கங்கா தரிசனம் குபேர யோகம்!

க.புவனேஸ்வரி

தீர்க்கதமஸ் என்ற முனிவர் இருந்தார். ஒருமுறை, இவரது ஆசிரமத்துக்கு சனாதன முனிவர் விஜயம் செய்தார். அவரை வரவேற்று பாத பூஜை செய்து, உணவளித்த தீர்க்கதமஸ் தனக்கு ஒரு நல்ல மார்க்கத்தைக் கூறுமாறு அப்போது வேண்டினார்.

சனாதன முனிவர், ‘‘தீர்க்கதமஸ்... துன்ப இருளை அகற்றி வாழ்வில் இன்ப ஒளியேற்றும் ஒரு விரதம் உண்டு. அதைக் கடைப் பிடித்தால் எல்லாம் நலமாகும். எவரும் மிக எளிமையாகக் கடைப்பிடிக்கக் கூடியது இந்த விரதம். துலா மாதம் தேய்பிறை திரயோதசி அன்று (தீபாவளிக்கு முதல் நாள்) மகா பிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்றி யம தேவனை வழிபட வேண்டும். இதனால் நமது வாழ்வு நலம் பெறுவதோடு, நரகத்தில் உழலும் நம் முன்னோர் சொர்க்கம் செல்லவும் வழி பிறக்கும். முன்னோர்களது ஆசியும் கிடைக்கும். மறு நாள் நரக சதுர்த்தசி (தீபாவளி) அன்று உஷத் காலத்தில் அதாவது உதய காலத்துக்கு முன் எண்ணெய் (எள் நெய்) தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும்.  இந்தப் புனிதமான நாளில் எண்ணெயில் திருமகளும், அரப்புப் பொடியில் கலைமகளும், சந்தனத்தில் நிலமகளும், குங்குமத்தில் கௌரியும், மலர்களில் மோகினிகளும், நீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், தீபத்தில் பரமாத்மாவும் உறைந்து, அருள்பாலிக்கிறார்கள்.

எனவே, இந்த நல்ல நாளில் எண்ணெய் தேய்த்து, அரப்புத் தூள் உபயோகித்து, வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்! இதனால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் சேரும். பிறகு புத்தாடை உடுத்தி, தீபம் ஏற்றி, இனிப்பு பட்சணங்கள் படைத்து இறை வழிபாடு செய். இதுவே தீபாவளி விரதமாகும். இதைக் கடைப்பிடிப்பதால் எல்லா விதமான இடையூறுகளும் நீங்கும். இயற்கை ஒத்துழைக்கும். வழிபாடும் தவமும் தடையின்றி நடைபெறும். நற்கதி உண்டாகும். இந்தத் தீபாவளி விரத வழிபாட்டை ஆண்டுதோறும் கடைப் பிடிப்பதன் மூலம், தோஷங்கள் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கை அமையும்!’’ என்று விளக்கமாக எடுத்துரைத்தார். அவ்வாறே கடைப்பிடித்து தீர்க்கதமஸ் இறையருள் பெற்றார். நாமும் தீபாவளி விரதம் மேற்கொண்டு, இறையருள் பெறுவோம்.

முனிவர் உபதேசித்தபடி, தீபாவளி வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவது கங்காஸ்நானம். வாழ்வில் ஒருமுறையேனும் காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது, பக்த அன்பர்கள் ஒவ்வொருவரும் விரும்பியிருக்க, அவளே நம் இல்லம் தேடி வரும் நாள்தான் தீபாவளி. இந்த நாளில் அவளின் மகிமையை அறிந்து புனித நீராடுவதால், பன்மடங்கு பலன் உண்டு. அறிந்துகொள்வோமா சகல சம்பத்துகளையும் குபேர யோகத்தையும் தரும் புனிதமிகு கங்கையின் மகத்துவத்தை?!

கங்கையின் பிறப்பிடம்

தன் முன்னோரான சகர மைந்தர்கள் நற்கதி அடைய, பகீரதன் பெருந்தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த திருக்கதை நாமறிந்ததே. இதுபோன்று இன்னும் பல கங்கா மகாத்மியங் களைப் பெரியோர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.
கங்கையின் மகத்துவம் குறித்து வால்மீகி முனிவர், “கங்கையே, எனக்கு பெரிய அரச பதவி வேண்டாம். உன் கரையில் உள்ள மரத்தில் கூடு கட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால் அதுவே போதும். அல்லது உன்னிடம் வாழும் ஓர் ஆமையாகவோ, மீனாகவோ, புழுவாகவோ ஜன்மமெடுத்தால்கூட போதும்’ என்கிறார்.

மகாபாரதம், “கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க்கத் திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்’ என்கிறது. மகாகவி காளிதாசன், “கங்காதேவியே, யமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி புனித நீருக்குதான் இருக்கிறது’ என்கிறார்.

“கங்கையே, மூன்று உலகங்களுக்கும் ஆதாரம் நீ. நீயே எனக்கு சம்சாரத்தைக் கடக்கும் வழியாக இருக்கிறாய். யாருடைய இதயத்தில் கங்கை மீது பக்தி இருக்கிறதோ அவர்களுக்கு முக்தி எளிது’ என்கிறார் ஆதிசங்கரர். கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்