கடம்பவன பூங்குயிலே!

அம்பிகை நாமங்கள்அருணவசந்தன்

ங்கிங்கெனாதபடி எங்கும் பரிபூரணமாக வியாபித்திருக்கும் அம்பிகை, தனக்கென தனியே உருவமும் பெயரும் இல்லாதவள். என்றாலும் அன்பர்கள் மீது கொண்ட கருணையால், அவள் பல வடிவங்களைத் தாங்கி வந்து அவர்களுக்கு அருள்பாலிக்கிறாள். புராணங்கள் அவளை ஆயிரக்கணக்கான திருப்பெயர்களால் அழைத்து மகிழ்கின்றன. 

'கெளரி’ என்பது அவளுக்குப் பொதுப்பெயராகும். பெருமான் அவளை 'உமா’ என்று அழைத்தார். இந்தத் திருப்பெயராலேயே அம்பிகை தேவாரத்துள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குறிக்கப்படுகின்றாள். கல்வெட்டுக்கள் அவளை 'உமா’ என்றும் 'உமாபட்டாரகி’ என்றும் அழைக்கின்றன.

சிவாலயங்களில் அவள் பல சிறப்புப்பெயர்களைக் கொண்டு எழுந்தருளியுள்ளாள். அம்பிகையின் திருக்கண்களின் வனப்பின் மகிமையை உணர்த்தும் விதமாக அங்கயற்கண்ணி, மலர்க்கண்ணி, வாள் நெடுங்கண்ணி என்று பல பெயர்களால் போற்றப்படுகிறாள். கூந்தலின் சிறப்பால் மலர்க்குழலி, பூங்குழலி, சுகந்த குந்தளாம்பிகை என்ற பெயர்களாலும், இடையழகால் கொடியிடை நாயகி எனும் திருப்பெயர் கொண்டும், அறம் வளர்த்ததால் அன்னபூரணி, அறம் வளர்த்த நாயகி முதலான பெயர்களாலும், மெல்லிய பூங்கொடி போன்றிருப்பதால் மரகதவல்லி, சினேகவல்லி, சுவர்ணவல்லி முதலான பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள்.

தென்குடித்திட்டையின் தல புராணத்தில், மகேஸ்வர வடிவமான சிவமூர்த்தியின் திருப்பெயர்களும் அவருக்கு இணையாக அமைந்த தேவியின் பெயர்களும் குறிக்கப் பட்டுள்ளன. அந்தத் திருநாமங்கள்...

லிங்கோத்பவர்  மோட்சப்பிரதாயினீ

திரிமூர்த்தி  வம்சவிருத்திப்பிரதாயினீ

கல்யாணசுந்தரர்  சர்வமங்களப் பிரதாயினீ

உமாசகாயர்  பார்யா செளக்யப் பிரதாயினீ

சுகாசனர்  தர்மார்த்தகாமமோட்சப்  பிரதாயினீ

கங்காதரர்  சர்வபாபப் பிராணாஸினீ

நடராஜர்  சம்பத்யோகப் பிரதாயினீ

சண்டேச அனுக்கிரகர்  மகாபாதகநாசினீ

வ்ருஷபவாகனர்  தர்மஸித்திப்ரதாயினீ

நீலகண்டர்  விஷதோஷப் பிராணஸினீ

ஹரிஹரர்  தர்மார்த்த தாயினீ

ஏகபாதர்  மகாரோகவிநாசினீ

அர்த்தநாரீசர்  சர்வசெளக்யப் பிரதாயினீ

தட்சணாமூர்த்தி  மேதாபிரக்ஞா பிரதாயினீ

சோமாவிநாயகர்  ஸர்வஸித்திப் பிரதாயினீ

சோமாஸ்கந்தர்   புத்ரசெளக்யப் பிரதாயினீ

சந்திரமெளலீசுவரர்  தனதான்யப் பிரதாயினீ

வீரபத்திரர்  சத்ருவித்வேஷ்ட விநாசினீ

காலசம்ஹாரர்  சர்வாரிஷ்ட விநாசினீ

காமந்தகர் யோகவிக்ன விநாசினீ

கஜாந்தகர் பராபிசாரசமனீ

திரிபுரசம்காரர் ஜன்மஜராம்ருத்யுவினாசினீ

பிட்சாடனர் யோகஷித்ப்ருத்த விமோஹினீ

சரபர் அரிப்பிராசினீ

பைரவர் ரட்சாகரீ

ஜலந்தரசம்ஹாரர் துஷ்டவிநாசினீ

இந்தத் திருநாமங்கள் தவிர, சிவாலயங்களில் சிவபெருமானோடு இணைந்த நிலையில் விளங்கும் அம்பிகையின் திருப்பெயர்களும் நம்மை சிலிர்க்கவைக்கும். அவை:

நடராசர்  சிவகாமி

தியாகராஜர் கமலாம்பிகை

சந்திரசேகரர் பாலாம்பிகை

சந்திரசேகரர் இந்துசேகரி

சோமாஸ்கந்தர் உமாதேவி (கொண்டி)

காசிவிசுவநாதர் விசாலாட்சி

ஏகாம்(ப)ரநாதர் காமாட்சி

சோமசுந்தரர் மீனாட்சியம்பிகை

வியாக்ரபுரீசுவரர் செளந்தராம்பிகை

அகத்தீசுவரர்  ஆனந்தவல்லி  (அகிலாண்டேஸ்வரி)

அண்ணாமலையார் உண்ணாமுலைநாயகி

ஜலகண்டேசுவரர் அகிலாண்டேசுவரி

பிட்சாடனர் மோகினி

கங்காதரர் மோகினி

மார்க்கசகாயர் மரகதவல்லி

பிரதோஷ நாயகர் அமுதீசுவரி

வீரபத்திரர் பத்ரகாளி

அகோரர் அகோரேசி

சூர்யேசுவரர் மங்களாம்பிகை

வைத்தியநாதர் தைல நாயகி

அமுதகடேசர் அபிராமி

காளத்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை

வேதகிரீசுவரர் திரிபுரசுந்தரி

ராமநாதர் பர்வதவர்த்தினி

அக்னீசுவரர் செளந்தரநாயகி

காமேசுவரர் காமகலா

நெல்லையப்பர் காந்திமதி

சங்கரலிங்கம் சங்கரகோமதி

வேதபுரீசுவரர் வேதவல்லி

சிவசைலநாதர் பரமகல்யாணி

ஞானேசுவரர் ஞானேசுவரி

கேதாரேசுவரர் கெளரி

ஏகாம்(ப)ரேசுவரர் காமாட்சியம்மன்

மகாருத்ரர்  ரோகசி

மேலும், திருத்தலங்களின் பெயர்களையும் தனது திருநாமத்தில் கொண்டு அம்பிகை அருள்பாலிப்பது உண்டு. மதுரையின் ஆதிப் பெயர் கடம்பவனம். ஆதலால், மீனாட்சி அம்மையை கடம்பவனப் பூங்குயில் என்றும் போற்றுவர். அதேபோல், திருமயிலை கற்பகாம்பிகையை புன்னைவனப் பூங்குயில் எனப் போற்றுவர். கோகிலம் என்பது குயிலாகும். இதையொட்டி திருமணஞ்சேரியில் வீற்றிருக்கும் அம்பிகைக்குக் கோகிலாம்பிகை என்பது பெயராயிற்று.

அறுபது ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 60 திருநாமங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. இத் திருநாமங்களைச் சொல்லி அம்பிகை மீது மலர் தூவுங்கள்.

அல்லல்கள் அலறும்; செல்வங்கள் அலரும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick