சிவமகுடம் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சித்திரைத் திங்களின் பின்பாதியில், வான சஞ்சாரத்தில் உறையூர்  மீதான தமது பார்வையை வியாழ பகவான் விலக்கிக் கொள்ள, அங்காரகனின் ஆதிக்கம் உச்சம் பெற்றுவிட்டிருந்ததை உணர்த்தும்விதமாக, அந்த நாளின் மாலை சந்தியாகாலத்தில், தனது அந்திக் கிரணங்களால் உரகபுரத்தையும், அதை சுற்றிப் பாயும் பொன்னியையும்கூட செந்நிறமாக்கிவிட்டிருந்த பகலவன், மெள்ள மெள்ள தன் செங்கதிர்களைச் சுருக்கி, மேற்கிலும் மேகத் திரையிலுமாக மறைந்துவிட்டிருந்தான்.

அப்போதும் தலைகாட்டாமல், கோடை மழையின் காரணமாக சில நாழிகைகள் கழித்தே முகம் காட்டிய பிறைச் சந்திரன், அன்று உறையூரில் நிகழவிருக்கும் - தமிழக சரித்திரத்தில் மிக முக்கியமான திருப்பத்தைத் தரப்போகும் சம்பவங்களை இன்னும் அருகிலிருந்து காணும் ஆசையுடன், ஆயிரமாயிரம் உருவெடுத்து தரையிறங்கிவிட்டது போல், அந்த நந்தவனத்துச் செடிகொடிகளில் தங்கிய நீர்த் திவலைகளில் பிரதிபலித்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தான்.

இங்ஙனம், பெரும் மாறுதலைக் காணும் ஆவலுடன் காலம் காத்திருப்பதை அறியாத இளவரசி மானி, நீர்த் திவலைகளில் பிறைகளைக் கண்டதும் பிறைசூடியப் பெருமானையே நேரில் கண்டுவிட்டதுபோல், மனம் நெகிழ்ந்து வாகீசரின் பதிகங்களைப் பாடத் துவங்கினாள். இப்படி நீண்ட நெடுநேரம் பாடிக் களித்தும் அரண்மனை அறைக்குத் திரும்பினாள் இல்லை; நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய இரவு மலர்களின் அழகில் மனதைப் பறிகொடுத்தவள், மெய்ம்மறந்து அவற்றை ரசிப்பதிலேயே நேரத்தைப் போக்கினாள். அதே நிலையில் ஒரு செடியின் அருகில் சென்று, அதன் மலர்களில் ஒன்றை பறிக்க முற்பட்டபோதுதான், அவளுடைய பின்புறத்தில் இருந்த புதரை விலக்கிக் கொண்டு, கரத்தில் குறுவாளுடன் அவளை நோக்கிப் பாய்ந்தது ஓர் உருவம்.

சட்டென்று சுதாரித்து விலகிய மானி, குறுவாளைப் பற்றியிருந்த கையைப் பிடித்து வளைத்து அந்த உருவத்தை அந்தரத்தில் ஒரு சுழற்று சுழற்றி தரையில் வீசினாள். எதிர்பாராத அந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன உருவம், பதில் தாக்குதல் நிகழ்த்தியதா என்றால், இல்லை! தரையில் கை  ஊன்றி மெள்ள எழுந்து அமர்ந்த உருவம், தனது வலது முழங்கையிலும் காலிலும் ஏற்பட்ட சிராய்ப்பு களால் உண்டான எரிச்சலைத் தாங்காமல் சிறிது சிணுங்கவும் செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்