மகரந்த மகரிஷி வழிபட்ட மகாமேரு!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம். அங்கிருந்து 1 கி.மீ. தொலைவு பயணித்தால் தேப்பெருமாநல்லூரை அடையலாம். இங்கே, ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில், கல்வியையும் ஞானத்தையும் தந்தருளும் கல்வி தெய்வமாகத் திகழ்கிறாள் ஸ்ரீவேதாந்த நாயகி.   

ஈஸ்வரனின் திருச்சந்நிதியை நோக்கியவாறு வேதங்களை உச்சரிக்கும் பாவனையில் திகழ்வதால், அம்பாளுக்கு ஸ்ரீவேதாந்த நாயகி என்று திருநாமம்!

இவ்வாலயத்தில் பக்தர்கள் உமையவளைத் தரிசித்த பிறகே, சிவனாரைத் தரிசிக்கின்றனர். சிவனாருக்கு மலர்களால் அர்ச்சனை கிடையாது; ருத்ராட்சங்களால் அர்ச்சிக்கிறார்கள். அகத்தியரின் சாபம் காரணமாக யாழியின் முகம் பெற்ற மகரந்த மகரிஷி என்பவர், சாப விமோசனம் வேண்டி வழிபட்ட ஆலயம் இது. விதவிதமான மலர்களால் அர்ச்சித்து வழிபட்டும் விமோசனம் கிடைக்காத நிலையில், ஒருநாள் எதேச்சையாக ருத்ராட்சம் ஒன்று முனிவரின் கையில் இருந்து ஸ்வாமியின் மீது விழ, மறுகணம் மகரந்தரிஷியின் முகம் இயல்பு நிலைக்கு மாறியதாம். எனவே, ருத்ராட்ச வழிபாடு இங்கே முக்கியத்துவம் பெற்றது. அதேபோல், இந்த முனிவரால் பூஜிக்கப்பட்ட மகாமேரு ஒன்றும் அம்பாள் வேதாந்த நாயகி சந்நிதியில் உள்ளது. இந்த அம்பாளுக்கு வளையல் மாலை அணிவித்து வழிபடுவது விசேஷம். குறிப்பாக, புரட்டாசி நவராத்திரி புண்ணிய காலத்தில், வளையல் மாலை அணிவித்து அம்பிகையை மனமுருகி வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்!

தகவல், படங்கள்: இ.ராஜவிபீஷிகா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick