முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ரண்டுக்கு உடையவன் சுபகிரகத்துடன் இணைந்து உச்சம் பெற்று, லக்ன கேந்திரத்தில் அமைந்து இருக்கவேண்டும். அல்லது புருஷ கிரகத்துடன் இணைந்து சுப கிரகத்தின் பார்வைப்பட்டு விளங்கவேண்டும். இந்த இரண்டில் ஒன்று ஜாதகத்தில் அமையப்பெற்றால், அவனது விளக்கம் சான்றோடு இணைந்து, எல்லோரையும் ஏற்கவைக்கும் தகுதி பெற்றுவிடும் என்கிறது ஜோதிடம் (வாக்ஸ்தானபே ஸெளம்யயுதெ...).

இரண்டுக்கு உடையவன் சொல்வளத்தை அளிப்பவன். அவனுக்கு சுப கிரக இணைப்பு ஒரு தகுதி; உச்சம் பெற்றிருப்பது ஒரு தகுதி; லக்ன கேந்திரத்தில் இடம்பெற்றிருப்பது மற்றொரு தகுதி. இந்த மூன்றும் சொல்வளத்தை பெருமைக்கு உரியதாகவும், மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பதாகவும் அமைத்துவிடுகின்றன. அவன் உச்சம் பெற்றிருப்பதால், பிறப்பிலேயே சொல் வளம் சிறப்பைப் பெற்றுவிட்டது. அவன், இயல்பாகவே சொல்வளம் பெற்றவனாகிறான். அத்துடன், சுப கிரகத்தின் இணைப்பு அதை மெருகேற்றி உயர்த்திவிடுகிறது. லக்ன கேந்திரத்தில் (1, 4, 7, 10 வீடுகள்) இடம்பிடித்தவுடன், எல்லோரையும் ஈர்க்கும் அளவுக்கு சிறப்பைப் பெற்றுவிடுகிறது. சிந்தனைவளத்தின் சிறப்பில் தகவல்களை அலசி ஆராய்ந்து, பிறருக்கு நன்மை பயக்கும் விளக்கங்களை வெளியிட்டு, அவற்றை அவர்களை ஏற்கவைக்கும் திறமையையும் பெற்றிருக்கும். இதையே சொல் வளம் என்கிறது ஜோதிடம்.

மக்களியையே, சிந்தனை வளத்தைப் பெருக்கி சுயமாகவே தன்னை உயர்த்திக் கொள்ளும் தகுதியை ஊட்டியவர்கள் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் போன்றவர்கள். அவர்களது சொல்வளம் மக்களின் கவலைகளை அகற்றும் திறமை பெற்றதாக விளங்கியது. இரண்டுக்கு உடையவன் புருஷ லக்னமாக இருக்கவேண்டும். சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் புருஷ கிரகங்கள். சுபன், அசுபன் என்ற பிரிவில் மாறுபட்டு இருந்தாலும், சொல் வளத்தைப் பெருக்குவதில் ஒற்றுமை இருக்கும். வெப்பதட்பங்களில் வெப்பம் சொல்வளத்தை ஊக்குவிக்கும் என்கிறது வேதம்  (அக்னிர்மே வாசி ச்ரித:).

சூரியன், செவ்வாய் இவர்களது இணைப்பில் குருஅவர்களது இயல்பை வழங்க  ஒத்துழைப்பான். அந்த நேரத்தில், இரண்டாம் பாவாதிபதி திறமை பெற்று சொல்வளத்தைப் பெருக்கி, அவனை சமுதாய அங்கீகாரம் பெறவைக்கும். இரண்டுக்கு உடையவன், ஏதாவதொரு புருஷ கிரகத்துடன் இணைந்து இருந்து, சுப கிரகத்தின் பார்வை பட்டாலும், சொல் வளம் பெற்றவனாகத் திகழ்வான் என்கிறது ஜோதிடம். இந்தத் தகுதி வாழ்வில் சந்திக்கும் இன்னல்களைப் புறந்தள்ளி, சமுதாயத்தில் அவனை அடையாளம் காட்டும். கல்வியிலும் இல்லறத்திலும் துறவறத்திலும் சமுதாய வாழ்க்கையிலும் தனது முத்திரையைப் பதிக்கவைக்க உதவும். கல்வியில் ஈடுபாடும், இல்லறத்தில் இணைந்து செயல்படும் பாங்கும், துறவறத்தில் தியாக உணர்வும் மேலோங்கி யிருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற, சிந்தனை வளம் பெற்ற சொல்வளம் உதவும். சமுதாயத்தில் அறிவின் முதிர்ச்சியில் உயர்ந்து, மற்றவர்களையும் உயர்த்திடும் செயலை தனது சொல்வளத்தால் நிறைவேற்றுவான்.

இரண்டுக்கு உடையவன் குருவோடு இணைந்து 12-ம் வீட்டில் அமர்ந்தால், சொல்வளம் இருக்காது. சிலநேரம் பேச்சே வராமல் போகலாம். சிந்தனை வளம் பெற்று திறமை இருந்தாலும், சமுதாயத்தில் வெளிப்படுத்த இயலாமல் மெளனமாக இருக்க நேரிடும். குரு சுபகிரகமானாலும் 12-ல் (விரயம்) அமர்ந்தபடியால், நாவன்மை அற்று பேசா மடந்தையாக மாற்றிவிடும் என்கிறது ஜோதிடம் (வாக்ஸ்தானமே தேவ புரோஹிதெள்...).

ஒவ்வொரு பாவத்தையும் ஆராயும்போது (1 முதல் 12 வீடுகள்) அந்தந்த பாவத்துக்கு செழிப்பை அளிக்கும் காரகக் கிரகம் இருக்கும். உதாரணமாக  இரண்டாம் பாவத்தை ஆராயும்போது, செல்வம், வாக்கு, குடும்பம், மாரகம் (மறைவு), வலது கண் - இவற்றின் தகுதியை வரையறுக்கும். அந்தத் தகுதியைச் செழிப்பாக்கி நடைமுறைப்படுத்த, மற்றொரு கிரகத்தின் ஒத்துழைப்பு கைகொடுக்கும் அந்த கிரகத்துக்கு ‘காரகக் கிரகம்’ என்று பெயர். லக்னத்துக்கு 1-ம் பாவம் (வீடு) சூரியன், இரண்டுக்கு குரு, மூன்றுக்கு செவ்வாய், நான்குக்குச் சந்திரனும் புதனும், ஐந்துக்குக் குரு, ஆறுக்கு சூரியனும் சனியும், ஏழுக்கு சுக்கிரன், எட்டுக்கு சனி, ஒன்பதுக்கு சூரியன், குரு, சனி, பத்துக்குக் குரு, சூரியன், புதன், சனி, பதினொன்றுக்கு குரு, பன்னிரண்டுக்கு சனி. இப்படி, அந்தந்த பாவத்துக்கு (வீட்டுக்கு) ஒத்துழைக்கும் காரகக் கிரக வரிசையைப் பட்டியலிட்டுச் சொல்லும் ஜோதிடம் (த்யுமணி ரமர மந்த்ரீ...).

ஒரு பாவத்தின் (வீடு) நிறைவு அல்லது குறையை வரையறுக்க, அந்தந்த காரக கிரகத்தின் இணைப் பின் தகுதியை ஆராயவேண்டும். குறிப்பிட்ட பாவம் (வீடு) செழிப்பாக இருப்பதை உறுதி செய்ய, அந்த  பாவத்தின் காரக கிரகத்தின் ஒத்துழைப் பையும் இணைத்துப் பார்க்கவேண்டும். இங்கு இரண்டுக்கு உடையவன் தனது வீட்டுக்குக் காரகனான குருவோடு இணைந்திருக்கிறான். ஆனால், இருவரும் 12-ல் அமர்ந்தபடியால் செழிப்பை இழந்து தவிக்க நேரிட்டது என்று ஜோதிடம் விளக்கும். குரு கோடி நன்மையைச் செய்வான். அவனோடு இரண்டுக்கு உடையவன் சேர்ந்திருப்பதால், சொல்வளம் செழிப்பாக இருக்கும் என்று பிரபலங்கள் தவறான விளக்கத்தை அளிக்க முற்படக்கூடாது. ஓரிடத்தில் சொன்ன விதியை (விளக்கத்தை) தங்களது விருப்பப்படி மற்ற இடத்துக்கும் பொருந்தும் என்று சொல்லி விளக்கம் அளிப்பதால், பல விபரீதங்களை மக்கள் உணரவேண்டி யிருக்கும்.

உதாரணமாக ஐந்தாம் பாவத்தின் காரகக் கிரகம் குரு. அவன், கடகத்தில் உச்சம் பெற்றிருப்பதை வைத்து, மழலைச் செல்வம் உண்டு என்று முடிவெடுக்கக்கூடாது. அந்த குரு அம்சகத்தில் நீசம் பெற்று மகரத்தில் இருந்தால், மழலைச் செல்வம் இருக்காது என்று சொல்லும். காரகக் கிரகத்தின் சுய தகுதியை ஆராய்ந்து பலன் சொல்ல முற்படவேண்டும். 9, 10, 11 வீடுகளின் அதிபர்கள், அவர்களின் காரகக் கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் ராஜ யோகம் உண்டு. அரசனாவான் என்று பொருளல்ல. செல்வாக்குள்ள செல்வந்தன் ஆவான் என்று பொருள். ஆனால் 9, 10, 11 ஆகிய வீட்டுக்கு உடையவர்கள் அல்லது அந்த பாவங்களின் காரகக் கிரகங்கள் நீசம்பெற்றாலோ அல்லது அம்சகத்தில் நீசம் பெற்றிருந்தாலோ ராஜயோகம் இருக்காது. பாமர வாழ்க்கையைத்தான் சுவைப்பான். 

பல பெருமைகள்  அரசனுக்கு இருந்தாலும் செல்வமும் செல்வாக்கும்தான் அவனை உயரந்தவனாகக் காட்டுகிறது. அந்த இரண்டும் பாவதிபதியோ, காரகக் கிரகமோ நீசம் பெற்றிருந்தால் இருக்காது என்கிறது ஜோதிடம் (கர்ம கர்ம பவாதீசா: நீசராசி ஸ்திதா யதி...). இரண்டுக்கு உடையவன் அசுப கிரகத்துடன் இணைந்து, கர்ம ஸ்தானத்தில் நீசம் பெற்று (10-ம் வீட்டில்) சூரியனோடு சேர்ந்து இருந்தால், அரசவையில் பேச்சுத்திறன் இல்லாமல் தவிப்பான் என்கிறது ஜோதிடம் (ஸபாஜடோவாகதிப: ஸ பாப...). ‘சபாஜடன்’ என்றால் அவையில் அமர்ந்து விளக்கம் அளிக்கும் திறன் இருக்காது என்று பொருள். அந்தந்த வீட்டுக்கு உடையவர்கள், அந்தந்த வீட்டின் காரகக் கிரகங்கள் வலுப்பெற்று இருந்தாலோ, சுப கிரகங்களின் பார்வையோடு இருந்தாலோ, அந்தந்த வீட்டின் பலன்கள் முழுமையாக அனுபவத்துக்கு வரும். விபரீதமானால் அதாவது சுயவலுவிழந்து நீசம் பெற்ற வீட்டின் அதிபனும் காரகக் கிரகமும் தவறான இடத்தில் (6, 8, 12-ல்) அமையப்பெற்றால், அந்த வீட்டின் பலன் (பாவத்தின் பலன்) சூன்யமாகிவிடும் என்று ஜோதிடம் அறிவுறுத்தும்.

இரண்டாம் வீட்டில் சூரியன் அல்லது குளிகன் வீற்றிருக்கிறான். அவ்விருவரையும் எல்லா அசுப கிரகங்களும் (செவ்வாய், சனி, தேய்பிறைச் சந்திரன்) பார்க்கிறார் கள் என்றால், பிறப்பிலேயே சிந்தனை வளம் இல்லாதவனாகவும், சிந்திக்கும் தகுதியற்றவனாகவும் இருப்பான் என்கிறது ஜோதிடம். தாம்பத்தியத்தின் செழிப்பை உறுதி செய்ய, 7-க்கு உடையவனையும் அதன் காரகனையும் ஆராயவேண்டும். 7-க்கு உடையவன் உச்சம் பெற்று அதன் காரகனான சுக்கிரனோடு இணைந்து லக்ன கேந்திரத்திலோ (1, 4, 7, 10) சந்திர கேந்திரத்திலோ (அதாவது சந்திரனில் இருந்து 1, 4, 7, 10-ம் வீடுகளிலோ) அல்லது இரண்டின் த்ரிகோணத்திலோ (1,5,9) அமையப்பெற்றால், தாம்பத்திய சுவையை முழுமையாக உணர்வான் என்கிறது ஜோதிடம். இங்கு பத்துப் பொருத்தமோ, தோஷ ஸாம்யமோ, செவ்வாய் தோஷமோ, தசா ஸந்தியோ வலுவிழந்துவிடும் என்றும் அது விளக்கும். பொருத்தத்தில் எந்த முடிவை நாம் எட்டவேண்டுமோ அது கிரக அமைப்பில் தென்பட்டால், நமது விருப்பத்தை நிறைவேற்றிவிடும். பொருத்தம் பார்ப்பதற்கு முன்பு கிரக அமைப்பை நன்கு ஆராய்ந்தால், சில ஜாதகங்களில் பொருத்தம் பார்க்கவேண்டிய தேவை இல்லாமல் போய்விடும் என்று ஜோதிடம் விளக்கும்.

முழுப் பொருத்தம் இருக்கும் ஜாதகத்தில் 7-க்கு உடையவன் நீசனாகவும், காரக கிரகம் வலுவிழந் தும், தவறான வீடுகளில் அமையப்பெற்றும் இருந்தால், தாம்பத்தியம் சூன்யமாகிவிடும் என்று ஜோதிடம் விளக்குவதைக் கவனிக்கவேண்டும். லக்னத்துக்கு உடையவன் உச்சம் பெற்று, காரக கிரகமான சூரியனோடு இணைந்து, அந்த சூரியனும் பலம் பெற்று லக்ன கேந்திரத்திலோ, சந்திர கேந்திரத்திலோ அமையப்பெற்றால், நீண்ட ஆயுள் இருக்கும். இருவரும் நீசம் பெற்று அல்லது பலம் குன்றி இணைந்து ஆகாத இடத்தில் (6, 8, 12-ல்) அமையப்பெற்றால் அல்பாயுர் யோகம் அல்லது மத்யாயுள் யோகம். அதாவது சிறு வயதிலோ இள வயதிலோ மரணம் இருக்கும். இருவரில் ஒருவர் மத்யாயுர் யோகத்துடன் இருந்தால், பொருத்தம் முழுமையாக இருந்தாலும் தாம்பத்தியம் சூன்யமாகிவிடும். பொருத்தம் ஆயுளை நீடிக்கவைக்காது.

ஐந்துக்கு உடையவனும் அதன் காரகக் கிரகமான குருவும் வலுப்பெற்று இணைந்து லக்னகேந்திரத்திலோ, சந்திர கேந்திரத்திலோ அமைந்தால், குழந்தைச் செல்வம் இருக்கும். பொருத்தம் குழந்தைச் செல்வத்தைப் பெற்றுத் தராது. இருவரில் ஒருவர் அலி. அவர்களுக்குச் சந்தான பாக்கியம் பொருந்தியிருந்தாலும் குழந்தை இருக்காது. விஞ்ஞானமும் குழந்தையை ஈட்டித்தராது. இங்கெல்லாம் நடைமுறையில் நாம் பார்க்கும் பொருத்தம் பொய்த்துவிடும். லக்னாதிபதி, சந்திர லக்னாதிபதி, சந்திரன், ஐந்துக்கு உடையவன் ஆகியவற்றை ஆராய்ந்தால், இருவரது  மன ஒற்றுமையின் நெருக்கம் தெரிந்து விடும். ரஜ்ஜுப் பொருத்தமோ, ஷஷ்டாஷ்டகப் பொருத்தமோ செயலற்றுவிடும். மனப் பொருத்தம் இருந்துவிட்டால் 10 பொருத்தங்கள் அடிபட்டு விடுமே. இந்த பொருத்தங்கள், பொருந்தாத மனதை பொருந்தவைக்கும் தகுதி அற்றவை. சட்டியில் இருந்தால் அகப்பையில் அகப்படும். மனம்  பொருத்தமாக இருந்தால் 10 பொருத்தம் பயனுள்ளதாகும்.

லக்னத்தில் இருந்து 12, 1, 2, 4, 7, 8 ஆகியவற்றில் செவ்வாயைப் பார்த்து, பல பிரபலங்கள் பொருத்தத்தை இறுதி செய்ய இறங்குவது உண்டு. அத்துடன் சந்திரனில் இருந்தும் சுக்கிரனில் இருந்தும் செவ்வாயை மட்டுமல்லாமல் சனி, சூரியன், ராகு, கேது இவர்களையும் சேர்த்துக்கொண்டு, கணக்குப் போட்டு பட்டியலிட்டு பொருந்தும் - பொருந்தாது என்று முடிவுகட்டும் ஜோதிட பிரபலங்களும் உண்டு. இதைப் பார்த்து கணினியும் அந்த வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவை அத்தனையும் தாம்பத்தியத்துக்கு தேவையான மன ஒற்றுமைக்கு சம்பந்தம் இல்லாத விளக்கங்கள். ஆயுள், குழந்தைகள், வேலை வாய்ப்பு, மனப்போக்கு போன்றவற்றை பொருத்தங்கள் ஈட்டித்தராது. பிறக்கும் ஜாதகத்தில் அமைந்த கிரகங்களை வைத்து நிர்ணயிக்க வேண்டும்.

இன்றைய நாளில் குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் தென்படு கிறார்கள். விஞ்ஞானம் வாயிலாகவோ, மருத்து வத்தின் வாயிலாகவோ பெற முடியாதவர்களும் உண்டு. இவர்களில் பலர், ஜோதிட பிரபலங்களின் சிபாரிசில் இணைந்தவர்கள். திருமணமாகி விபத்தில் உயிர் பிரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களிலும் ஜோதிட பிரபலங்களின் பொருத்தத்தை நம்பியவர்கள் உண்டு. ‘ஒற்றுமையோடு வாழ்வீர்கள்’ எனும் ஜோதிட பிரபலங்கள் சிலரது உறுதிமொழியை நம்பி ஏமாந்தவர்களும் உண்டு. விவாகரத்தை பலமுறை ஏற்றவர்களும் தென்படுகிறார்கள். குழந்தைகள் உண்டு என்று சான்றிதழ் அளித்த பிரபலங்களை நம்பி ஏமாந்து, கடைசியில் தத்து எடுத்தவர்களும் உண்டு.

நீடித்த தாம்பத்தியத்துக்குத் தேவையான எதையும் பொருத்தத் தால் உருவாக்க இயலவில்லை. ஜோதிடத்தை குருமுகமாகக் கற்றுணர்ந்து, ஜாதகத்தில் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அத்தனையும் போதுமான அளவு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வெளியிடும் தகவல்கள்தான் நம்பிக்கைக்கு உகந்தவை.  கையேடுகளை வைத்து அவற்றின் தகவலை ஆராயாமல் அப்படியே ஏற்று சேர்த்துவைக்கப்படும் திருமணங்கள் நீண்டநாள் நீடிக்காது. கணக்கு, விஞ்ஞானம், பூகோளம், சரித்திரம், மருத்துவம், புவியியல், சமூகவியல், வணிகவியல் போன்றவற்றைக் குறித்துப் படித்து ஆராய்ந்து தெரிந்துகொள்வது போல், ஜோதிடத்தை முறையாகக் கற்று ஆராய்ந்து தெரிந்துகொண்டு தகவலை வெளியிட வேண்டும்.

- தொடரும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்