ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 28

சிட்டிசன் பாபு - ஓவியம்: ரவி

‘கடவுள் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அட்லீஸ்ட், முதல்ல மனுஷனா இருக்கவாவது ட்ரை பண்ணுவோம், பாஸ்!’னு போன இதழ்ல முடிச்சிருந்தேன். மனுஷனா நடந்துகிட்டதால உயிராபத்துலேர்ந்து தப்பின ஒருத்தனைப் பத்தின கதையை இப்போ பார்க்கலாம். உங்கள்ல சில பேர் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-னு எதுலயாவது ஏற்கெனவே இதைப் படிச்சிருக்கலாம். அது ஆண் இல்லை, பெண்மணி; அது ஓர் இறைச்சிக்கூடம்னு இதே கதை வெவ்வேறு ரூபங்கள்லயும் உலா வருது. எதுவா வேணா இருந்துட்டு போகட்டும்; இந்தக் கதையிலேர்ந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய கருத்தை மட்டும் எடுத்துப்போம்.

ஒரு ஃபுட் புராடெக்ட் கம்பெனியின் ஃப்ரீஸர் பிளான்ட், அதாவது, உறைவிக்கும் தொழிற்கூடத்தில் வேலை முடிஞ்சு, எல்லாரும் புறப்படத் தயாரானாங்க. ஒரு சின்ன தொழில்நுட்பக் கோளாறை சரிபண்றதுக்காக ஒரே ஒருத்தன் மட்டும் அங்கேயே இருந்து, வேலை பார்த்துட்டிருந்தான். மத்தவங்க எல்லாரும் வெளியேறிட்டதையோ, எல்லாரும் போயாச்சுன்னு நினைச்சு வாட்ச்மேன் அந்தத் தொழிற்கூடத்தின் கதவுகளை இழுத்துப் பூட்டிட்டதையோ, வேலை மும்முரத்துல அவன் கவனிக்கவே இல்லை.

வேலை முடிஞ்சு, சுற்றுமுற்றும் பார்த்தவன் திடுக்கிட்டான். அவன் இருந்த பகுதியில மட்டும் கொஞ்சம் வெளிச்சம். மத்தபடி, அங்கிருந்த லைட்டெல்லாம் அணைஞ்சிருந்தது. கதவுகள் மூடியிருந்தது. காத்துக்கும் வழியில்லை. நேரமாக ஆக, குளிர் அதிகமாகிக்கிட்டே இருந்தது. மைனஸ் டிகிரியில் உறைய வைக்கும் குளிர். இதே நிலையில ராத்திரி பூராவும் இருந்தா பரலோகம் போக வேண்டியதுதான்னு புரிஞ்சுடுச்சு அவனுக்கு. குளிரோடு சேர்ந்து பீதியும் அவன் உடம்பை நடுக்கியெடுக்க ஆரம்பிச்சது.

போன், செல்போன் வசதியெல்லாம் இல்லாத காலம். தான் இங்கே மாட்டிக்கிட்டு இருப்பதை வெளியே இருக்கிறவங்களுக்கு எப்படித் தெரிவிக்கிறதுன்னு தெரியலை. இருட்டில் தடவித் தடவிப் போய், வாசல் கதவைப் பலமா தட்டிப் பார்த்தான். எந்த ரெஸ்பான்ஸும் இல்ல! ஒரு கட்டத்துல அழுகை வெடிச்சு வர, அப்படியே சோர்ந்து உட்கார்ந்துட்டான். அப்புறம் உட்காரவும் தெம்பு இல்லாம, படுக்கவே படுத்துட்டான்.

நேரம் ஓடிக்கிட்டே இருந்தது. அவன் உடம்பு குளிர்ல விறைச்சுக்கிட்டே இருந்தது. ‘அவ்வளவு தான்,  நம்ம கதை முடிஞ்சுபோச்சு’ன்னு முடிவே கட்டிட்டான் அவன்.

அப்போ… அதிசயம்! வாசல் கதவை யாரோ சாவி போட்டுத் திறக்கிற மாதிரி இருந்தது. எழுந்து உட்கார்ந்தான். கதவைத் திறந்தது வேறு யாருமல்ல, செக்யூரிட்டி கார்டுதான்.

வெளியே வந்ததும், ஆச்சர்யத்தோடு கேட்டான்… “நான் இங்கே சிக்கியிருக்கேன்னு உங்களுக்கு எப்படிங்க தெரிஞ்சுது? நான் கதவைத் தட்டின சத்தம் கேட்டுச்சா? இல்லே, யாராவது உங்களுக்குச் சொன்னாங்களா?”

கார்டு சொன்னார்… “இல்லே சார், நீங்க கதவைத் தட்டினது எனக்குக் கேட்க வாய்ப்பில்லே. நான் அதோ, அங்கே இருக்கிற என் கேபின்லதான் எப்பவும் இருப்பேன். இங்குள்ளவங்கதான் இதைப் பூட்டிட்டு, சாவியை என்கிட்டே கொண்டு வந்து கொடுத்துட்டுப் போவாங்க.”
“அப்புறம், எப்படிங்க கரெக்டா வந்து கதவைத் திறந்தீங்க? வேற ஏதாச்சும் எடுக்க வந்தீங்களா?”னு ஆச்சர்யமா கேட்டான் அவன்.

“இங்கே எடுக்க என்ன சார் இருக்கு?” என்றவர், “இந்த யூனிட்ல அம்பத்தஞ்சு பேர் வேலை செய்யறாங்க. வழக்கமா என்னைக் கடந்து உள்ளே வர்றவங்க எல்லாரும் கார்டு பஞ்ச் பண்ணிட்டு, அவங்க பாட்டுக்கு போயிட்டே இருப்பாங்க. நீங்க மட்டும்தான் என்னைப் பார்த்து, ‘ஹாய்… ஹலோ…’னு சொல்லிச் சிரிச்சுட்டுப் போவீங்க. அதேபோல, சாயந்திரம் திரும்பிப் போறப்பவும் மறக்காம எனக்கு ‘பை’ சொல்லிட்டுப் போவீங்க. இன்னிக்கும் காலைல நீங்க  ‘ஹாய்’  சொல்லிட்டுப் போனது ஞாபகம் இருக்கு. ஆனா, சாயந்திரம் ‘பை’ சொன்ன மாதிரி தெரியலையே… ஒருவேளை, மறந்து, சொல்லாம போயிட்டீங்களோன்னு கூட நினைச்சேன். ஆனா, அப்படிப் போறவர் இல்லையே நீங்க, இதுவரைக்கும் ஒருநாளும் சொல்லிக்காம போனதில்லையேனு தோணுச்சு. அதான், எதுக்கும் வந்து பார்ப் போம்னு வந்தேன். என் சந்தேகம் உண்மையாகிடுச்சு!” என்ற செக்யூரிட்டி கார்டு, “இதுவே வேற யாராவது உள்ளே மாட்டியிருந்தாங்கன்னா, எனக்கு அது தெரிஞ்சிருக்குமாங்கிறது சந்தேகம்தான்!”னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்