திருஷ்டிகள் நீங்கும்... திருமணம் கைகூடும்!

கல்யாண பரிகாரம்!ப.ஆனந்தி

கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றது. 

அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன் மிகுந்த நீதிமானாக அரசுபுரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்துக்கு வந்து வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது.

இத்தலத்துக்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தியை மணம் புரிந்து அருளினாராம் பெருமாள். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கம் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இவ்வுலகுக்கு எம்பெருமான் சரம சுலோகத்தை அருளியதாக விவரிக்கிறது தலபுராணம்.

தினம் ஒரு கல்யாணம் என்பதால் பெருமாளுக்கு (உற்ஸவர்) நித்ய கல்யாணப் பெருமாள் என்று திருநாமம்; அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்று திருப்பெயர். கோயிலில் தனிச் சந்நிதி கொண்டிருக்கும் தாயார் கோமளவல்லித் தாயார் என்ற திருப்பெயருடன் அருள்புரிகிறார். 'திரு’ வை (லட்சுமியை) தன் இடபாகத்தில், பெருமாள் கொண்டுள்ளதால் திருஇடஎந்தை என்று பெயர் பெற்று, அதுவே மருவி இத்தலத்தின் பெயர் திருவிடந்தை என்றானது என்கிறார்கள்.

இங்குள்ள தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்க நாதர் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில்

நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு.

இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இப்பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்ஸவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

படங்கள்: ச.சந்திரமெளலி

 

பரிகார வழிபாடு

திருமணத் தடையால் வருந்தும் ஆண்களும், பெண்களும், இந்தத் தலத்துக்கு வந்து கல்யாண தீர்த்தத்தில் குளித்துவிட்டு, ஆசாரத்துடன் தேங்காய், பழம், கஸ்தூரி மாலைகள் இரண்டு மற்றும் வெற்றிலை பாக்குடன் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர், சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு ஆலய பிராகாரத்தை 9 முறை வலம் வரவேண்டும். வலம் முடிந்ததும் கொடிமரம் அருகில் வடக்கு நோக்கி படிந்து சேவித்து விட்டு, மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைக்கவேண்டும். பெருமாள் திருவருளால் விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக  பழைய மாலையுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick