ஆனைமுகன் அருளும் ஆலயங்கள் !

யிலாடுதுறைகும்பகோணம் வழியில், ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது குடிகிராமம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார். தேளுக்கு இருப்பதுபோல் வரிவரியாகக் கோடுகள் கொண்டவர் ஆதலால், இவருக்கு இப்படியொரு திருப்பெயர்! விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து ஈசனையும் பிள்ளையாரையும் வழிபட்டால், இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளியம்மன் கோயிலின் அருகே உள்ளது பழிக்கு அஞ்சிய விநாயகர் கோயில். ஏதேனும் தவறு செய்துவிட்டவர்கள். தவற்றுக்கு வருந்துவதுடன், இங்கு வந்து இந்த பிள்ளையாரை வழிபட்டால், மேற்கொண்டு வீண் பழிகள் நேரிடாமல் காப்பதுடன், குற்ற உணர்வை தவிர்த்து மன ஆறுதல் தருவார் என்பது நம்பிக்கை.

தர்மபுரி  காவேரிப்பட்டினம் அருகில் உள்ள பெண்ணேசுர மடம் எனும் ஊரில் குழந்தை விநாயகரைத் தரிசிக்கலாம். இவருக்கு கிரீடம் கிடையாது.

தஞ்சைக்கு அருகில் உள்ள கூத்தூரில் அருளும் பிள்ளையாருக்கு ஸ்ரீசாஸ்தா விநாயகர் என்று திருப்பெயர். ஆதியில் இங்கே விநாயகர் கோயில் மட்டுமே இருந்ததாம். ஒருமுறை, வணிகர்கள் சிலர் மலையாள தேசம் சென்று ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை கொள்முதல் செய்துகொண்டு, கூடவே பூரணை புஷ்கலை சமேத ஐயனார் சிலையையும் எடுத்துவந்தனர். அவர்கள் இந்த ஊரில் தங்கிவிட்டு மறுநாள் கிளம்பும்போது ஐயனார் சிலையை மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். ஐயனார் தாம் தங்குவதற்கு இடம் அளிக்குமாறு விநாயகரிடம் வேண்டிக்கொள்ள, விநாயகரும் சற்று நகர்ந்து இடம் கொடுத்ததால், அவருக்கு சாஸ்தா விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

லிங்கம் போன்ற பாணத்தில் கணபதி உருவம் கொண்ட விசேஷ திருக்கோலத்தை தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயிலில் தரிசிக்கலாம்.

திருநெல்வேலி காரையாரில் உள்ள அருவிக் கரையில், தம் அன்னையரான கங்காதேவி மற்றும் பார்வதிதேவியுடன் அருளும் விநாயகரைத் தரிசிக்கலாம்.

கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் உள்ள விநாயகருக்கு கணக்கு விநாயகர் என்று திருநாமம். ஆலயத் திருப்பணியை மேற்கொண்ட கணக்குப்பிள்ளையிடம் மன்னன் சந்தேகப்பட்டு கணக்கு கேட்டு கெடு விதித்தான். அதுவரையிலும் கணக்கு எழுதி வைக்காத கணக்கர் விநாகரிடம் வேண்டிக்கொள்ள, துல்லியமான கணக்கை அறிவித்தவராம் இந்தப் பிள்ளையார்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில், நவகிரக சந்நிதியில் நெல்லிக்காய் பிள்ளையார் அருள்கிறார். நெல்லிக்காய் மாலை அணிந்திருப்பதால் இப்படியொரு பெயர். இவருக்கு நெல்லிக்காய் மாலை அணிவிக்கும் பழக்கம் வெகு காலமாய் உள்ளது.

காரைக்குடியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள இலுப்பைக்குடி ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 1 செ.மீ. அளவே உள்ள மிகச்சிறிய விநாயகரைத் தரிசிக்கலாம்.

பேரளம் அருகேயுள்ள கீழமாங்குடி எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ மங்களசித்தி விநாயகர். மூலவர் விநாயகரின் வயிற்றுப் பகுதி முதியவர்களுக்கு இருப்பது போல சதை மடிப்புடன் காணப்படுகிறது. இவர், அபிஷேக வேளையில் முதியவர் தோற்றத்திலும், முழு அலங்காரத்தில் இளமையான தோற்றத்திலும் காட்சி அளிக்கிறார். திருவிழாக் காலங்களில் அபிஷேகம் முடிந்து, அலங்காரம் செய்ததும், இவரது திருமேனியில் வியர்வை அரும்புவது அதிசயம்!

கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில், ஸ்ரீ ஜுரஹர விநாயகரைத் தரிசிக்கலாம். கையில் குடையுடனும், தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் அருளும் இவரை வழிபட்டால், பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

சேலம் கந்தாஸ்ரமத்தில், பஞ்சமுக விநாயகரைத் தரிசிக்கலாம். இரண்டு முகங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகவும், மற்ற மூன்று முகங்கள் பக்கவாட்டு திசைகளை நோக்கியும் அருள்கின்றன.

கும்பகோணம் ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயிலில் விநாயகர், சங்கு, சக்கரங்கள் ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் கோயில் கொண்டிருக்கிறார் மிளகுப் பிள்ளையார். இவருடைய திருமேனியில் மிளகாய் அரைத்துத் தடவி அபிஷேகம் செய்தால், விரைவில் மழை பொழியும் என்பது நம்பிக்கை.

திருவையாறு அருகேயுள்ள திருவேதிக்குடி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில்,ஸ்ரீ வேத விநாயகர் சந்நிதி உள்ளது. இவர், சற்றே செவியைச் சாய்த்து வேதம் கேட்கும் கோலத்தில் அருள்வதால், செவிசாய்த்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் உள்ள மலைக் கோயில் விநாயகர் சந்நிதியும், பிள்ளையார்பட்டி போலவே மலையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இங்குள்ள பிள்ளையாரும் ஸ்ரீ கற்பக விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார். கி.பி. 7ம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.

நாகதோஷம் நீக்கும் சர்ப்ப விநாயகர், நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் சிவாலயத்தில், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி ஸ்ரீ கோமதி அம்மன் சமேதராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி சந்நிதியின் கன்னிமூலையில் அருள்புரியும் விநாயகர் அதிசயமானவர். பொதுவாக விநாயகர் கரங்களில் பாசமும், அங்குசமும் இருக்கும். ஆனால் இந்த விநாயகர் கரங்களில் ஒரு கையில் பாசமும், இன்னொரு கையில் நாகப்பாம்பும் இருக்கின்றன. இந்த பாம்பு அவருடைய கால்கள் மற்றும் இடுப்பைச் சுற்றியிருக்கிறது. இப்படியான அமைப்பில் அருளும் விநாயகரை வேறெந்த தலத்திலும் காண்பதரிது. இந்த விநாயகரை வழிபடுவதன் மூலம் அனைத்துக் கிரக தோஷங்களும், தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சிவன் கோயிலில் உள்ள விநாயகர் வலது கையில் எழுத்தாணியையும், கையேட்டையும் வைத்துக் கொண்டு எழுதுவது போன்று காட்சி அளிக்கிறார். இங்கு வருவோரை அவர் கணக்கெடுக்கிறார் என்பதும், அவரைத் தரிசித்து விட்டுத்தான் மற்ற மூர்த்திகளைத் தரிசிக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.

ஆந்திர மாநிலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர், ஒரு கிணற்றுக்குள் இருந்து கிடைத்தவர். கிணற்றின் மேல் மேடை ஒன்றில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்தக் கிணற்று நீர்தான் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு பொய்ச் சத்தியம் செய்தால், 3 மாதங்களுக்குள் விநாயகரால் தண்டிக்கப்படுவார்கள் என்பது ஐதீகம்.

மகாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கு அருகில் உள்ள விநாயகர் திருத்தலம் சித்தடேக். இங்குள்ள பீமா நதிக்கரையில், குன்றின் மீது அருள்கிறார் சித்தடேக் விநாயகர். இக்கோயிலை திருமாலே கட்டியதாகச் சொல்வர். திருமாலுக்கு விநாயகர் ஸித்தி தந்த தலம் என்பதால் 'ஸித்தடேக்' என்று பெயர். இவரது நெற்றியில் பச்சைக் கல்லும், தொந்தியில் வைரக்கல்லும் பதித்துள்ளனர். இந்தக் கோயிலின் வாயிலில், விஷ்ணுவின் துவாரபாலகரான ஜயவிஜயர் அருள்வது குறிப்பிடத்தக்கது.

காசியில் சத்தாவரணத்தில் 56 விநாயக மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த விநாயகர்களை ஏழு ஆவரண நிலைகளாகப் பிரிந்து வழிபடுகின்றனர்.

நேபாளத்தில் ஸ்ரீ சூரிய விநாயகர் கோயில் உள்ளது. தினமும் சூரியனின் முதல் கதிர், இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் விக்கிரகத்தின் மீது விழுகிறது.

தொகுப்பு: கே.என்.மகாலிங்கம், வசந்தா மாரிமுத்து, எஸ்.ராஜம், ஆர்.பத்மப்ரியா,

ஆர்.ராஜலட்சுமி, டி.பூபதிராவ், எஸ்.ஸ்ருதி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick