன்ம ராசியில் இருக்கும்போது, குருவானவர் 5, 7, 9ம் இடங்களைப் பார்க்கும் நிலை அமைவதால், மக்கள் நலம், வாழ்க்கைத்துணை நலம், தந்தை நலம் ஆகியவையும் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். ஜன்ம குரு, ஜன்ம நட்சத்திரத்துக்குச் சாதகமான நட்சத்திரத்தில் உலவும்போது, சுப பலன்களைத் தருவார்.

உதாரணமாக, ஒருவர் சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் எனக் கொள்வோம். அவருக்கு ஜன்ம குருவானவர், 2வது நட்சத்திரமான

பூர நட்சத்திரத்தில் உலவும் நேரத்தில் சுப பலன்களைத் தருவார். அதாவது, ஒருவரது ஜன்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9வது நட்சத்திரங்களில் குரு மட்டுமல்லாது, எந்தக் கிரகங்கள் உலவினாலும் சார பலம் பெற்று நன்மை தரும் என்பது விதி.

மூன்றில் குரு பகவான்...

கோசாரத்தில் குரு 3ல் உலவும்போதுதான், அதிகம் கெடுபலன்களைத் தருவார் என்று சொல்லப்பட்டுள்ளது. காரியத்தடை, மன பலம் குறைவு, வீண் அலைச்சல், வேளாவேளைக்கு உணவு உண்ண முடியாமல் போவது, ஆரோக்கியம் பாதிப்பு, வருமானக் குறைவு ஆகியவை ஏற்படும். தொழிலில் சிக்கல் உண்டாகும். நண்பர்களே விரோதிகளாவதும் உண்டு. மரண பயம் ஏற்படும். ஜாதக பலமும் குறைந்திருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் கண்டம் உண்டாகும். என்றாலும், குருவின் பார்வையால் நலம் உண்டாகும்.

3ல் உள்ள குரு 7, 9, 11ம் இடங்களைப் பார்ப்பதாலும், குருவின் பார்வை பெற்ற இடங்கள் புனிதம் பெறும் என்பதாலும், மனைவியால் அனுகூலம் உண்டாகும். தொழில் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் ஏற்படும்.

அர்த்தாஷ்டம குரு!

குரு 4ல் உலவும் நேரத்தில், தாய் நலம் பாதிக்கும். வண்டி, வாகனம், வீடு போன்ற சொத்துக்களுக்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களாலும் செலவுகள் கூடும். என்றாலும், குருவின் பார்வையால் நலம் உண்டாகும். குரு 5ம் பார்வையாக 8ம் இடத்தைப் பார்ப்பதால், ஆயுள் விருத்தியடையும். திடீர்ப் பண வரவு உண்டாகும். காப்பீடு போன்ற இனங்களாலும் ஆதாயம் கிடைக்கும். 7ம் பார்வையாக 10ம் இடத்தைப் பார்ப்பதால், உயர்பதவி, பட்டங்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். பிறரால் மதிக்கப்படுவீர்கள். சுபகிரகமான குரு 10ம் இடத்தைப் பார்ப்பதால், சுப காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். 9ம் பார்வையாக 12ம் இடத்தைப் பார்ப்பதால், வீண் செலவுகள் குறைந்து, சுபச் செலவுகள் கூடும். அந்த வகையில் மன ஆறுதல் உண்டாகும். மேஷம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு குரு 4ல் உலவும்போது, அதிகம் நற்பலன்களையே தருவார். குருவானவர் மேஷத்துக்கு உச்ச ராசியிலும், கன்னி (தனுசில் குரு), தனுசு ராசிகளுக்குத் தன் சொந்த வீட்டிலும் (மீனத்தில் குரு) உலவுவதே இதற்குக் காரணம்.

6 ல் குரு... குடும்பம் சிறக்கும்!

குரு, ராசிக்கு 6ல் உலவும்போது, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும். கடன் வாங்கவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். ஆரோக்கியமும் பாதிக்கும். குரு சுபகிரகம் என்பதால், நல்லவர்களேகூட பகைவர்கள் ஆவார்கள். மக்கள் நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். தகாத வழிகளில் பொருள் திரட்ட முயற்சித்து, அதனால் சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிவரும். வழக்குகளில் சிக்கிக்கொள்ளவும் நேரலாம். பொருள் கொடுக்கல்வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.

குரு இருக்கும் இடம் விசேஷமாகாது என்றாலும், 6ல் உள்ள குரு 10, 12, 2ம் இடங்களைப் பார்க்கும் நிலை அமைவதால், குடும்ப நலம் சிறக்கும். தொழிலில் முழுக்கவனத்துடன் ஈடுபட்டால், வெற்றி காணலாம். வீண் செலவுகள் குறையும். ஜாதக பலம் உள்ளவர்களுக்கு 6ல் குரு உலவும்போது, பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

அஷ்டமத்து குரு  கஷ்டம் தருவாரா?

ஜன்ம ராசிக்கு 8ல் குரு உலவுவது விசேஷமாகாது. அஷ்டம குரு பாடாய்ப்படுத்தும் என்பார்கள். பொருளாதாரப் பிரச்னை, பிள்ளைகளின் முன்னேற்றம் தடைப்படல், தெய்வ காரியங்களை நிறைவேற்ற முடியாமல் போதல், நல்லவர்களின் அதிருப்திக்கு ஆளாதல், தொழில்வியாபாரத்தில் தடை, மனக்கவலை, ஆரோக்கிய பாதிப்பு, வழக்குகள் மூலம் வீண் செலவு, மறதியால் அவதி, மூளை சம்பந்தமான நோய், வயிற்று உபாதை ஆகியவை உண்டாகும். குரு 8ல் இருக்கும்போது, சாதகமான நட்சத்திரத்தில் உலவும்போது அதிக கெடுபலன்களைத் தருவதில்லை. ஜாதகத்தில் குரு வலுத்திருக்கும்போது (ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம்) கோசார குரு அதிகம் பாதிப்பதில்லை. குரு 8ல் அமர்ந்து 12, 2, 4ம் இடங்களைப் பார்க்கும் நிலை அமைவதால், வீண் செலவுகள் சற்று குறையும். குடும்ப நலம் சீராகும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும்.

10ல் குரு பதவி பறிபோகுமா?

ஜன்ம ராசிக்கு 10ல் குரு உலவுவது சிறப்பாகாது.  பத்தில் குரு பதவியில் சிக்கலை உண்டுபண்ணுவார். செய்து வரும் தொழில் எதுவானாலும், பிரச்னைகள் தலைதூக்கும். பதவி பறிபோகும் நிலை ஏற்படும். மதிப்பு குறையும். வீண் செலவுகள் ஏற்படும். பிறரால் அவமானப்படுத்தப்படும் நிலையும் உண்டாகும். மன அமைதி குறையும். வருவாய், லாபம் ஆகியவை குறையும். தேவைகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டியிருக்கும்.உடன்பிறந்த வர்களாலும் மக்களாலும் மன அமைதி குறையும்.

ஸ்பெகுலேஷன் போன்ற அதிர்ஷ்ட இனங்களில் ஈடுபடலாகாது. தொழில், வியாபாரம், வர்த்தகம், உத்தியோகம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். என்றாலும், குருவின் பார்வை 2, 4, 6ம் இடங்களுக்குப் பதிவதால், அதன் மூலம் நலம் உண்டாகும். குடும்ப நலம் சீராகும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். எதிரிகளின் வலு குறையும். நோய்நொடி உபத்திரவங்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும்.

பன்னிரண்டில் குரு... பகை அகலும்!

ராசிக்கு 12ல் குரு உலவுவதும் சிறப்பாகாது. பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். உடல்நலம், மனநலம் பாதிக்கும். மதிப்பு குறையும். மக்களால் மன அமைதிக் குறைவு உண்டாகும். மகன் அல்லது மகளைப் பிரிந்து வாழ வேண்டிவரும். அதிர்ஷ்டம் இராது. மறதி ஏற்படும். வயிற்று உபாதை உண்டாகும். கணவன் மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். பிற பெண்களின் தொடர்பால் செலவுகளும் அவமானமும் ஏற்படும். வழக்கில் சிக்க நேரிடலாம். எச்சரிக்கை தேவை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களாலும், உடன் பணிபுரிபவர்களாலும் தொல்லைகள் ஏற்படும்.

குரு 12ல் இருந்துகொண்டு 5ம் பார்வையாக 4ம் இடத்தையும், 7ம் பார்வையாக 6ம் இடத்தை யும், 9ம் பார்வையாக 8ம் இடத்தையும் பார்க்கும் நிலை அமைவதால், சுகம் கூடும். சொத்துக்கள் சேரும். தாய் நலம் சீராகும். எதிரிகள் அடங்குவார் கள். துன்பங்களும் துயரங்களும் குறையும்.

பொதுவாக, குருவானவர் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக நலம் புரிபவர் ஆவார். காரணம், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு குரு நட்பு கிரகம் ஆவதும் ராசிநாதன் ஆவதும் ஆகும்.

ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக கெடுபலன்களைத் தருவார். காரணம், குருவுக்கு ஆதிபத்திய விசேஷம் இல்லாதது ஆகும்.

குரு, ஜன்ம ராசிக்கு 1, 3, 6, 8, 12ம் இடங்களில் உலவும் போது, குருப் பிரீதி செய்துகொள்வது நல்லது. குரு, உங்கள் ஜன்ம நட்சத்திரத்துக்கு 1, 3, 5, 7ஆகிய நட்சத்திரங்களில் உலவும்போதும், 6, 8, 12 ஆகிய வீடுகளின் அதிபதிகளாகிற கிரகங்களின் நட்சத்திரத்தில் உலவும்போதும் குருவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது அவசியமாகும்.

நவகிரகங்களில் குருவையும், குருவின் அதிதேவதையாகிய தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.

மற்றபடி, குரு 1, 3, 6, 8, 12ம் இடங்களில் உலவினாலும்கூட, அவரது பார்வை படும் இடங்களுக்குப் பலம் கூடும் என்ற வகையில் நலம் உண்டாகும்.

குரு பார்க்க கோடி புண்ணியம்!

குரு பார்க்க கோடி தோஷம் தீரும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick