சிவமகுடம் - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

ஆற்றங்கரை ஆபத்து!

மேகத்திரை கிழித்து கொட்டித் தீர்த்தது பெருமழை. அதன் நீர்த்துளிகள் ஆங்காங்கே சிறு ஓடைகளில் ஒன்றுகூட, ஓடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் அந்தக் காட்டாற்றுடன் சங்கமித்து பெருவெள்ளமாய் பரிணமித்து, ஆற்றின் ஆக்ரோஷத்தை மேலும் அதிகப்படுத்தின!

இங்ஙனம் ஆர்ப்பரித்துப் பாயும் ஆற்றுவெள்ளத்தின் ஆரவார ஒலியோ, அத்துடன் இணைந்து ‘ஹோ’வென சுழன்றடித்த சூறைக் காற்றின் பேரிரைச்சலோ, செவி பிளக்க ஒலித்த பேரிடியின் பெரும் சத்தமோ நம்பியைச் சலனப்படுத்தியதாகத் தெரியவில்லை.

இயற்கையின் இந்த இடர்ப்பாடுகளையும், அருகில் நெருங்கி விட்டிருந்த பெரும் நீர்ச்சுழல் ஒன்றின் அதீத விசையையும் எதிர்த்து, துடுப்பு வலித்துக் கொண்டிருந்த நம்பிக்கு, அவனது படகின் முனைப்பகுதியையொட்டி கிடத்தப்பட்டிருந்த பொங்கியின் முனகல் சத்தமே பெரிதும் சஞ்சலத்தை உண்டுபண்ணியது.

மின்னலின் ஒளியில் அவன் அவளைக் கவனித்தபோது, அவளின் உடல் நடுக்கம் முன்பைவிட அதிகரித்திருப்பதை அறிய முடிந்தது. எப்பாடு பட்டாவது சுழலைக் கடந்துவிடவேண்டும் அதன் பிறகு அதிக சிரமம் இல்லை. ஆற்றின் போக்கும் வேகமும் சேரவேண்டிய இடத்துக்கு வெகுசீக்கிரம் தங்களைக் கொண்டு சேர்த்துவிடும் என்று முடிவெடுத்தவன், துடுப்பை இயக்குவதில் அதீத வேகம் காட்டினான். படகும் மெள்ள மெள்ள சுழலின் விசையில் இருந்து விலகத் துவங்கியிருந்தது. ஆனால், அரை மயக்கத்தில் கிடந்த பொங்கியின் முனகல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தது!

‘துறவி... மூங்கில்காடு... தவக்குடில்... சிவதரிசனம்’

- அவள் முனகலில் இருந்து இந்த வார்த்தைகளை மட்டுமே தெளிவாகப் புரியமுடிந்தது நம்பிக்கு. ஆனால் அவற்றுக்கான உட்பொருளோ, அந்த வார்த்தைகளுக்கு இடையேயான தொடர்பு குறித்தோ அவனுக்கு  எதுவும் புலப்படவில்லை.

‘எத்தகைய ஆபத்தில் மாட்டிக்கொண்டாள் இந்தப் பெண். நான் மட்டும் தக்க தருணத் தில் வரவில்லை என்றால், இவள் கதி என்னவாகியிருக்கும்?’- நினைத்துப் பார்க்கவே குலைநடுங்கியது நம்பிக்கு!
உறையூர் சிறுபோர் வெற்றியில் முடிந்தது என்றாலும், புயலெனப் பாய்ந்து வந்த சோழ தூதன், இளவரசி மானியாரிடம் பகிர்ந்துகொண்ட தகவல் எல்லோரையும் நிலைகுலைய வைத்து விட்டது. எல்லையில் பகைப் படைகள் எரிபரந்தழித்தலை துவங்கி விட்டதை அவன் உரைத்தபோதும் கலங்காத இளவரசியாரே, புலியூருக்குப் புறப்பட்ட பொங்கி, இன்னும் அங்குவந்துசேரவில்லை என்ற தகவலைச் சொன்னதும் ஒருகணம் ஆடித்தான் போனார்.

ஆனாலும் அதுவும் சில விநாடிகள்தான்.சட்டென்று தன் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டவர், அடுத்தடுத்து ஆணைகளைப் பிறப்பித் ததையும், எல்லைப்புறத்தில் நிலவரத்தை இன்னும் தெளிவாக அறிந்துவரும்படி கோச்செங்கணை சிறுபடையுடன் அனுப்பிய இளவரசி, பொங்கியை மீட்டெடுக்க தனக்கு உத்தரவிட்டதையும் எண்ணிப் பார்த்தான். அப்போது அவர் முகத்தில்தான் எவ்வளவு ஆவேசம்.  இக்கட்டான சூழலிலும் அவர் காட்டும் இந்த வேகமும் உறுதி யுமே சோழவீரர்களுக்கு பல தருணங்களில் வெற்றிக்கான உத்வேகத்தை அளித்திருக்கின்றன.

‘சாதாரண மனிதன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிக்கத் துடிக்கத் துடிக்கும் மனிதனோ ஆபத்துகளில்  உள்ள வாய்ப்பைப் பார்க்கிறான்’ என்று அடிக்கடி தன் வீரர்களுக்கு உபதேசிப்பார் பட்டர்பிரான். இளவரசியார் இரண்டாம் வகை; சூழ்ந்திருக்கும் ஆபத்துகளிலும் வெற்றிக்கான வாய்ப்பைத் தேடுபவர். அவரின் அணுக்கத் தோழியான இந்தப் பெண்ணும் அவர் வகைதான் போலும். அதனால்தான் ‘புலியூருக்குப் புறப்படு’ என்று மானியார் உத்தரவிட்டதும், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனித்தே புறப்பட்டு வந்து, இதோ இப்போது ஏறக்குறைய உயிர் ஆபத்தில் இருக்கிறாள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்