தலம் ஒன்று... மூர்த்திகள் மூன்று!

திவ்ய தரிசனம்...மு.ஆதவன்

கேரள எல்லையை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்திருக்கிறது கூடலூர். தேனியில் இருந்து குமுளி செல்லும் வழியில், சுமார் 45 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகள் ஒன்றுகூடும் இடம் ஆதலால் கூடலூர் என்று பெயர் பெற்றதாம். மலைகளின் சங்கமத்தை மட்டுமல்ல மகாமூர்த்திகள் மூவரையும் இவ்வூரில் தரிசிக்கலாம். 

மனக் குழப்பங்கள் தீர்க்கும் உக்ர நரசிம்மர்

நரசிம்மர் உக்ரமாக  இரண்யகசிபுவை வதம் செய்யும் கோலத்தில் அருளும் தலங்கள் அபூர்வம். கூடலூர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், இப்படியான நரசிம்மரைத் தரிசிக்கலாம். சாளரம் போன்ற சதுர வடிவக் கல்லை பின்னணியாகக் கொண்டு காட்சி தருகிறார் இவர்.

சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ தினத்தன்று இவரை வழிபடுவது சிறப்பான பலன் தரும். முக்கியமாக, கடன் தொல்லை யில் இருந்து விடுதலை பெற, மனக் குழப்பம் தீர, எதிரிகள் குறித்த பயம் நீங்க வேண்டி, இவருக்கு தயிர் சாதம், பானகம் அல்லது காய்ச்சிய பாலை நைவேத்தியம் செய்து பிரார்த்திக்கிறார்கள். 48 நாட்கள் விரதமிருந்து வழிபடுவது சிறப்பு.

நல்லது வளர்க்கும் வசீகர பைரவர்

கூடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், ஊர் எல்லையில் வயல்வெளிகளுக்கு மத்தியில், கூடல் சுந்தர வேலவர் திருக்கோயிலில் அருள்கிறார் இந்த பைரவர். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம்.

பத்து திருக்கரங்கள், தலையில் அக்னி கிரீடம், இடுப்பில் நாகாபரணம் எனத் திகழும் இந்த பைரவருக்கு, வசீகர மூர்த்தி என்ற நாமகரணமும் உண்டு. தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபட்டால், தீமைகள் தேய்ந்து போகும்; வளர்பிறை அஷ்டமியில் வழிபட்டால் நல்லது வளரும் என்பது ஐதீகம். இந்த நாட்களில் இவரை வந்து வழிபட்டால் மனக்குழப்பங்கள், பிரச்னைகள், காரியத்தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள். அதேபோல், காரமான சாத வகைகளை நைவேத்தியம் செய்து வழிபட்டால், எதிரிகள் தொல்லைகள் நீங்குமாம். ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில், இந்தக் கோயிலுக்கு வந்து இவரை வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.

வளம் பொங்க அருள் செய்யும் பொங்கு சனீஸ்வரர்

கூடல் சுந்தரவேலவர் கோயிலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சீலையசாமி சிவன் கோயில். இந்தக் கோயிலில் பொங்கு சனிபகவானைத் தரிசிக்கலாம். நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில், தனிச் சந்நிதியில் காட்சியளிக்கும் இந்த சனீஸ்வரருக்கு எதிரில், அவரை வணங்கியபடி நளதமயந்தி தம்பதியினர் காட்சி தருகின்றனர். சனிக்கிழமைகள் அல்லது அவரவர் நட்சத்திர நாட்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, இவருக்கு எள் தீபம் ஏற்றி, கறுப்பு நிற ஆடை  சமர்ப்பித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதனால் வாழ்வில் நன்மைகள் பொங்கும், வளம் பெருகும் என்கிறார்கள்.

படங்கள்: சி.முருகேசன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick