கூர்மபீட நாயகி திரிபுரசுந்தரி!

தேவி தரிசனம்...பிருந்தா

ந்தியாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் மாநிலம் திரிபுரா. இயற்கை எழில் நிறைந்த தெய்விக பூமியான திரிபுரா மாநிலத்தில் உள்ள நகரம் உதய்பூர். ஆதிகாலத்தில் உதய்பூர்தான் திரிபுரா மாநிலத்தின் தலைநகராக இருந்தது. அதன் காரணமாகவே திரிபுரா மாநிலத்தின் பெரும்பாலான பிரசித்தி பெற்ற கோயில்கள் உதய்பூரிலேயே அமைந்திருக்கின்றன. எண்ணற்ற நீர்நிலைகளுடன் பசுமை நிறைந்த உதய்பூரில் திரிபுரா மாநிலத்தின் முக்கியக் கோயிலாகத் திகழ்வது அருள்மிகு திரிபுரசுந்தரி கோயில். இந்தக் கோயிலின் காரணமாகத்தான் அந்த மாநிலத்துக்கே திரிபுரா என்ற பெயர் அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 திரிபுரசுந்தரி கோயில் பக்தர்களால் மாதா பாரி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் அருள்புரியும் திரிபுரசுந்தரி காளி வடிவினளாகக் காட்சி அருள்கிறாள். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்தத் தலத்தில்தான், தேவியின் கால் பகுதி விழுந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

கோயிலை நெருங்கும்போதே ஆன்மிக அதிர்வலைகள் பரவிக்கிடப்பதை நம்மால் பரவசத்துடன் அனுபவிக்க முடிகிறது. தேவியின் சந்நிதி உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது. படிகள் ஏறித்தான் செல்லவேண்டும். பிரதான வாயில் மேற்குப் பார்த்து அமைந்திருந்தாலும், வடக்கு பார்த்தும் ஒரு சிறிய வாசல் உள்ளது.  கோயின் பின்புறம் கல்யாண் சாகர் என்ற பெயருடன் திருக்குளம் உள்ளது.

கோயிலின் வெளிப்புறத் தோற்றம் நாற்கோண வடிவில் ஓர் ஆமையைப் போல் உள்ளதால், இதைக் கூர்ம பீடம் என்று சொல்கிறார்கள். கருவறை சதுர வடிவில் வங்காளத்து கட்டடக் கலையைப் பின்பற்றி அமைந்திருக்கிறது. கருவறையின் மேல் விதானம் புத்த ஸ்தூபியைப் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் தேவியின் கருவறைக்குள் அன்னை திரிபுரசுந்தரியை தரிசிக்கச் செல்கிறோம்.

கருவறையில் அருள்புரியும் திரிபுரசுந்தரி காளி வடிவினளாக இருந்தாலும் அவளுடைய விழிகளில் கருணையும் கனிவும் நிறைந்து நமக்கெல்லாம் அபயம் தர அழைப்பதுபோல் காட்சி தருகிறாள்.  சுமார் 6 அடி உயரத்தில் உரைகல்லினால் வடிக்கப்பட்ட விக்ரகம் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. ஜடாமகுடத்துடன் நாக்கைத் துருத்தியபடி காட்சி தரும் திரிபுரசுந்தரி, 13 தலைகளைக் கோத்த மாலையை கழுத்தில் அணிந்திருக்கிறாள்.

 

அவளுடைய மேல் இடது கையில் வாள் போன்ற ஆயுதத்தையும், கீழ் இடது கையில் ஓர் அரக்கனின் தலையையும் ஏந்தி உள்ளாள். மேல் வலது கரத்தால் வர முத்திரையும் கீழ் வலது கரத்தால் அபய முத்திரையும் காட்டி, நமக்கெல்லாம் அபயம் அளித்து, நம்முடைய பயங்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்கே தான் அங்கே கோயில் கொண்டிருப்பதாக நமக்கெல்லாம் சொல்லாமல் சொல்வதுபோல் காட்சி தருகிறாள் காளியாகிய அன்னை திரிபுரசுந்தரி. இங்குள்ள இறைவியை 16 வயது பெண்ணாக வழிபடுகிறார்கள். தேவியின் திருவுருவத்துக்கு அருகிலேயே தேவியின் சிறிய விக்கிரகமும் உள்ளது. அந்தக் காலத்தில் மன்னர்கள் போர்க்களத்துக்குச் செல்லும்போதும் வேட்டைக்குச் செல்லும்போதும் அங்கே வழிபடுவதற்காக இந்தச் சிறிய விக்கிரகத்தை கூடவே எடுத்துச் செல்வார்களாம். நித்ய கால பூஜைகள் தவறாமல் நடைபெற்று வரும் இந்தக் கோயிலில் தீபாவளி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகின்றனர். விழாவை முன்னிட்டு அங்கே பெரிய அளவில் சந்தையும் கூடுமாம்.

திரிபுரா மாநிலத்துக்குப் பெயர் வரக் காரணமாக இருந்ததாகச் சொல்லப்படும் அன்னை திரிபுரசுந்தரி தேவியை தரிசித்துத் திரும்பியபோது, அங்கேயே தங்கிவிட முடியாதா என்பதாக ஒரு மெல்லிய ஏக்கம் நம் மனதில் தோன்றவே செய்தது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick