ஊர்வலம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பொன் நகரம்... காஞ்சிபுரம்!

மிழகத்தின் மிகவும் தொன்மையான நகரம் காஞ்சி. 2000 வருடங் களுக்கு முன்பு காஞ்சி, ‘கச்சிப்பேடு’ என்று அழைக்கப்பெற்றதாக இலக்கியங் கள் கூறுகின்றன. காஞ்சி என்றால் பொன் என்று பொருள். பொன்னாலான நகரம் என்னும்படி செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நகரம் காஞ்சி.

* வட இந்தியாவில் இருந்த நாலந்தா பல்கலைக் கழகத்துக்கு இணையாக காஞ்சி நகரம் பல கலைகளின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. அதனால், காஞ்சிக்கு ‘கடிகாஸ்தானம்’ என்ற பெயரும் உண்டு. சீன தேசத்தைச் சேர்ந்த யுவான் சுவாங் காஞ்சியைப் பற்றிக் குறிப்பிடுகையில், காஞ்சி மாநகரம் 6 மைல் சுற்றளவுக்கு பரந்து இருந்தது என்றும், மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதாகவும் சிறப்பித்துக் கூறி இருக்கிறார்.

* பல்லவர்கள் ஆட்சியில் காஞ்சி நகரம் விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, ஜைன காஞ்சி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. தற்போது விஷ்ணு காஞ்சி- சின்ன காஞ்சிபுரம் என்றும், சிவ காஞ்சி- பெரிய காஞ்சிபுரம் என்றும், ஜைன காஞ்சி- திருப்பருத்திக்குன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

* மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு, பௌத்த நெறிகளைக் கற்றறிந்தாள். அவள் காஞ்சியில் புத்தபீடிகை அமைத்து, அமுதசுரபி மூலம் பசிப் பிணி போக்கிய நிகழ்ச்சி மணிமேகலை காப்பியத்தில் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது.

* விசைத் தறிகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும்கூட கைத்தறியில் நெசவு செய்யப்படும் ‘காஞ்சிப் பட்டு’ உலகத்தரம் வாய்ந்தது.

* பேரறிஞர் அண்ணா பிறந்து வளர்ந்த நகரம் - காஞ்சிபுரம். அவர் வசித்த வீடு இன்று நினைவிடமாகப் போற்றப்படுகிறது.

* காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த மருத்துவமனையில்தான் எம்.எஸ்ஸி மருத்துவ இயற்பியல் கல்வி வழங்கப்படுகிறது.

* பஞ்சபூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலம் கச்சி ஏகம்பம்.  அம்பிகை பூஜை செய்து தழுவப் பெற்ற சிவலிங்கம், ‘தழுவக் குழைந்த கம்பன்’ எனப் பெயர் பெற்றார். மாவடியின் கீழ் அமர்ந்த இறைவனாதலால், ஏகம்பன் ஆனார். திருவொற்றியூரில் பார்வை இழந்த சுந்தரர், இங்கு இடக்கண்ணில் பார்வை வரப் பெற்றார்.

* கச்சிப்பேட்டு இளந்தச்சனார், பெருந்தச்சனார், காஞ்சிக் கொற்றனார், நன்னாகையார் போன்றோர் இங்கு வாழ்ந்த சங்ககாலப் புலவர்கள் ஆவர்.

* இங்குள்ள நான்கு ராஜவீதிகளும் கரிகால் சோழனால் அமைக்கப் பெற்றவை.

 * பஞ்சுப்பேட்டை அருகில் உள்ளது ஓணகாந்தன் தளி. இங்குதான் சுந்தரர் தேவாரம் பாடி, சிவபெருமான் அருளால் புளிய மரத்தில் இருந்து பொன் காய்கள் கிடைக்கப் பெற்றார்.
 யானை வடிவுடைய  விநாயகர், சிவபூஜை செய்த திருக்கோயிலான திருக்கச்சி அனேகதங்காவதம் சுந்தரரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.

* காஞ்சிபுரத்தில் மட்டுமே  திருக்கச்சி அத்திகிரி, அட்டபுயகரம், திருத்தண்கா(தூப்புல்), திருவேளுக்கை, திருநீரகம், திருப்பாடகம், திருநிலாத்திங்கள்துண்டம், திருஊரகம், திருவெஃகா, திருக்காரகம், திருக்கார்வனம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம், திருப்பரமேஸ்வர விண்ணகரம் என 14 வைஷ்ணவ திவ்வியதேசங்கள் அமைந்துள்ளன.

* ‘அத்திகிரி’ எனப்படும் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதர் என்று அழைக்கப்படும் அத்திமரத்தில் செய்யப்பட்டுள்ள பெருமாள், கோயில் திருக்குளத்தில் மூழ்கி இருப்பார். இவரை 40 வருஷங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் 10 தினங்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படுவார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்