‘மாசி' கடலாடல்...

மாசி மாதம் மக நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியுடன் கூடிவரும். எனவே, இம்மாதம் மாக மாதம் என்றழைக்கப்படுகிறது. மேலும், மாசி மாதம் வருணனுக்கு உரிய மாதம். வருண தேவன் சமுத்திரங்களுக்கு அரசனாகப் போற்றப்படுகிறான். மகம் அவனுக்கு உரிய நட்சத்திரம். ஆகவே, மாசி மாதத்தில் கடலில் நீராடி முன்னோருக்கு நீர்க்கடன் செய்வதுடன், பெருந் தெய்வங்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். 

மாசி மகத்தன்று சிவபெருமான், திருமால், அம்பிகை முதலான தெய்வ மூர்த்தங்கள், அலங்கார திருக்கோலத்தில் கடற்கரைக்கு எழுந்தருளுகின்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளும் தீர்த்தவாரியும் நடைபெறும். அவ்வேளையில் பக்தர்களும் கடலில் நீராடி, இறை வனை வழிபடுவார்கள். இவ்விழா மாசிக் கடலாடல் என்று அழைக்கப்படுகிறது. இது, நெடுங்காலமாக நடைபெற்றுவரும் தொன்மையான விழா ஆகும். திருஞானசம்பந்தர் திருமயிலையில் அருளிச் செய்த பூம்பாவைப் பதிகத்தில், 'மடலார்ந்த, தெங்கின் மயிலையார் மாசி கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்...’ என்று கூறுவதைக் காண்கிறோம். ஆக, ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பே இவ்விழா சிறப்புடன் நடந்ததை அறியமுடிகிறது.

சிதம்பரம் நடராசர் ஆலயத்திலுள்ள சந்திரசேகரப்பெருமான் 10 கி.மீ. தொலைவிலுள்ள கிள்ளை எனும் இடத்துக்கு எழுந்தருளி கடலாட்டு விழா காண்கிறார்.

ஐப்பசியில் காவிரியில் நீராடுவதும், துலா காவிரி மகாத்மியத்தைப் பாராயணம் செய்வதும் போன்று மாசி மாதத்தில் மாக புராணத்தைப் பாராயணம் செய்கின்றனர். மாக புராணம், மாகபுர அம்மானை ஆகிய நூல்களைப் படிப்பதும், படிக்கச் சொல்லிக் கேட்பதும், சிறப்பு வழிபாடுகள் செய்வதும் தென்னகத்தில் சில பகுதிகளில் வழக்கத்தில் உள்ளன.

- அருண வசந்தன், சென்னை - 4

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick