வினைகள் தீர்ப்பான் வேங்கடகிருஷ்ணன்

கே.கோபால்

குழந்தை திருக்கோலத்தில் அருளும் கிருஷ்ணனை நிறைய தலங்களில் தரிசிக்கலாம். ஆனால், முறுக்கு மீசையுடன் குடும்ப சமேதராக கண்ணனைத் தரிசிக்க வேண்டும் என்றால்..?

அல்லிக்கேணிக்கு வாருங்கள் உங்கள் அல்லல்கள் யாவும் நீங்கும். பார்த்தசாரதியாய் அருளும் பகவானைப் பார்க்கப் பார்க்க நம் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்!

பிருந்தாரண்யம் என்று வழங்கப்பெற்ற திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றால், திருவரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய மூன்று திவ்வியதேசங்களை தரிசித்த பலன் கிடைப்பதால் சிறப்பு வாய்ந்த க்ஷேத்திரமாகப் போற்றப்பெறுகிறது.

மூலவரின் திருநாமம் வேங்கடகிருஷ்ணன் என்றாலும், உற்ஸவரான பார்த்தசாரதி பெருமாளின் பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது.

மூலவர் வேங்கடகிருஷ்ணன் வலக் கையில் சங்கு ஏந்தியும், இடக் கையை வரத ஹஸ்தமாக வைத்தும் நின்ற திருக்கோலத்தில் ருக்மணி பிராட்டியார், பலராமர், சாத்யகி, மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் என்று குடும்ப சமேதராக திருக்காட்சி அருள்கிறார்.

வருடத்தின் அனைத்து நாட்களுமே இங்கு உற்ஸவம் என்று சொல்லும் அளவுக்கு அலங்காரங்கள்... புறப்பாடுகள்! எப்போதுமே விழாக் கோலம்தான்.

ஸுமதிராஜன் என்ற மாமன்னன், தீவிர பெருமாள் பக்தர். திருமலை வேங்கடவனை தரிசித்து, ‘‘பெருமாளே... உன்னை தேர்ப்பாகன் வடிவில் ஸ்ரீகண்ணனாகக் கண்டு நான் மகிழ வேண்டும்!’’ என்று பிரார்த்திக்கிறான். மன்னனின் விருப்பத்துக்கு இசைந்த வேங்கடவன், ‘‘பிருந்தாரண்ய க்ஷேத்திரத்துக்கு வா. அங்கே உனக்கு இந்தக் கோலத்தில் தரிசனம் தருகிறேன்!’’ என்றார். அதன்படி ஸுமதிராஜன் பிருந்தாரண்யம் வந்து தவம் இருந்து பெற்ற தரிசனத்தைத்தான் நாம் என்றென்றும் ஸ்ரீவேங்கடகிருஷ்ணராக சேவித்து வருகிறோம். கிருஷ்ணராக வேங்கடவன் காட்சி தந்தமையால் வேங்கடகிருஷ்ணன்! வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது.

நின்றான்- அமர்ந்தான்- கிடந்தான் ஆகிய மூன்று திருக் கோலங்களிலும் பெருமாளை இங்கு சேவித்து இன்புறலாம். நின்றான் திருக்கோலத்துக்கு ஸ்ரீவேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர். கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்