ஞானம் அருளும் வேதநாராயண பெருமாள்..!

புரட்டாசி தரிசனம்!எழிலரசன்

பூவராக பெருமாள், வேதநாராயண பெருமாள் என்னும் திருப்பெயர் கொண்டு ஞானம் அருளும் மூர்த்தியாக அம்புஜவல்லித் தாயாருடன் அருள்புரியும் திருத்தலம் வளையமாதேவி. காத்யாயன முனிவருக்காக இறைவன் காட்சி தந்த திருத்தலம் இது. கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வளையமாதேவி. 

குருவின் சாபம் பெற்ற காத்யாயன முனிவர், தம்முடைய சாபம் நீங்கவேண்டி இந்தத் தலத்துக்கு வந்து, பூவராக பெருமாளை பிரார்த்தித்துத் தவம் புரிந்தார். அவருடைய தவத்துக்கு இரங்கி, பகவான் அவருக்குக் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

முனிவரிடம், வேறு ஏதேனும் வரம் வேண் டுமா என்று பெருமாள் கேட்க, மகாலக்ஷ்மித் தாயாரே தமக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்று வரம் கேட்டார். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் மகாலக்ஷ்மியை மகளாகப் பெறலாம் என்று வழி சொன்னார் பெருமாள். அதன்படி, காத்யாயன முனிவர் பாவண தீர்த்தத்தில் நீராடி, அங்கேயே ஒரு குடிலை அமைத்துக் கொண்டு ஆவணி மாத பௌர்ணமி அன்று புத்திர காமேஷ்டி யாகத்தைத் தொடங்கினார். யாகத்தின் நிறைவில் மகாலக்ஷ்மித் தாயார் அழகிய குழந்தையாக முனிவர் முன் அவதரித்தாள்.

சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த அம்புஜ வல்லித் தாயார், தன் தந்தையின் இறைப்பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டாள். ஒருநாள், அங்கே தோன்றிய பூவராக பெருமாள், அம்புஜ வல்லியைக் கண்டதும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, பெண் கேட்டு பிரம்ம தேவரை காத்யாயன முனிவரிடம் அனுப்பினார். முனிவருக்கு இதில் சம்மதம் இல்லை. ஆனால், அம்புஜவல்லி பூவராக பெருமாளையே மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறவே, அவளை பெருமாளுக்குத் திருமணம் செய்து வைத்தார் முனிவர்.

சூரியனால் தமக்கு வழங்கப்பெற்றதும், பசி, நோய், மூப்பு போன்ற பிணி களை வரவொட்டாமல் தடுக்கக் கூடியதுமான

வளையல் ஆபரணத்தை மகளுக்குச் சீராகக் கொடுத்தார். அந்த வளையத்தை அம்புஜவல்லித் தாயார் அணிந்ததால், அவளுக்கு வளையன்மாதேவி என்ற திருப்பெயர் ஏற்பட்டது. ஊருக்கும் வளையமாதேவி என்ற பெயரே அமைந்தது.

ஆலயத்தில் கருவறையில் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக வேதநாராயண பெருமாள் திருக்காட்சி தருகிறார். மேலும், காத்யாயன முனிவர், சக்கரத்தாழ்வாரும் காட்சி தருகின்றனர்.

தீர்த்தம்: பாவண தீர்த்தம்.

விமானம்: பாவண விமானம்

தல விருட்சம்: புன்னை

திருவிழாக்கள்: சித்திரை மாதம் பிரம்மோற்ஸவமும், வைகாசி மாதம் திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெறு கின்றன.

சிறப்பு தினங்கள்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாத சனிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இங்குள்ள பாவண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை வழிபட நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும், சகல பாவங்களும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

படங்கள்: பா.பிரபாகரன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick