கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்டமி!

வணி மாதம் ரோகிணி நட்சத்திரம் கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்தான் செல்லக்கண்ணன் (ஆகஸ்ட் - 25 கோகுலாஷ்டமி). இந்தத் திருநாளில் விரிவாக பூஜைகள் செய்து அவனை வழிபடுவதும், ஆலயங்களுக்குச் சென்று அங்கே அவனுக்கான அபிஷேக ஆராதனைகளைத் தரிசிப்பதும் கோடானுகோடி பலன்களைப் பெற்றுத் தரும். வீட்டில் வழிபடுவது எப்படி?

கோகுலாஷ்டமியன்று நம் இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை ஸ்ரீகண்ணனின் திருப்பாதங்களைப் பச்சரிசிக் கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்வார்கள். இதன் அர்த்தம்... ஸ்ரீகண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.

தயிர், வெண்ணெய் ஆகியவற்றை கண்ணன் திருடிச் செல்லும்போது, அவனது பிஞ்சுப் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெயும் தயிரும் பாதச்சுவடுகளாக தரையில் பதியுமாம். இந்தச் சுவடுகளே, அவன் ஒளிந்திருக் கும் இடத்தையும் கோபியருக்குக் காட்டிக்கொடுத்து விடுமாம். கண்ணனின் இந்த விளையாடலை நினைவுபடுத்தும் விதமாகவும், அவன் நம் வீட்டுக்கும் வர வேண்டும் என்ற நோக்கத்துடனும்தான் கோகுலாஷ்டமி தினத்தில் கண்ணன் பாதம் பதிக்கிறோம்!

பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் குத்து விளக்கேற்றி, நடுவே தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.

வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி, பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

கிராமங்களில் மாலை வேளையில் தான் கிருஷ்ண ஜயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையை முடித்த பிறகு, அருகே உள்ள கண்ணன் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது விசேஷம். முக்கியமாக ஜன்மாஷ்டமி அன்று ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீகிருஷ்ணன் கதைகள் ஆகியவற்றைப் படித்து வழிபடுவதும் சிறப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்