Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குகைக்கோயில் அழகன் !

பிரேமா நாராயணன்

வெண்மேகங்கள் தழுவ விண்ணைத் தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை எழிலுக்குத் தோரணமாய் அமைந்திருக் கிறது, தோரண மலை. யானையைப் போன்று காட்சியளிப்பதால் 'வாரண மலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரண மலை எனப் பெயர் பெற்றுவிட்ட இந்த மலையில், மாமுனிவர் அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்திருக்கிறார். 

அவருடைய சீடரான தேரையர் மகா சமாதி அடைந்ததும் இங்குதான். இன்றைக்கும் சித்தர்கள் பலர் அரூபமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது என்கிறார்கள். இத்தனைச் சிறப்புகளுக்கும் சிகரம் வைத்தாற்போன்று, தோரண மலையின் உச்சியில் ஒரு குகையில் கோயில் கொண்டிருக்கிறான் அழகு முருகன்.

வஞ்சகம் இன்றி வழிநெடுகிலும் பச்சைப் பசேலென பசுமை போர்த்திய பொதிகைமலைச் சாரல்...

குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இதன் உச்சியில் மட்டுமல்ல, அடிவாரத்திலும் முருகன் கோயில்கொண்டிருக்கிறான்.

அடிவாரத்தில் கோயிலுக்கான நுழைவாயில் போன்று அழகிய தோரண வளைவு நம்மை வரவேற்க, சுற்றிச் சூழ்ந்த மலைச் சிகரங்களும், முகம் தழுவிச் செல்லும் பொதிகைத் தென்றலும் நம் அகத்தை மகிழ்விக்கின்றன. மலை அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் ஸ்ரீ வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீ குருபகவான்,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் ஆகியோரைத் தரிசிக்கலாம். மேலும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் சுதைச் சிற்பங்களையும் காணலாம்.

மலையேற முடியாத அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக, மலைப்படிகள் துவங்கும் இடத்திலேயே ஸ்ரீ பாலமுருகன் எழுந்தருளியிருக்கிறார். அடிவாரத்தில் இருந்து 926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். வழியெங்கும் அபூர்வ மூலிகைகள்; அவற்றின் நறுமணத்தைச் சுமந்துவரும் காற்றை சுவாசித்தாலே போதும், நமது பிணிகள் யாவும் நீங்கிவிடும். முன்பு கரடுமுரடாக இருந்த பாறைகளை வெட்டிச் சீரமைத்துப் படிகள் அமைத்திருக்கிறார்கள். எனினும், சிறுவர்களையும் முதியவர்களையும் படிகளில் அழைத்துச் செல்லும்போது, மிகுந்த கவனம் தேவை.

உச்சியில் குகைக்கோயிலில் கிழக்கு நோக்கி ஞானசொரூபனாக எழில்கோலம் காட்டுகிறான் அழகு முருகன். இதழின் புன்னகையை தண்ணருள் பொங்கும் கண்களிலும் காட்டி, வேலும் மயிலும் உடனிருக்க அருளும் கந்தனைத் தரிசிக்கும்போது, 'யாமிருக்க பயமேன்?’ எனக் கேட்பதாகத் தோன்றுகிறது. அதற்கேற்ப நம் மனமும் 'குறையொன் றும் இல்லை நீயிருக்க’ எனத் துள்ளலோடு அவனைக் கொண்டாடி மகிழ்கிறது.

இந்தக் கோயிலுக்கான படிக்கட்டுகள், அடிவாரக் கோயில், மேலே இருக்கும் குகைக் கோயில், சுனைகள் புனரமைப்பு ஆகிய அத்தனை திருப்பணிகளையும் முருக பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்களின் உதவியோடு இக்கோயிலின் பரம்பரை அறக்காவலர் கே.ஆதிநாராயணன் நிறைவேற்றினார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோயிலின் நிர்வாகம், சீரமைப்பு மற்றும் நித்ய பூஜை ஆகியவற்றைத் தனது பொறுப்பில் எடுத்துச் சிரத்தையுடன் செய்துவருகிறார் இவர்.

''தோரணமலைக்கு அருகிலுள்ள முத்துமாலைபுரம்தான் எங்கள்  பூர்வீகம். எங்கள் தாத்தாவின் கனவில் 'தோரணமலை மேலே இருக்கும் சுனையின் ஆழத்தில் முருகன் சிலை ஒன்று கிடக்கிறது. அதை எடுத்து குகைக்குள் பிரதிஷ்டை செய்து வழிபடு’ என்று அசரீரி கேட்டதாம். அதன்படியே அவரும் சில ஆட்களுடன் சென்று, சுனை நீரை வெளியேற்றிவிட்டுப் பார்த்தால், கனவில் சொன்னது போலவே முருகன் சிலை கிடைத்தது. அந்த மூர்த்தியையே குகைக்குள் பிரதிஷ்டை பண்ணி வழிபட்டு வந்தார்கள். அந்தப் பரம்பரையில் இப்போது நானும், என் மகன் செண்பகராமனும் கோயில் பணிகளைக் கவனித்துக்கொண்டு வருகிறோம்!'' என்றார் ஆதிநாராயணன்.

''முருகன் அருளாலும் அன்பர்களின் உதவிகள் மூலமும் பல திருப்பணிகளைச் செய்திருக் கிறோம். இன்னும் பல பணிகள் செய்ய ஆசை.

இங்கே வாழ்ந்த அகத்தியர், கோரக்கர், தேரையர் ஆகிய சித்தர்களுக்கெல்லாம் சந்நிதிகள் எழுப்பி, வழிபாடு நடத்த உத்தேசித்திருக்கிறோம். எல்லாவற்றையும் அந்த முருகன்தான் கூட இருந்து நடத்திக்கொடுக்க வேண்டும்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் செண்பகராமன்.

திருக்கயிலையில் நிகழ்ந்த சிவபார்வதி திருக் கல்யாணத்தின்போது, தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் கூடிவிடவே, பூமியின் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தபோது, பூமியைச் சமன்படுத்த வேண்டி, சிவனாரின் கட்டளைப்படி தென்பாரதம் வந்த அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும்வழியில், இந்த மலையின் அழகில் லயித்து, சில காலம் இங்கே தங்கினாராம். மாபெரும் சித்த மருத்துவரான அகத்தியரின் மருத்துவ அறிவு பல நூல்களாக உருவெடுத்ததும் இங்குதானாம். அகத்தியர் இங்கு தங்கியிருந்ததோடு, அபூர்வ மூலிகைகள் நிறைந்த இந்தப் பகுதியில்   பெரிய அளவில் மருத்துவச்சாலை நிறுவி, பலருக்கும் வைத்தியம் செய்த சான்றுகளும் உண்டு என்கிறார்கள். அவருடைய சீடரான தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில்தான் என்று நூல்குறிப்புகள் பலவும் கூறுகின்றன.

இத்தகு மகிமைகள்மிகு தோரணமலைக்கு ராமபிரான் வந்து அகத்தியரை வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதி 'குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பரவியதும் இந்தத் தோரணமலை அழகனைத்தான்.

குகைக்கோயிலில் தினமும் உச்சிக் கால வேளை பூஜை நடை பெறுகிறது. ஆண்டுதோறும் தைப்பூசமும் வைகாசி விசாகமும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் இங்கே மிக விசேஷம்! சுத்துப்பட்டு ஊர் மக்களும் வெளியூர் பக்தர்களும் அன்றைய தினத்தில் திரண்டு வந்து தரிசனம் செய்கிறார்கள். தோரணமலை முருகனை வணங்கினால் தடைப்பட்ட மற்றும் தள்ளிப்போகும் திருமணங்கள் நடக்கும்; புத்திரபாக்கியம், வேலை, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பல பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை.  

நீங்களும் ஒருமுறை தோரண மலைக்கு வந்து பாருங்கள். உங்கள் துன்பங்கள் யாவும் தொலைந்து, சகல வளங்களும் பெற்று, உங்கள் வாழ்க்கை செழிக்கும்; முருகன் அருளால் உங்கள் தலைமுறை தழைக்கும்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்


அற்புத சுனைகள்!

தோரணமலை முழுவதிலும் சுமார் 64 சுனைகள் இருக்கின்றன. அடிவாரத்திலேயே இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. இந்தச் சுனைகளில் நீராடினால் சரும நோய்கள் நீங்குவதுடன், பல வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல, கடும் கோடைகாலத்திலும் வற்றாத இந்த ஜீவ சுனைகளில், ஒவ்வொரு சுனையின் நீரும் ஒவ்வொரு சுவையுடன், மருத்துவக்குணமும் கொண்டிருப்பது இயற்கையின் அற்புதம்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
அமாவாசையில் அனுமன் தரிசனம் !
பூஜை, ஆராதனைகளால் என்ன பலன் ?
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close