முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னத்தில் இருந்து கேந்திரம் (1, 4, 7, 10-ம் வீடுகள்), த்ரிகோணம் (1, 5, 9-ம் வீடுகள்), அஷ்டமம் (8-ம் வீடு)- இவற்றில் பாப கிரகங்கள் (வெப்ப கிரகங்கள்) இருக்கக்கூடாது. லக்னாதிபன், குரு இருவரும் லக்னத்தில் இருந்து கேந்திரத்தில் இருக்கவேண்டும். இப்படி யான அமைப்பு ஜாதகத்தில் இருந்தால், அவன் உலகவியல் சுகபோகங் களைச் சுவைத்து மகிழ்ந்து, நீண்ட ஆயுளுடன் பல செயல்பாடு களால் உலக நன்மையை வளர்த்து, பிறவிப் பயனை அடைவான் என்கிறது ஜோதிடம். அவனது முற்பிறவி கர்மவினை, அவனை முழு மனிதனாக்கி பெருமையுடன் விளங்கும் தகுதியை அளித்து நிறைவுற்றது என்று சொல்லலாம்.

கர்மவினையானது துயரத்தையும் அளிக் கலாம் மகிழ்ச்சியையும் அளிக்கலாம். நன்மை, தீமைகளைக் கலந்தும் அளிக்கலாம். அவனது முற்பிறவியின் செயல்பாட்டின் தரம் கண்ணுக்குப் புலப்படாது. அவன் தோன்றும் வேளையில் இருக்கும் கிரக அமைப்பு, அவனது  முற்பிறவியின் தரத்தைச் சுட்டிக்காட்டும்.

1, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வீடுகள் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியுறச் செய்யும் தகுதி இருப்பவை. அங்கு பாப கிரகங்கள் இல்லாமல் இருப்பது, அவன் அனுபவிக்கவேண்டிய மகிழ்ச்சியில் இடையூறு இல்லை என்பதை வரையறுக்கிறது.

லக்னாதிபன், குரு இந்த இருவரும் கேந்திரத்தில் இருப்பது, அவனது மகிழ்ச்சியை உணரவைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பிறந்தவேளைக்கு (லக்னம்) கேந்திரம் என்ற தகுதியும், த்ரிகோணம் என்ற தகுதியும் உண்டு. 1, 5, 9 த்ரிகோணத்தில் 1 லக்னம். 1, 4, 7, 10 கேந்திரத்தில் 1 லக்னம் இந்த இரண்டு தகுதிகள் லக்னத்துக்கு உண்டு. இரண்டு தகுதியை உடையவன், யோக காரகனாக மாறிவிடுவான். நன்மையை நம்மோடு இணைப்பவனாக மாறி விடுவான் என்று பொருள். எந்த கிரகமாக இருந்தாலும், கேந்திரத்திலும் த்ரிகோணத்திலும் அவனுக்கு இடமிருந்தால், அவன் நல்லவனாக செயல்பட்டு, அவனது கர்மவினைக்கு இணங்க, அதிலும் சுபபலனை முழுமையாகச் சுவைத்து மகிழவைப்பான். இது ஜோதிடத்தின் கோட்பாடு.

கடக லக்னத்துக்கு செவ்வாய் யோககாரகன். அவன் வெப்ப கிரகமானாலும், அவன் அமர்ந்த இடம் கர்மவினையின் நல்ல பலனை சுவைக்க வைப்பவனாக மாற்றிவிடுகிறது. செவ்வாய் (விருச்சிகம் 5-ம் இடம், மேஷம் 10-ம் இடம்). அதற்கு அதிபதியும் செவ்வாய். த்ரிகோணத்திலும் (5-ல்) செவ்வாய்க்கு இடம் உண்டு; கேந்திரத்திலும் (10-ல்) இடம் உண்டு என்பதால், அவனை ‘யோக காரகன்’ எனும் தகுதி உடையவனாகச் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.

சிம்ம லக்னத்துக்கும் செவ்வாய் (4-ம் வீடு விருச்சிகம்) கேந்திரத்துக்கும் உடையவன்; (9-ம் வீடு மேஷம்) த்ரிகோணத்துக்கும் உடையவன். அவனுக்கு அந்தத் தகுதியுண்டு. மகர லக்னத்துக்கு சுக்கிரன் யோக காரகனாக மாறுவான். கும்ப லக்னத்துக்கு அவன் யோககாரகனாக இருப்பான். மகர லக்னத்துக்கு 5-க்கு உடையவன் சுக்கிரன் (ரிஷபம்); 10-க்கு உடையவன் சுக்கிரன் (துலாம்). கும்பத்துக்கு 4-க்கு உடையவன் சுக்கிரன்; 9-க்கு உடையவனும் சுக்கிரன். அங்கு யோககாரகனாக கேந்திரத்தில் ஒன்றிலும் த்ரிகோணத்தில் ஒன்றிலும் அதிபதியாக இருக்கும் தகுதியை வைத்து, அவன் அளிக்கும் பலனை இறுதி செய்கிறது ஜோதிடம்.

லக்னதிபதிக்கு வெப்ப கிரகமானாலும் தட்ப கிரகமானாலும் 1 என்கிற ஸ்தானம் கேந்திரமாகவும் த்ரிகோணமாகவும் அமைவதால், லக்னாதிபதியாக வருபவன் தானாகவே யோககாரகனாக மாறி விடுகிறான். அந்த லக்னாதிபதி கேந்திரத்தில் ஒன்றில் வந்தாலும் நற்பயனை அளித்துவிடுகிறான். அல்லது முற்றிலும் சுப கிரகமான குரு கேந்திரத்தில் அமைந்தாலும் நற்பயனை அளித்துவிடுகிறான். லக்ன கேந்திரங்கள் பாபயோகம் இல்லாமலும் (இடையூறு), அஷ்டமம் (8-ம் வீடு) ஆயுர்பாவம், பாபயோகம் இல்லாமலும் (இடையூறு) இருக்கும் தறுவாயில், லக்னத்துக்கு உடையவனும் (யோககாரக தகுதியுடையவனும்), கேந்திரத்தில் (1, 4, 7, 10-ம் வீடுகளில்) ஒன்றில் இருப்பதும், சுப கிரகமான குரு கேந்திரத்தில் இருப்பதும் கர்ம வினையானது புண்ணிய பலனை முழுமையாக அளித்து மகிழவைத்துவிடுகிறது.

பாப கிரகங்கள் 2, 3, 6, 11, 12 இந்த வீடுகளில் ஒதுங்கிவிடுவதால், நெருடல் இல்லாத இன்பத்தைச் சுவைக்கும் பாக்கியம் கிடைத்து விடுகிறது. 2- மாரகஸ்தானம், 3-ஒத்துழையாமை, 6-எதிர்ப்பு, 11 - லாபத்தைச் சுட்டிக்காட்டினாலும், கர்மத்தின் அளவைப் பொறுத்துதான் செயல்படும். 12 - இழப்பு. இங்கெல்லாம் நேரடி யாக நமது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் இடமாக (வீடாக) இல்லாததால், அவர்கள் (வெப்ப கிரகங்கள்) தகுதியிருந்தும் இடையூறு செய்ய முடியாமல் இருந்துவிடுகிறார்கள்.

லக்னாதிபதியும், குருவும் தங்களது செயல் பாட்டில் இடையூறின்றி செயல்பட்டு வெற்றி பெற்று, ஜாதகனுக்கு கர்ம வினையின் நற்பயன்களை ஏற்கவைத்து மகிழ்விக்கிறார்கள். கொடுத்துவைத்தவனுக்குக் கிடைத்துவிடுகிறது. முன் ஜன்மத்தில் புண்ணியத்தைச் சேமித்து வைத்தவனுக்கு இப்பிறவியில் கிடைத்து விடும் என்கிறது ஜோதிடம். புண்ணிய பலனை (நற்பயனை) இவனோடு இணைக்கும் வேளையை லக்னாதிபதியும், குருவும் சேர்ந்து செய்தார்கள். அவர்களது செயலுக்குக் குந்தகம் விளைவிக்காமல் கேந்திரத்தில் இருந்தும், த்ரிகோணத்தில் இருந்தும் அஷ்டமத்தில் இருந்தும் முற்றிலும் விலகி, வெப்ப கிரகங்கள் தங்களுடைய ஒத்துழைப்பை அளித்தன. ஒரு வகையில் வெப்ப கிரகங்களின் ஒத்துழைப்பும், அவன் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்குக் காரணம் எனச் சொல்லலாம்.

கேந்திர, த்ரிகோண வீடுகளில் அமர்ந்த கிரகங் களும், லக்னாதிபதியின் தொடர்பும் சுப கிரகங்களின் ஒத்துழைப்பும் அவனது பூர்வஜன்ம புண்ணிய பலனை அனுபவிக்கும் அளவுகோல் என்று சொல்லலாம். மறைந்திருக்கும் கர்மவினையின் பலனை, பிறந்தவ னோடு இணைத்துவைக்கும் வேலையை, வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் நடைமுறைப்படுத்துகின்றன. அப்பாவி மக்கள் மகிழ்ச்சியைத் தழுவுவதும், மெத்தப்படித்தவன் துயரத்தில் துவண்டுபோவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்றும் துறந்தவன் உலகவியலை எட்டிப் பார்க்கிறான். உலகவியலில் ஊறியவன் ஆன்மிகத்தை விரும்பு கிறான். இருவரது எண்ணமும் நிறைவேறுவதில்லை.

சிந்தனையாளர்களும் சந்தி சிரிக்க வாழ்வது உண்டு; சிந்தனை வளம் பெறாதவர்களும் பெருமை பெற்று விளங்குவது உண்டு. படித்தும் வேலையில்லாமல் தவிப்பவர்களும் உண்டு; படிப்பின்றி வளமோடு வாழ்பவர்களும் உண்டு. சிந்தனைக்கு எட்டியதை நழுவவிட்டவர் களும் உண்டு; சிந்தனைக்கு எட்டாததைப் பெற்றவர்களும் உண்டு. இந்த விபரீதங்கள் அத்தனையும் கர்மவினையின் விளையாட்டு என்கிறது ஜோதிடம். இல்லை என்று எதிர்ப்பவர்கள் ஏராளம் உண்டு. அனால், உண்மை எது என்று சொல்ல யாராலும் இயல வில்லை. ‘தனக்கும் தெரியாது சொன்னதையும் கேட்கமாட்டான்’ என்று சொல்வார்கள்.

பிறப்பவனின் கர்மவினை, அவன் பிறக்கும் வேளையில் தென்படும் ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள், அந்த விபரீதங்களைச் சுட்டிக் காட்டிவிடும். அதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்தச் செய்யுள்: கேந்திரத் ரிகோணநிதஷேஷ நயஸ்ய பாபா:..!  முனிவர்களின் சுயசிந்தனை சிக்கலை விடுவித்து, தெம்பை ஊட்டி வாழவைக்கிறது. கடன் வாங்கிய சிந்தனை, சிக்கலை விரிவாக்கி வெளிவர முடியாமல் தவிக்கச்செய்கிறது. இதுவும் கர்மவினையின் விளையாட்டு எனச் சொல்லவைக்கும் ஜோதிடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்