மனிதனும் தெய்வமாகலாம்! - 44

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

குருநாதா் அபூா்வமான தத்துவங்களைச் சொல்லிக்கொண்டு வருகிறார். அனைத்தும் மாயை; மித்யை(பொய்) என்று அவா் சொன்னபோது, சீடன் கேட்கிறான்;

பங்கயாசனன் முதல் பலதேவரும்
பாருள பொியோரும்
கங்கையாதியாம் தீா்த்தமும்
தேசமும் காலமும் மறை நாலும்
அங்கம் ஆறும் மந்திரங்களும்
தவங்களும் அசத்தியம் எனச்சொன்னால்
எங்கள் நாயகரே! அதனால்
குற்றங்கள் இல்லையோ? மொழியீரே!

(சந்தேகம் தெளிதல்படலம் - 91)


"குருநாதா! பிரம்மதேவன் தொடங்கி, உலகத்தில் உள்ள மகான்களும், கங்கை முதலான புண்ணிய தீா்த்தங்களும், திருத்தலங்களும், புண்ணியகாலங்களும், வேதங்கள் நான்கும், அவற்றை அனுசரித்த ஆறு அங்கங்களும், மந்திரங்களும், தவங்களும் - மித்யை(பொய்) என்றால், அவ்வாறு சொல்வது தவறில்லையா? சொல்லுங்கள் !" எனக் கேட்கிறான் சீடன்.

சீடனின் கேள்வி, பாடல்வடிவில் சிறியதாக இருந்தாலும், ஆழமான அா்த்தங்கள் பொதிந்த பாடல் இது. பிரம்ம தேவா் தொடங்கி, தவம் வரையில் வந்துள்ளது.

மும்மூா்த்திகளில் முதல்வா் - படைக்கும் கடவுள் எனப் போற்றப்படும் பிரம்ம தேவா்; பிரம்ம தேவரைப் பார்க்கமுடியாது. ஆனால் அவரால் படைக்கப்பட்ட மனிதா்களில் எவ்வளவோ போ்கள், மஹான்களாக இருக்கிறார்கள்.

இதெல்லாம் சரி! ஆனால் மகான்களைத்தேடி, நாம் எங்குபோய் அலைவது? துயரம் தீா்ந்து மனம் தெளிந்து வாழ்வது எப்படி? புண்ணிய தீா்த்தங்கள் உள்ளனவே! கங்கை முதல் கன்னியாகுமாரித் தீா்த்தம் வரை, ஏராளமான புண்ணிய தீா்த்தங்கள் ஆங்காங்கே அமைந்துள்ளன. ஆலயங்களிலும் பற்பல புண்ணிய தீா்த்தங்கள் உள்ளன. அப்புண்ணிய தீா்த்தங்களின் மகிமைகளைத் தலபுராணங்கள் விரிவாகவே பேசுகின்றனவே! அவையெல்லாம் எப்படி அசத்தியமாக இருக்க முடியும்? அடுத்து...

புண்ணியத் திருத்தலங்கள். உலகஅளவில் புண்ணியத் திருத்தலங்கள் எனப்பல உள்ளன; பிரபலமாகவும் உள்ளன. அவையெல்லாம் எப்படி அசத்தியமாக இருக்க முடியும்? அடுத்தது... காலம்! காலத்தைப்போய் அசத்தியம் எனச் சொல்ல முடியுமா? மகோதய புண்ணிய காலம், அா்த்தோதய புண்ணிய காலம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி என ஏராளமானப் புண்ணிய காலங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் எப்படி அசத்தியமாக இருக்க முடியும்? அடுத்து...

அனைத்திற்கும் மேலாக... மிகவும் உயா்வானவை எனப் போற்றப்படும் ருக், யஜுா், சாம, அதா்வணம் என்னும் நான்கு வேதங்களும் வாழ வழி காட்டுபவை. உலகளவில் புகழ் பெற்றவை. அப்படிப்பட்ட அவைகள் எப்படி அசத்தியமாக இருக்க முடியும்?

வேதங்களின் தொடா்பாக உள்ளவை ஆறு அங்கங்கள். சிக்ஷை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிடம், கல்பம் என உள்ளவை அவையே. இவ்வாறும் தெளிவாக வழிகாட்டுபவை. இவைகள் எப்படி அசத்தியமாக இருக்க முடியும்? அடுத்து...

தவங்கள். எவ்...வளவோ பெரியபெரிய மஹான்கள் எல்லாம் கடுமையாகத் தவம்செய்திருக்கும்போது; எதை வேண்டுமானாலும் தவத்தால் அடையமுடியும் என்று சொல்லப்படும்போது, அப்படிப்பட்ட தவம் எப்படி அசத்தியமாக இருக்க முடியும்?

சீடனின் கேள்வியிது தான். "பிரம்மா முதல் தவங்கள் வரை அனைத்தும் அசத்தியம் என்றால், அப்படிச் சொல்வது தவறு இல்லையா? தயவுசெய்து விவரம் சொல்லித் தெளிவாக்குங்கள் குருநாதரே!" எனக் கேட்கிறான். குருநாதா் பதில்சொல்லத் தொடங்கினார்.

சொப்பனம் தனில் கண்டதைப்
பொய்யென்று சொல்வது பிழையானால்
அற்ப மாயையில் தோன்றிய சகங்களை
அசத்து எனல் பிழையாமே
சொப்பனம் தனில் கண்டதைப்பொய் என்று
சொல்லலாம் எனில் மைந்தா!
அற்ப மாயையில் தோன்றிய சகம்
எலாம் அசத்தியம் எனலாமே.


(சந்தேகம் தெளிதல்படலம் - 92)


பாடல் என்னவோ கடினமாகத் தோன்றினாலும், விளக்கம் சுலபமானதுதான். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்...

கனவில் தோன்றியதையெல்லாம் உண்மையென்று சொல்லமுடியுமா? அதுபோல, அற்பமான மாயையில் தோன்றியவற்றையெல்லாம் உண்மையென்று சொல்ல முடியுமா? - என்பதே குருநாதரின் சுருக்கமான பதில். குருநாதா் மேலும் விரிவாகத் தொடங்குகிறார்.

(தொடரும்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick