சிவமகுடம் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

 ‘ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின் நெல்மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின், படு வண்டு ஆர்க்கும் பன் மலர்க் காவின்’ என்று பண்டைய பாடல் ஒன்று கூறிப்பிடுவது போன்று, வயல்களும், அழகிய தெருக்களில் நெல் மலிந்து கிடக்கும் இல்லங்களும், வண்டு ஒலிக்கும் நந்தவனங்களும் நிறைந்த தேசம்தான் சோழம்!

    ஆங்காங்கே மர நிழல்களில் தங்கி ஆனேறுகள் புல் மேய்ந்து அசைபோட்டவண்ணம் நிற்க, கோவலர்கள் முல்லைப்பூக்களைப் பறிப்பதற் காக எறிந்த குறுங்கோல்களுக்குப் பயந்து, குறுமுயல்கள் கழனிகளில் உகளும் வாளை மீன்களோடு மீன்களாய் பாய்ந்துவிட, அதனால் பெரும் சலனத்தையும் அதைக் காண்போர் மனதில் பெரும் குதூகலத்தையும் ஏற்படுத்தும்படியான வளப்பங்கள் நிறைந்த நாடுதான் என்றாலும், திடுமெனச் சூழ்ந்துவிட்ட போர் மேகங்களால், மேற்சொன்ன வனப்புகளை எல்லாம் அனுபவிக்க இயலாதபடி தனது சுயத்தை தொலைத்துவிட்ட சோழ தேசத்தைப் போன்று, அதன் அடிவானமும்... தனக்குக் கீழ் கார்மேகங்கள் திரண்டுவிட்டபடியால், அந்த வைகறை நேரத்தில், ஆதவனின் பொன் கிரணங்களால் உண்டாகும் தனது வழக்கமான தகதகப்பை தொலைத்து, கருஞ்சாம்பல் வண்ணத்தைப் பூசிக்கொண்டிருந்தது!

இப்படியாக சோழதேசத்தின் அடிவானத்தை ஆக்கிரமித்திருந்த கருமேகங்கள், அவ்வப்போது பன்னீர்த் தூவலாக மழைத் தூறிக் கொண்டிருக்க, அதனால் ஏற்பட்ட இடையூறைப்
பொருட்படுத்தாது, தன் முதுகில் குறுக்குவாகாக மயங்கிக்கிடக்கும் தன் எஜமானனைச் சுமந்தபடி, தனக்கு மிகப் பரிச்சயமான அந்த பாதையில், தலைநகரை நோக்கி புயல்வேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது அந்தப் புரவி!

அந்த எஜமானன், தலைப்பாகையாகவும் தேவைப்பட்டால் ஒரு முகத்திரை போன்றும் பயன்படுத்தும் நீளமான வஸ்திரத் துணியையே கயிறாகக் கொண்டு, அந்தப் புரவியின் வயிற்றோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்ததால், புரவியின் வேகத்தால் அவன் கீழே விழுந்துவிடாதபடி வசதி ஏற்பட்டிருந்தது.

ஆங்காங்கே வளைந்தும் நெளிந்தும் சென்ற பாதையில் எந்தவித தடுமாற்றம் இல்லாமலும், வழியில் குறுக்கிட்ட சிற்றாறுகளையும், ஓடைகளையும் கடக்கும்போது மட்டும் ஏதோ ஆணைக்குக் கட்டுப்பட்டது போன்று சற்றே வேகத்தை மட்டுப்படுத்தி கட்டுக்கோப்புடனும், சமவெளிகளில் எதிர்க்காற்றையும் கிழித்தபடி வேகத்தைக் கூட்டிக்கொண்டும் பயணித்தது அந்தப் புரவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்