முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்ஷீண சந்திரன் (கலைகளை இழந்த சந்திரன்) பாப கிரகத்துடன் இணைந்து 7-ல் இருந்தால், பிறர் மனைவியிடம் ஈடுபாடு வந்துவிடும்; பிறந்த வேளையில் (லக்னத்தில்) 7-க்கு உடையவன் பாவ கிரகத்துடன் இணைந்து இருந்தால், ‘பர ஸ்த்ரீரதன்’ - பிறருக்குச் சொந்தமான ஒருத்தியிடம் ஈடுபாடு இருக்கும் என்கிறது ஜோதிடம் (க்ஷீணே சசாங்கே யதிபாபயுக்தே... லக்னேஸபாகுபயதிதாரஹிதே...).
வளர்பிறை ‘தசமி’ (10-வது நாள்) முதல் தேய்பிறை ‘பஞ்சமி’ (5-ம் நாள்) வரையிலும் சந்திரன் கலைகள் நிரம்பியவனாகத் தென்படுவான். பௌர்ணமியில் தென்படும் முழு வளர்ச்சி இல்லாவிட்டாலும், ஓரளவு வளர்ச்சி இருக்கும். அதிகமான கலைகள் அவனது செயல்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும். சந்திரனுக்கு கலைகளின் நிறைவு அல்லது போதுமான வளர்ச்சிதான் பலம். அதற்குப் பெயர் ‘சந்திரபலம்’ (சந்திரபலம் ததேவ...). அதை பக்ஷபலம் (வளர்பிறை) என்றும் சொல்லும் ஜோதிடம், கலைகளை இழந்தவனை க்ஷீண சந்திரன் என்று குறிப்பிடும். அந்த வேளையில் அவன் வெப்ப கிரகத்தின் தரத்தை அடைந்து, பாப கிரகம் அல்லது அசுப கிரகமாக மாறிவிடுகிறான்.

சூரியனிலிருந்து அதிகமான கிரணங்கள் சந்திரனில் பட்டு, அதிலிருக்கும் நீருடன் இணையும்போது தட்ப கிரகமாக மாறுவான். குறைந்த கிரணங்கள் பட்ட சந்திரனில் தட்பத்தின் அளவு குறைந்தபடியால் அவன் வெப்ப கிரகமாகவே இருப்பான்.

அமாவாசை முடிந்து பிரதமையில் (மறுநாள்) இருந்து பௌர்ணமி வரை வளர்பிறை என்றும், பௌர்ணமி முடிந்து பிரதமையில் (மறுநாள்) இருந்து அமாவாசை வரை தேய்பிறை என்றும் நடைமுறையில் நாம் கணக்கிடுவோம். அமாவாசையில் சந்திரன் சூரியனுடன் இணைந்து கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பான். அதற்கு மறுநாள் முதல் ஒவ்வொரு கலையாக வளர்ந்து பௌர்ணமி அன்று முழு கலையோடு விளங்குவான். பிறை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருவதால், வளர்பிறை என்று சொல்கிறோம். பௌர்ணமியில் முழு நிலவை எட்டிய சந்திரன், அதற்கு அடுத்த நாள் முதல் ஒவ்வொரு கலையாக தேய்ந்து அமாவாசையில் சூரியனில் மறைந்துவிடுவதால் அதை தேய்பிறை என்கிறோம்.

ஜோதிடத்தின் கண்ணோட்டம் வேறு. சந்திரன் கண்ணுக்குப் புலப்படுவதால்- அதிக கலைகளோடு இருப்பவனை வளர்ந்தவன் என்றும், கலைகள் குறைந்து இருப்பவனை தேய்ந்தவன் என்றும் குறிப்பிடும். ஆகாசத்தில் வளர்பிறை தசமியில் வளர்ந்த சந்திரனைப் பார்க்க இயலும். தேய்பிறையில் பஞ்சமி வரை அவன் வளர்ந்த சந்திரனாக இருப்பான். இதை வைத்து வளர்பிறை தேய்பிறைக்கு வித்தியாசமான விளக்கம் அளிக்கும் ஜோதிடம்.

சந்திரன் மனதுக்குப் பிரதிநிதி (காரகன்). வளர்ந்த மனம் சிந்தனை செய்யும்; தேய்ந்த மனம் சிந்திக்கும் வலுவை இழந்துவிடும். அந்த சந்திரனோடு பாப கிரகம் இணையும்போது, அதன் தாக்கத்தால் தன் வசமிழந்து, பாப கிரகத்தின் இயல்பில் செயல்பட்டுவிடும். அவன் 7-ல் அமைந்தால், மனைவியோடு திருப்தி அடையாமல், பிறர் மனைவியிடம் ஈடுபாட்டை வளர்த்துவிடும். தவறான
பாதையில் அடியெடுத்து வைத்துவிடும். க்ஷீண சந்திரன் (கலைகளை வெகுவாக இழந்த சந்திரன்) தனது சிந்தனை வளத்தை இழக்கிறான். வெப்ப கிரகத்தின் சேர்க்கை யில் தன் வசமிழந்து விடுகிறான். 7-ல் அமைந்தபடியால், மனைவியைத் தவிர்த்து பிறர் மனைவியிடம் ஆசையைத் தணிக்க முற்படுகிறான் என்று ஜோதிடம் விளக்கும்.

பிறந்தவேளையில் (லக்னம்), 7-க்கு உடை யவன் பாபியோடு இணைந்து இருந்தாலும் பிறர் மனைவியிடம் பற்று இருக்கும். பாபியோடு இணைந்த லக்னம் சுய சிந்தனையில் தவறிவிடும். அத்துடன் 7-க்கு உடையவன் இணையும் வேளையில், தன் மனைவியைத் தவிர மாற்றான் மனைவியிடம் ஆசையைத் தணிக்க முற்படுகிறான் என்று ஜோதிடம் விளக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்