கயிலை... காலடி... காஞ்சி! - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
‘அம்பாள் பிரார்த்தனையை பூர்த்தி பண்ணிடு’நிவேதிதா

தர்மோ மே சதுரங்க்ரிகஸ் ஸுசரித: பாபம் விநாசம் கதம்
காமக்ரோத மதாதயோ விகலிதா: காலா: ஸுகாவிஷக்ருதா
ஜ்ஞானானந்த மஹௌஷதி: ஸுபலிதா
கைவல்யநாதே ஸதா மான்யே
மானஸ புண்டரீக நகரே ராஜா வதம்ஸே ஸ்த்திதே


எவருடைய மனத் தாமரையாகிய நகரத்தில், எல்லோராலும் வணங்கப்படுபவரும் ஏக சக்கரவர்த்தியுமான சிவபெருமானின் அருளாட்சி நடைபெறுகின்றதோ, அவருடைய மனதில் தவம், தூய்மை, தயை, சத்யம் ஆகிய நான்கு பாதங்களை உடைய தர்மம் நிலைபெற்றிருக்கும்; பாவங்கள் நசிக்கப்பட்டுவிடும்; காமம், கோபம், ஆணவம் அகன்றுவிடும்; எப்பொழுதும் இன்பமே சூழ்ந்திருக்கும்; அனைத்துக்கும் மேலான ஞானானந்தம் நிலைத்திருக்கும்.

- சிவானந்த லஹரி

மஹா பெரியவா எதிரில் இருந்த தாம்பாளத்தில், காமாட்சி அம்மன் கோயிலில் தன் பேத்தி கண்டெடுத்த ரெட்டை வட தங்கச் சங்கிலியை விநயத்துடன் வைத்துவிட்டு, பெரியவா உத்தரவுக்காக மீனாட்சி பாட்டி காத்திருந்தாள். அவளுக்கு அருகிலேயே பேத்தி காமாட்சியும் நின்றிருந்தாள்.

சற்றைக்கெல்லாம் ஒரு பெண்மணி அங்கே வந்தாள். வந்தவள் மஹா பெரியவாளை நமஸ்காரம் செய்துவிட்டு, கண்ணீர் விட்டு அழுதாள். மடத்துச் சிப்பந்திகளுக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் அந்தப் பெண்மணி அன்று காலையில்தான் மஹா பெரியவாளை தரிசித்து நமஸ்காரம் செய்துவிட்டு சென்றிருந்தாள்.

அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியம்.

அன்று செவ்வாய்க்கிழமை.  அதிகாலையிலேயே ஆரணியில் இருந்து வந்திருந்த பஜனை கோஷ்டியினர் மடத்தை தங்கள் பாடல்களால் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி இருந்தனர்.

மனத்தே பெருக்கெடுக்கும் கருணை திருமுகத்தே தேஜஸாகப் பொலிய, மஹா பெரியவா சர்வேஸ்வரனாக பக்தர்களுக்கு தரிசனம் தந்துகொண்டு இருந்தார். வரிசையில் வந்துகொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணி மஹா பெரியவா அருகில் வந்ததும் முகத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க மஹா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.

தான் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த பழங்கள், மட்டைத் தேங்காய்கள், காய்வகைகள் போன்றவற்றை மஹா பெரியவா திருமுன்பு சமர்ப்பித்து மறுபடியும் நமஸ்கரித்து எழுந்தாள்.

அந்தப் பெண்மணியை சற்று கூர்ந்து நோக்கிய மஹா பெரியவா, “நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட பத்னி அம்புஜம்தானே? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்து ஏதோ சொல்லி துக்கப்பட்டுண்டே. இப்ப சந்தோஷமா இருக்கறதைப் பார்த்தா உன்னோட ப்ரார்த்தனையை அம்பாள் நிறைவேத்திட்டான்னுதானே அர்த்தம்? என்ன சரிதானே?’’ என்று கனிவு ததும்பக் கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மறுபடியும் மஹா பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு, “வாஸ்தவம்தான் பெரியவா, எங்க ஒரே பொண்ணு மைதிலிய மூணு வருஷமா அவா புக்காத்துல தள்ளி வச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் எங்களுக்கு ஒரே ஆதரவான ஒங்கக்கிட்ட வந்து என்னோட கஷ்டத்தைச் சொல்லி பிரார்த்திச்சேன். நீங்கதான் காமாட்சி அம்மன் கோயில்ல அம்பாளுக்கு அபிஷேகம் செஞ்சு, அஞ்சு நாளைக்கு அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணச் சொன்னேள். நானும் அப்படியே செஞ்சேன். பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் மாப்பிள்ளை திடீர்னு வந்து மைதிலியை அழைச்சுண்டு போயிட்டார். எல்லாம் உங்க அனுக்கிரஹமும் அம்பாளோட கிருபையும்தான்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

பின்னர் மஹா பெரியவாளிடம் தான் கோயிலுக்குச் சென்று அம்பாளை தரிசித்துவிட்டு வருவதாகக் கூறினாள்.

“பேஷா போயிட்டு வா. அவதானே உன்னோட கஷ்டத்தை தீர்த்து வச்சா. அம்பாளை தரிசனம் பண்ணிட்டு திரும்பவும் மடத்துக்கு வந்து சாப்டுட்டுதான் ஊருக்குப் போகணும் சரியா?’’ என்று கேட்டு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.

காலையில் மகிழ்ச்சியுடன் கோயிலுக்குச் சென்றவள் இப்போது ஏன் அழுகிறாள் என்பது அங்கிருந்தவர்களுக்கு புரியவில்லை.

அழுதபடியே மஹா பெரியாவாளிடம் நடந்ததைக் கூறினாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்