இந்திரன் தந்த சந்தனம்!

 முருக வாகனங்கள்! 

முருகப்பெருமானுக்கு மயில் வாகனம் மட்டுமின்றி வேறு பல வாகனங்களும் உண்டு. கோவைக்கு அருகில் உள்ள மருதமலையில் குதிரை வாகனத்துடன் அருள்கிறார். அதேபோல் திருப்போரூரில் ஆடு, சுவாமிமலையில் யானை, சென்னிமலையில் சிங்கம், காங்கேயத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் மீன், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள முருகாஸ்ரமத்தில் நாகம், திருப்பரங்குன்றத்தில் ஐராவதம் எனும் யானையும் முருக வாகனங்களாகத் திகழ்கின்றன.

 கந்தனின் அருட்கரங்களில்...

கையில் வேலுடன் காட்சி தரும் முருகப்பெருமானின் திருக்கோலத்தை பல்வேறு தலங்களில் தரிசித்திருப்போம். சில திருத்தலங்களில் விசேஷமான பொருட்களை ஏந்தியபடி காட்சி  தருகிறான் கந்தன்.  

சங்கு சக்கரம் - கர்நாடக மாநிலம் அரிசிக்கரை சொர்ணபுரீஸ்வரர் கோயில்

கல்வேல் - திருச்செங்கோடு

கரும்பு தண்டம்  - செட்டிக்குளம் (பெரம்பலூர் மாவட்டம்)

கிளி  - கனககிரி

மாம்பழம்  -திருநள்ளாறு, திருப்பனையூர்

அட்சமாலை  -செம்பனார் கோயில்

வில்  - வில்லுடையான்பட்டு, திருவண்ணாமலை

திருவிடைக்கழி, சாயாவனம்

 விசேஷ திருக்கோலங்கள்

திருச்சி அருகே உள்ள உய்யக்கொண்டான் மலை உச்சியில் சிவபெருமானும், அடிவாரத்தில் முருகப்பெருமானும் அமர்ந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் அருளும் முருகப்பெருமான் வேட வடிவில் காட்சி தருகிறார். இவருக்கு வியர்வை துளிர்ப்பது விசேஷ அம்சம்.

செம்பொன்னார் கோயிலில் ஜடாமகுடத்துடனும், கரங்களில் அட்சமாலை ஏந்தியபடியும் தவக்கோலத்தில் அருள்கிறார் முருகன்.

திருவையாறு தலத்தில் வில்  அம்பு ஏந்தி வேட்டைக்குச் செல்லும் கோலத்தில் அருள்கிறார் முருகப்பெருமான்.

 சூரசம்ஹாரம்

   இல்லாத படைவீடு!

முருகன் சினம் தணிந்து தங்கிய இடம் திருத்தணி. இத்தலத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக அன்றைய தினம் முருகனுக்குப் புஷ்பாஞ்சலி நடைபெறும். வள்ளி, தெய்வானை தேவியர் தனித்தனிச் சந்நிதிகளில் அருளும் இந்தத் தலத்தில், இந்திரனால் அருளப்பட்ட சந்தனக்கல்லில் அரைத்த சந்தனம் மட்டுமே முருகனுக்குச் சாத்தப்படுகிறது. திருவிழா காலங்களில் மட்டுமே இதைப் பிரசாதமாக பக்தர்களுக்குத் தருகிறார்கள். இந்த சந்தன பிரசாதம் நோய்களுக்கான அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, சேலம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick