புதுக்கோட்டையில் பேசும் தெய்வம்!

கல்வி தரிசனம்!

புதுக்கோட்டை மாநகரின் கிழக்குப் பகுதியில், இந்த மாநகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் விதம் அமைந்துள்ளது திருக்கோகர்ணேஸ்வரர் திருக் கோயில். பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்ட மகிளனேஸ்வரர் திருக்கோயிலும்,  பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட திருக்கோகர்ணேஸ்வரர் ஆலயமும் ஒரே இடத்தில் ஒன்றாய் இருப்பது மேலும் சிறப்பு. இங்கு, அன்னை பிரகதாம்பாள் சக்தி சொரூபிணியாய் காட்சி தருகின்றாள். 

தெற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்தால், முழுமுதற் கடவுள் விநாயகரும் தென்முகக் கடவுள் தட்சிணா மூர்த்தியும் அருகருகே அமர்ந்து, ஒரே சந்நிதியில் காட்சி தருவது விசேஷ அம்சம் என்கிறார்கள்.

'குரு பார்வை கோடி நன்மை’, 'விநாயகனை வழிபடின் வெற்றிக்கு இல்லை தடை’ என்ற நோக்கில், இந்த இருபெரும் தெய்வங்களும் ஒருங்கே சந்நிதி கொண்டுள்ள இந்தக் கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானது.

ஆலயத்துக்கு வரும் பக்தர் களின் தடைகளையும் குறை களையும், ஒன்றாய் தரிசனம் தருகின்ற தட்சிணா மூர்த்தியும் ஸ்ரீவிநாயகரும் விரைவில் தீர்க்கின்றனர் என்பது நம்பிக்கை. கல்விக்கு அதிபதியான தட்சிணா மூர்த்தி, விநாயகருடன் சேர்ந்து அருள்புரிவதால், மாணவர்கள் இங்கு வந்து வணங்கிச் சென்றால், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.

இங்கு, சப்தலிங்க வடிவிலும் இறைவன் காட்சி தருகிறார். சப்த லிங்க வழிபாட்டின் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பல்லவர்கள் கட்டிய மலைக் கோயிலில், கல்விக்கடவுளான  சரஸ்வதிதேவி அருள்பாலிக்கிறாள். சரஸ்வதி தேவியை மனமுருக வேண்டி, தேன் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்தால் கல்வியில் சிறந்து விளங்கமுடியும்.

தட்சிணாமூர்த்தியின் சிலை இங்கு புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. இவரை வழிபடுவதன் மூலம், கல்வியுடன் சேர்த்து இசை ஞானத்தையும் ஒருங்கே பெறமுடியும் என்பது நம்பிக்கை.

சக்தி சொரூபிணியான பிரகாதாம்பாள் திருப்பாதத்தில் வைத்து வழிபடப்படும் 'அரைக்காசு’ இங்கு விசேஷம்! அம்மனுக்கு காசு எடுத்து வைத்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என வரலாற்றுச் சம்பவம் ஒன்று கூறப்படுவதால், பிரகதாம்பாளை பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

சிவபெருமான், காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவ ஸ்தலம் இது. இங்கு ஈசனை வழிபடுவதால் மோட்சம் கிட்டும்.

கல்விக்கு அருளும் கடவுளர்களோடு இங்கு உறைந்திருக்கும் அம்பாளையும் ஈசனையும்  வழிபட...  திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

  ர.நந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick