இனிக்கும் வாழ்க்கையும் இதய ரேகையும்!

உள்ளங்கையில் சில உண்மைகள்‘சேவாரத்னா’ டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ரு மனிதனுடைய அறிவாற்றல்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் உறுப்பு 'மூளை’ எனில், அவனுடைய உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும், பரிமாணங்களையும் வெளிப்படுத்துவது 'இதயம்’ ஆகும். நம் உள்ளங்கையில், இதயத்தின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கவும், தேக ஆரோக்கிய நிலையை எடுத்துக்காட்டவும் ஆதாரமாக அமைந்துள்ளது, இருதய ரேகை அல்லது ஹார்ட் லைன் எனப்படும். 

புத்தி ரேகைக்கு மேலாகவும், விரல்கள் உள்ளங்கையை தொடும் பகுதிக்குக் கீழாகவும், புதன், சூரியன், சனி, குரு ஆகிய மேடுகளின் கீழே ஓடும் ரேகை இருதய ரேகை ஆகும்.

இந்த ரேகை தெளிவாகவும், ஆழமாகவும், சிக்கல்கள் அல்லது  சங்கிலி அமைப்பாக இல்லாமல்  இருந்தால் வெகுசிறப்பு (படம்1). இத்தகைய ரேகை அமைப்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டமானவர்கள். அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், தெளிவான மனமும், எழிலான தோற்றமும் அமைந்திருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

இருதய ரேகை விட்டு விட்டு அமைந்திருந்தாலோ, சங்கிலித் தொடர் போன்றோ, தெளிவு இல்லாமலோ அமைந்திருந்தால் (படம்2), உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுகின்றவர் களாகவும், ஆரோக்கியம் இல்லாதவர் களாகவும், குழப்பவாதிகளாகவும், போதிய செல்வம் சேர்க்கமுடியாதவர்களாகவும், சிக்கலான வாழ்க்கைக்குள் தவிப்பவர்களாகவும் திகழ்வார்கள்.

பொதுவாக இருதய ரேகையானது புதன் விரலின் கீழே புதன் மேட்டில் ஆரம்பமாகும். சூரியன், சனி மேடுகளின் கீழ்ப்பகுதியாகச் சென்று குரு மேட்டை அடையும். ஆனால் எல்லோரது கைகளிலும் இதுபோன்று இருக்காது. சில இருதய ரேகைகள் குட்டையாக  சூரிய மேட்டுக்கும் சனி மேட்டுக்கும் இடையிலேயே அமையலாம்!

இருதய ரேகையின் அமைப்பு, நிறம், அமைந்து இருக்கும் விதம், அதிலுள்ள குறிகள், சங்கிலிகள், தீவுகள் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்து, இந்த ரேகையின் பலனைச் சொல்ல வேண்டும். இப்போது, இருதய ரேகையின் முக்கியமான ஐந்து வகைகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

முதல் வகை (படம் 3): இருதய ரேகை, புதன் மேட்டில் ஆரம்பித்து, சூரியன், சனி மேடுகளின் கீழ்ப்பகுதி வழியே சென்று குரு மேட்டில் முடிவடையும். இத்தகைய ரேகையைக் கொண்டவர்கள் உயர்ந்த திறமை, பரோபகார குணம், அன்பு, பண்பு, பிறர் நலம் கருதும் எண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒழுக்கத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துவார்கள். நேர்மை, தெய்வ நம்பிக்கை, மனித நேயம் முதலிய உயர் பண்புகள் இவர்களிடத்தில் காணப்படும். இதனால் இவர்கள் பெயரும் புகழும் பெற்று, சீரும் சிறப்புடனும் வாழ்வார்கள்.

2வது வகை (படம் 4): இருதய ரேகை புதன் மேட்டில் ஆரம்பித்து சூரியன், சனி மேடுகளைக் குறுக்காகத் தாண்டி, குரு மேட்டையும் கடந்து உள்ளங்கையின் மறுபக்கம் வரையிலும் செல்லும். இத்தகைய அமைப்பு கொண்டவர்கள் உயர்ந்த லட்சியங்கள் உள்ளவர்களாகவும், அவற்றைப் போராடி பெறுபவர்களாகவும் திகழ்வர். அதேபோல், உணர்ச்சிகளை உடனுக்குடன் பிரதிபலிப்பவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், எதிர்ப்புகளைச் சமாளிக்கக் கூடியவர்களாகவும், இயற்கையாகவே நல்ல ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் விளங்குவர். எனினும் இவர்களாக தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தமாட்டார்கள். இந்த ரேகை குரு மேட்டில் முடியும் இடத்தில் கவனமாகப் பார்க்கவேண்டும். அது, மேல் நோக்கி வளைந்திருந்தால், பெரும் சாதனையாளராக வெற்றி பெறுவார். கீழ் நோக்கி வளைந்திருந்தால் கடும் உழைப்பும் முயற்சியும் இருந்தாலும் பெரும்பாலும் தோல்விகளையே சந்திக்க நேரிடும்.

3வது வகை (படம் 5): இருதய ரேகை புதன் மேட்டில் ஆரம்பித்து, சனி மேட்டின் கீழ்ப்பகுதியில் முடிவடைந்துவிடும். இத்தகைய அமைப்புள்ளவர்கள், தகுதியில்லாத விருப்பங்களை வளர்த்துக்கொள்வார்கள். பேராசையும் ஏமாற்றும் எண்ணமும் மிகுந்திருக்கும். மற்றவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் சுயநலத்தை பேணுபவர்களாக விளங்குவர். பிடிவாதம், பொய் மிகுந்திருக்கும். காரியம் சாதிக்க எப்படியும் வளைந்துகொடுத்து வாழ்பவர்கள். உதவி செய்தவர்களை மறந்து விடுவார்கள். இவர்களால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கேடுகள் உண்டாகும்.

4வது வகை (படம்6): புதன் மேட்டில் தொடங்கி சூரிய மேட்டோடு நின்றுவிடும். மிகச் சிறியதான இத்தகைய இருதய ரேகை அமையப்பெற்றவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள். மேலும் பிறரை நம்பாதவர்களாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும், அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், கோபப்படுபவர்களாகவும் திகழ்வர். உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்யக் கூடியவர்களாகவும் விளங்குவர். இவர்களுக்கு கச்சிதமான உடல் அமைப்பு இருக்காது. இருதயம் பலவீனமாக இருக்கும். நரம்பு தளர்ச்சி, தகுதிக்கு மீறிய ஆசை, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கும் ஆட்படுவார்கள். தாங்களும் வெற்றி பெறாததுடன், மற்றவர்களுடைய வெற்றியைக் காண பொறுக்காதவர்களாகவும் திகழ்வார்கள்.

5வது வகை (படம்7): புதன் மேட்டில் ஆரம்பமாகி சூரிய மேட்டுக்கும் சனி மேட்டுக்கும் இடையே... சூரிய விரலுக்கும், சனி விரலுக்கும் நடுவிலுள்ள பகுதியின் கீழ் முடிவடையும்.

இது பலவீனமான இருதய ரேகையாகும். இவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படுபவர்களாகவும், அவசரக்காரர்களாகவும் இருப்பார்கள். செயலில் வேகம் இருந்தாலும் தவறான வழிகளில் செயல்பட்டு தோல்விகளைச் சந்திப்பார்கள். எனினும், தங்களுடைய தோல்விக்கு பிறரைக் குறை கூறுவார்கள். சுயநலம் அதிகம் இருக்கும். நண்பர்களையும் சுற்றத்தாரையும் நம்பமாட்டார்கள். இவர்களுக்கு பரிபூரண ஆரோக்கியம் இருக்காது. இவர்களின் பழக்க வழக்கங்களால் ஆரோக்கியம் குன்றும்.

இனி இந்த ரேகை, மற்ற ரேகைகளுடன் பின்னிப் பிணைந்து காணப்படுவதற்கும், அவற்றுடன் தொடர்புகொண்டு திகழ்வதற்கும்  என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம்.

* இருதய ரேகை கீழ்நோக்கி வளைந்து, புத்தி ரேகையுடன் சேர்ந்தால் (படம்8), உணர்ச்சிகளும், அறிவுபூர்வமான சிந்தனைகளும், ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கும். புத்தியும் மனமும் ஒருமித்து செயல்படும். எனவே முடிவுகள் சம நிலையில் இருக்கும்.

* இருதய ரேகை புத்தி ரேகையை தொடாமல் தனியாக நின்றால் (படம்9), அவர்கள் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் தனித்தனியே செயல்படுத்தக் கூடியவர்கள். சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும், சில நேரங்களில் அறிவு பூர்வமாகவும், நடந்துகொள்வார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம். உணர்ச்சிகளை முழுவதுமாக தியாகம் செய்யும்போதும்,  சிந்தனைகளை முழுவதுமாக மறந்துவிடும்போதும், இவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படும்.

இதுபோன்று இருதய ரேகையின் வடிவமைப்பை வைத்தும் பலன்கள் சொல்லப்படும். அதுகுறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

தொடரும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick