ஆனை முகன் அருளட்டும்!

புது வருடம் பிறக்கும்போது பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அப்போது முதலில் ஒரு ஸ்லோகம் சொல்லப்படும்.

வாகீசாத்யாஸ் ஸுமநஸஸ் ஸர்வார்த்தாநாம் உபக்ரமே

யம் நத்வா க்ருதக்ருத்யாஸ்யு: தம் நமாமி கஜாநநம்

கணபதியைக் கைதொழும் இந்த ஸ்லோகத்தை தமிழ் வருடப் பிறப்பின் போது, பஞ்சாங்கம் வாசிப்பதற்குமுன் சொல்வார்கள். தமிழ் வருடப்பிறப்பு என்றில்லை, 2016 புத்தாண்டின் துவக்கநாளிலும் இந்த ஸ்லோ கத்தைச் சொல்லி வழிபட்டு ஆனைமுகனின் திருவருளைப் பெறலாம். இதன் பெருமையை காஞ்சி மஹா பெரியவா மிக அற்புதமாக விவரித்துள்ளார்.
‘‘ ‘பிரம்மாதி தேவர்களும்கூட எந்தக் காரியத்தின் ஆரம்பத்திலும் எவரை நமஸ்கரித்து எடுத்த காரியத்தை முடித்திருக்கிறார்களோ, அந்த கஜானனரை- யானை முகனை நானும் நமஸ்கரிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறது இந்த ஸ்லோகத்தில்.

அல்ப சக்தர்களாகிய மனிதர்கள் என்றில்லை, நிரம்ப சக்தி படைத்த தேவர்களும் கூட பிள்ளையாரை வணங்குகிறார்கள். எப்போதாவது, முக்கியமான சமயங்களில், சதுர்த்தி மாதிரியான தினங்களில்தான் என்றில்லாமல் எப்போது பார்த்தாலும், எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் ஆனைமுகனை வணங்குகிறார்கள் என்று தெரிவிக்கிறது இந்த ஸ்லோகம். அதுமட்டுமில்லை, வணங்கியதன் பலனை பூரணமாகப் பெற்றுவிடுகிறார்கள் என்றும் தெரிவித்துவிடுகிறது.

இதிலேயே ‘ஸுமநஸ்’ என்றொரு வார்த்தை வருகிறது. இதற்கு நேர் அர்த்தம் நல்ல மனம். நல்ல மன விசேஷம்தான் தேவ சக்தி. துஷ்ட மனம்தான் அசுர சக்தி. புஷ்பத்துக்கும் ஸுமநஸ் என்று பெயர் உண்டு. ஒரு செடி அல்லது கொடியின் நல்ல மனம் மாதிரி இருப்பது அதன் புஷ்பம்.

ஸுமநஸ் என்றால் அழகானது என்றும் அர்த்தம் உண்டு. இப்படி நல்ல மனம், அழகு, தேவர்கள், புஷ்பம் ஆகிய நாலுக்கும் ஸுமனஸ் என்று பெயர் இருப்பதை வைத்து சிலேடை செய்து பல ஸ்லோகங்கள் உண்டு.

ஆக, தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர் பிள்ளையார் என்று சொல்லும்போதே நல்ல மனம் கொண்ட எவரானாலும் அவரை பூஜை பண்ணிவிடுகிறார்கள் என்று சொல்வது மாதிரி, ‘வாகீசாத்யாஸ் ஸுமநஸஸ்:’ என்று தேவர்களை குறிப்பாக  இந்த ஸுமநஸ் என்ற பெயரால் சொல்லியிருக்கிறது.

இப்படி நல்ல மனமுள்ளவரெல்லாம் ஒருத்தரைப் பூஜை பண்ணுகிறார்கள் என்றால், அப்படி பூஜிக்கப்படுபவரும் ரொம்ப நல்ல மனஸ் படைத்தவராகத்தானே இருக்கவேண்டும்?’’ என்கிறார் மகா பெரியவர் (தெய்வத்தின் குரலில் இருந்து...).

அந்த நல்ல மனதை நமக்கும் அருளட்டும் ஆனைமுகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick