ஊர்வலம்! - மதுரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சிவ தலங்களுள், 16 தலங்கள் மிக முக்கியமானவை. அவற்றுள் சிதம்பரம், காசி, திருக்காளத்தி, மற்றும் திருஆலவாய் ஆகிய நான்கு தலங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘திருஆலவாய்’ என்பது மதுரை மாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே இறவாப் பேரின்ப நிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே வீடு பேறு கிட்டும். சீவன் முக்தி தரும் தலம் என்பதால், சீவன் முக்திபுரம் எனும் பெயரும் இதற்கு உண்டு. மேலும், சிவராஜதானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களும் உண்டு. கோயிலில் இறைவன் நிகழ்த்திய ஆனந்தக் கூத்தால் ‘வெள்ளி அம்பலம்’ எனப்பட்டது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து ‘தேனாகிய மதுரம்’ இத்தலத்தில் வழிந்திட, ‘மதுராபுரி’ என அழைக்கப்பட்டு, அது மருவி ‘மதுரை’ ஆயிற்று.

  கிரேக்க சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஏதென்ஸ் போல நாகரிக, கலாசாரத்தில் சிறந்து விளங்குவதால் ‘ஏதென்ஸ் ஆஃப்  தி ஈஸ்ட்’ எனப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

  ‘மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று கூறுமளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் திருக்கோயில், சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்தப் பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

  இங்குள்ள மீனாட்சி அம்மனின் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோயில்களில் முதன்மையானது இது.

  மீன் போன்ற கண்கள் கொண்டவள் என்பதால், மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. மீன் தனது முட்டைகளை, பார்வையாலேயே தன்மயமாக்குவது போல், பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கிறாள்.

  மீனாட்சி அம்மனுக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத்திருவழுதிமகள் போன்ற பெயர்களும் உள்ளன.

    ராமர், லட்சுமணர், வருணன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் பலரும் பூஜித்துப் பேறு பெற்ற தலம் மதுரை.

  விருத்ராசுரனைக் கொன்ற இந்திரன், பிரும்மஹத்தி தோஷம் நீங்க, பாண்டிய நாட்டுக் கடம்ப வனத்தில் சுயம்புலிங்கத்தை வழிபட்டுத் தோஷம் நீங்கப் பெற்றான். இந்தச் சிவலிங்கத்தைத் தேவர்களும் பூஜித்து வந்தார்கள்.

  ஒரு நாள், தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்பவனத்தில் கானம் ஒன்றைக் கேட்டு அருகில் சென்றபோது, லிங்கம் அவன் கண்களுக்குத் தென்பட்டது. அப்போது மணவூரை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னரிடம் சென்று இந்தத் தகவலைக் கூறினான். அரசன் கடம்ப வனத்துக்கு வந்து ஈசனை தரிசித்தான். பின்பு அங்கு கோயில் கட்டி, நகரத்தையும் உருவாக்கி, மக்களுடன் குடியேறினான் என்கின்றன புராணங்கள்.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் - இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

  மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை. அம்மை அருள்பாலிக்கும் கருவறை 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமான கருவறையாகும்.

  மீனாட்சியம்மை கோயிலில் ஏராளமான மண்டபங்கள் உள்ளன. அவை ஆயிரங்கால் மண்டபம், நகரா மண்டபம், அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப்பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூடு மண்டபம், திருமலை நாயக்கர் மண்டபம், வீர வசந்தராய மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம், நான்கு கால் மண்டபம், மண்டபநாயக மண்டபம், திருஞான சம்பந்தர் மண்டபம், சங்கப்புலவர் உலா மண்டபம், புது மண்டபம் எனப் பல மண்டபங்கள் உள்ளன.

    நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் மதுரை. புதனுக்கு உரிய ரத்தினமான மரகதத்தில் மூலவர் மீனாட்சி சிலை உள்ளது. அதேபோல், பஞ்ச சபைகளில் வெள்ளி அம்பலம் மதுரையாகும். கால் மாறி ஆடிய கோலத்தில் நடராஜர் காணப்படுவது விசேஷம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்