அருட்களஞ்சியம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

குழந்தையும் தெய்வமும்

சேங்காலிபுரம் எஸ்.அனந்தராம தீக்ஷிதர்

நமது பாரத மக்கள் முதுமொழிகளை நன்குணர்ந்து குழந்தைகளைத் தெய்வம் போல் கொண்டாடும் பண்பினை இன்றும் காண்கின்றோம். குழந்தைகளைக் காணும்போது பெரும்பாலும் கண்ணன் ஞாபகம் வருவது இயற்கை. கவிஞர் ஒருவர் பூஞ்சோலைகளைக் காணும்போது கண்ணன் நினைவு வருவதாகக் குறிப்பிடுகிறார். பசு முதலிய பிராணிகளை மேய்த்துப் பரிபாலிக்கும் மக்கள் ஆயர் எனப்பட்டனர்.

பசுக்களை மேய்ப்பதற்குக் காடு அவசியமானது. காட்டையும், காட்டைச் சார்ந்த  இடங்களையும் தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த முல்லை நிலத்து மக்களாகிய ஆயர் எனப் படுவோர், தங்கள் தலைவனாகக் கண்ணனை வழிபட்டார்கள். தமிழ் இலக்கியங்களில் சிறந்த  ‘பிள்ளைத் தமிழ்’ என்ற நூல் வரிசைகளும் இறைவனைக் குழந்தையாக பாவித்துப் போற்றும் தன்மையிலேயே அமைந்துள்ளது இங்கு நோக்கத் தகுந்தது.

பக்தர் ஒருவர் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிப் பாடும் ஒரு நிகழ்ச்சி இவ்வுண்மையை நமக்கு நன்கு விளக்குகின்றது. யசோதை, பகவானின் அருளால் அக்கடவுளையே புதல்வனாக அடைந்தாள்.

அக்குழந்தையை அவள் தெய்வத்தைப் போல் கொண்டாடினாள். அந்த பாலனும் வளர்ந்து ஓராண்டு நிறைவு பெற்றான். சாதாரணமாக  நம் குழந்தைகளின் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுவது போல் யசோதையும் கொண்டாட நினைத்தாள். கண்ணன் ஆண்டு நிறைவைப் பெறும் நன்னாளில் பிரம்ம லோகத்திலிருந்து, பிரம்மாவின் புத்ரனும் தேவரிஷியுமான நாரதர் வீணையைக் கையிலேந்தி நந்தகோகுலம் வந்தார். ஸ்ரீபகவானுக்கு பந்துக்கள் தேவர்களும் பக்தர் களும்தானே?!

நாரதர் வந்த சமயம் ஸ்ரீகண்ணனுக்கு மங்கள ஸ்நானமாகிய எண்ணெய் தேய்த்தலை யசோதை செய்து கொண்டிருந்தாள். பணிப் பெண்கள் பலர் இருந்தும் யசோதை தானே அதைச் செய்து கொண்டிருந்தாள். எவருக்கும் கிடைக்காத இந்த பாக்யத்தை நாரதர் பார்த்து, யசோதையை அழைத்து, ‘‘ஹே! யசோதே! நீ என்ன புண்யம் செய்தாய்! உனது பாக்யத்தை என்னவென்று சொல்வேன்! எந்தக் கண்ணனுடைய திருவடிகளில் பிரம்மா, இந்திரன், வருணன், இயமன், குபேரன் முதலிய சிறந்த தேவர்கள் விழுந்து நமஸ்கரிக்கின்றனரோ, அந்தப் பரமாத்மாவான ஸ்ரீகண்ணன் எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்காக உன் கால்களில் விழுந்து கட்டிக் கொண்டிருக்கிறானே! இம் மாதிரியான பாக்யம் வைகுண்டம் சென்றவர்களுக்கும் கிடைக்காது. உனது இடைச்சேரியான இந்த நந்தகோகுலம்  வைகுண்டத்துக்கும் மேலாகிவிட்டதே. உன் பாக்யமே பாக்யம்!’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட யசோதை, குழந்தையை தெய்வம் போல் நினைத்துப் பணிவிடை செய்து வந்தவள், இக்குழந்தை தெய்வமா என்று நினைத்து அப்யங்க ஸ்நான காலத்தில்  இரண்டு தோள்களையும் பிடித்துத் தூக்கிப் பார்த்தாள். உடனே ஸ்ரீபகவான் வைகுண்ட தரிசனத்தைத் தாய்க்குக் காண்பித்தார். அப்பொழுது யசோதை அழகிய சொற்களால் பகவானை ஸ்தோத்திரம் செய்தாள். ‘‘குழந்தை யும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்  அன்பு காட்டும்’’ என்ற நம் பெரியோர்களின் சொல்லின் உண்மையை யசோதை அனுபவித்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்