முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

புருஷ ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7-ல் செவ்வாய் இருந்தால், பலதரப்பட்ட பெண்மணிகளின் இணைப்பில் இன்புற்று வாழ்வான். பல பெண்களை ஈர்க்கும் அளவுக்கும் செல்வாக்கும், பெருந்தனமும் அவனிடம் இருக்கும். 7-ல் ரவி (சூரியன்) இருந்தால், பல பெண்மணிகளை மனைவிகளாக ஏற்று விரிவாக்கம் பெற்ற குடும்பத்தைப் பெற்று மகிழ்வான்.

2-க்கு உடையவன், 6-ம் வீட்டுக்கு உடையவன், 7-க்கு உடையவன், சுக்கிரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து, ஒரு பாவ கிரகத்துடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால், மாற்றான் மனைவியை தன்வசப்படுத்துவான். அது பழக்கப்பட்டு தனது குலத்தின் பெருமையை அழித்துவிடுவான்.

2, 6, 7-க்கு உடையவர்களும் சுக்கிரனும் சேர்ந்து லக்னத்தில் இருக்கும்போது, ஒரு சுப கிரகத்தின் பார்வை லக்னத்தில் விழுந்தால், பரஸ்திரீகமனம் இருக்காது. தனது தாரத்தை மகிழ்வித்து நிறைவு பெறுவான். அதே போல் குஜன் 7-ல் இருக்க, சூரியன் 7-ல் இருக்க, ஒரு சுப கிரகம் 7-ஐ பார்த்தால், பல பெண்மணிகளோடு சேர்ந்து இருக்கமாட்டான் என்கிறது ஜோதிடம். சுபனின் பார்வை (7-ம் பார்வை) இடையூறை விளைவிக்கும் கிரகங்களை திசைமாறச் செய்துவிடும். 7-ல் அமர்ந்த கிரகம் அல்லது கிரகங்கள், அதிலும் பாவ கிரகங்கள்-அசுப கிரகங்கள், சுப கிரகமானாலும் பாவ கிரகத்தின் இணைப்பில் தன்னையும் பாவ கிரகமாக மாற்றிச் செயல்படும் சுபகிரகங்கள்... இவற்றைப் பார்த்ததும் நொடியில் பலனை இறுதியாக்கிவிடக் கூடாது.

சுப கிரகத்தின் 7-ம் பார்வை இருக்கிறதா என்று  கண்ணுற்று முடிவுக்கு வரவேண்டும் என்கிறது ஜோதிடம். ‘எண்ணிக்கையில் அதிகமான பாப கிரகங்கள் 7-ல் உள்ளன. இந்த நிலையில் ஒரு சுப கிரகம் 7-ம் பார்வையாகப் பார்ப்பதால், முற்றிலும் விலகாது’ என்ற ரீதியில், பக்குவம் பெறாத அறிவில் தோன்றிய விளக்கத்தை அளித்து, ஜோதிடத்தின் உண்மையான விளக்கத்தை ஏளனம் செய்யக் கூடாது. முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரது சிந்தனை வளம் பெற்ற முடிவை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

புருஷ ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் இருந்தால் மனைவி தங்க மாட்டாள் என்கிற முடிவு ஜோதிடத்துக்கு உடன்பாடு அல்லாதது. 7-ல் சுபனின் 7-ம் பார்வை இருந்தால், மனைவி இழப்பு நிகழாது என்கிறது ஜோதிடம். புருஷ ஜாதகத்தில் 7-ல் இருக்கும் செவ்வாய், வரப் போகும் மனைவி யின் ஆயுளை இறுதி செய்யாது. அவரவர் ஜாதகத்தின் பலன்கள் அவரவர் ஜாதகத்துக்கு மட்டும்தான் பொருந்தும். ஒரு ஜாதகம், சம்பந்தம் இல்லாத (கல்யாணம் ஆகாத நிலையில்) மற்றொரு ஜாதகத்தை வரையறுக்காது. தந்தையின் ஜாதகம் தனயனை அழித்தது, தனயனின் ஜாதகம் தந்தையை அழித்தது என்கிற விளக்கங்களில் ஜோதிடத்துக்கு உடன்பாடு கிடையாது. அவரவர் ஜாதகம் அவரவர் ஆயுளை நிர்ணயிக்கும்.

ஆகவே, பெண்ணின் (வரப்போகும் மனைவி யின்) மரணத்தை ஆண் ஜாதகம் (வரப்போகும் கணவனின் ஜாதகம்) நிர்ணயிக்காது. நீண்ட ஆயுளைப் பெற்ற பெண்ணொருத்திக்கு... வரப்போகும் கணவனின் ஜாதகத்தில் 7-ல் செவ்வாயைப் பார்த்து, அவள் இறந்துவிடுவாள் என்ற முடிவுகட்டுவது தவறு. பிறப்பில் கிடைத்த நீண்ட ஆயுளை, இணைபவனின் ஜாதகம் மாற்றி அமைக்காது.  மனைவியை இழப்பான் என்று முடிவை அறிவிக்குமுன், பெண் ஜாதகத்தின் ஆயுளை வரையறுக்க வேண்டும். அவளுக்கு நீண்ட ஆயுள் இருந்தால் இழப்பு ஏற்படாது. அவள் அல்ப ஆயுளுடன் தென்பட்டால், மரணத்தைச் சந்திப்பாள். அதற்குக் காரணம் புருஷன் ஜாதகத்தில் 7-ல் தென்படும் செவ்வாய் அல்ல; அவள் பிறக்கும்போது அற்பாயுள் யோகம் இருப்பதுதான். கல்யாணத்தில் இணையாமல் இருந்தாலும் அவள் மரணம் சம்பவிக்கும்.

தற்போது புருஷ ஜாதகத்தில் 7-ல் செவ்வாயைக் காரணம் காட்ட இயலாது. பெண் ஜாதகத்தை அலசி ஆராயாமல், 7-ல் செவ்வாய்க்கு பலன் அளிப்பது (அவள் மடிந்துவிடுவாள் என்று) தவறான விளக்கம். 7-ல் செவ்வாய் தென்படுகிறார். ஆனால் குரு பார்வை இருப்பதால் மனைவி மடியமாட்டாள் என்று சொல்வதும் தவறு. அங்கும் பெண் ஜாதகத்தின் ஆயுள் பாவம்தான் நடைமுறைக்கு வரும். இந்த செவ்வாயின் தரமோ, குரு பார்வையின் வலிமையோ அவளது ஆயுள் நிர்ணயத்தை இறுதியாக்காது. அவளுடைய ஆயுளை நிர்ணயிக்க, அவளுடைய ஜாதகத்தை ஆராயவேண்டும். புருஷ ஜாதகத்தின் எந்தத் தகவலும் பெண் ஜாதகத்தின் ஆயுளை வரையறுக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்