பாதை இனிது... பயணமும் இனிது! - 11

சுவாமி ஓங்காராநந்தர்

து காலணிகள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனம். ஒருமுறை, பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்குக் காலணி விற்பனை செய்ய, இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது அந்த நிறுவனம்.

 ''பழங்குடியினர் எவருமே செருப்பு அணிவது இல்லை. எனவே, அங்கு காலணி விற்பனை செய்வது என்பது இயலாத காரியம்!'  இது முதலாமவரின் கணிப்பு. ''அங்கு எவருமே செருப்பு அணிவதில்லை. எனவே, அங்கு காலணி விற்பனைக்கு நூறு சதவிகித வாய்ப்பு உள்ளது!'  இது இரண்டாமவரின் சிந்தனை.

முடியாது என்று கைவிரிப்பது எளிது. முடியும் என்று கை உயர்த்துவதற்கும், சரியான திட்டமிடலுடன் அதனை முடித் துக் காட்டவும் மிகுந்த நெஞ்சுரம் தேவை.

சாத்தியக்கூறுகளைச் சரியாக ஆராய்ந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திறமை ஒரு தலைவனுக்குத் தேவை. எல்லோரும் சென்ற அதே பாதையில் செல்வது எளிது. அடர்ந்த காட்டுக்்குள், சரியான இலக்கை நோக்கி, தனக்கென ஒரு பாதையில் பயணிப்பவனின் கண்களுக்கே மற்றொரு புதிய பாதை அகப்படுகிறது.

அத்தகைய புதிய வழிகளைச் சிந்தித்துச் செயல்படுத்துவதற்குத் தெளிவான திட்டமிடலும், அயராத முயற்சியும் தேவை. அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறவே திருவள்ளுவர், 'ஆள்வினையுடைமை’ என்ற அதிகாரத்தை அருளியிருக்கிறார். இந்தக் காரியத்தை எப்படிச் செய்து முடிப்பது என்று மலைப்பு ஏற்படுவது இயல்பு. சோர்வையும் மலைப்பையும் உதறி, தனது இடைவிடாத முயற்சிகளாலும் வெற்றிகளாலும் பிறரை மலைக்கச் செய்பவனே சிறந்த தலைவன்.

அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சிதரும் (திருக்குறள்: 611)

முயற்சிதான் வெற்றியையும் பெருமையை யும் பெற்றுத் தரும் என்கிறார் திருவள்ளுவர்.

படிக்கும் காலத்தில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தை எடுத்ததும் மலைப்பும் சோர்வும் எட்டிப் பார்க்கும். இருப்பினும் அவற்றை உதறி, திட்டமிட்டு நாள்தோறும் தொடர்ந்து முயற்சி செய்து படிப்பவர்களே, தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்; அதிக மதிப்பெண் எடுத்துச் சாதனை படைக்கிறார் கள். அதுபோல பிரச்னையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளில் கவனம் செலுத்தி, தொடர்ந்து முயற்சி செய்தல் மிகவும் அவசியம்.

தீவிர முயற்சி உடையவரால்தான் பிறருக்கு உதவி செய்ய முடியும். ஆதரவான சொற்களை உதிர்க்கின்ற உதடுகளைக் காட்டிலும், ஓடி வந்து தாங்குகின்ற கைகளே சிறந்தவை என்பார்கள். குடும்பமாக இருந்தாலும், நிறுவன

மாக இருந்தாலும் அங்கே அச்சாணி போன்று இயங்குபவர் யாராவது ஒருவர் இருப்பார். அத்தகையவரை நீக்கி, அந்த அமைப்பைக் கற்பனை செய்வதே கடினமாக இருக்கும்.

சொந்த நலனைப் பற்றிக் கவலைப்படாமல், சுய விருப்பு வெறுப்புகளைப் புறம்தள்ளி, ஓய்வின்றி உழைப்பவர்கள் இருக்கிறார்கள். தனது இன்பத்தைப் பெரிதாக எண்ணி அலட்டிக்கொள்ளாமல், தன்னைச் சுற்றியிருப் பவர்களின் நலனுக்காக உழைப்பவன், தனது சுற்றத்தாரின் துன்பத்தைத் துடைத்துத் தாங்குகின்ற தூண் போன்றவன் என்கிறார் திருவள்ளுவர்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண் (திருக்குறள்: 615)

தனது வறுமைக்குக் காரணமாக ஒருவர் நேரம், காலம், சமூகச் சூழல், குடும்பப் பின்னணி என ஆயிரம் காரணங்களைக் கூறலாம்; ஆனால், முயலாமை மட்டுமே வறுமைக்குக் காரணம் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளுவர்.

சோம்பலில் மூதேவி வாழ்கிறாள். முயற்சியில் திருமகள் வாழ்கிறாள். திருமகள் நம்மிடம் நீங்காமல் குடியிருக்க வேண்டுமானால், தீவிர முயற்சியில் ஈடுபடுவது மிக முக்கியம். நல்வினைப்பயன் இல்லாத காரணத்தால், சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகாமல் தடுப்பது நம் கையில் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதை எதிர்கொள்ள வேண்டிய சரியான வழிவகைகளை ஆராய்ந்து, துன்பங்களை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது தவறு. முன்வினைப்பயனாகிய விதியின் காரணமாக ஒரு செயல் உரிய பலனைத் தராமல் போனாலும், முயற்சியானது ஒருபோதும் பலனளிக்காமல் போவதில்லை.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர் (திருக்குறள்: 620)

தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுபவர், மதியால் விதியை வெல்வர் என்கிறார் திருவள்ளுவர்.

பயணிப்போம்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick