‘மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கு!’

விளக்கு பூஜையில் வாசகி நெகிழ்ச்சி

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை 6.9.16 அன்று மாலை, மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. உள்ளூர் மட்டுமின்றி, அருகிலுள்ள வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, திருவிந்தளூர் ஆகிய ஊர்களில் இருந்தும் வாசகியர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
 
‘‘மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மனை தரிசிக்கமுடியாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். இந்த மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் விளக்கு பூஜையில் கலந்துகொண்டால், திருமணத் தடை விலகி நல்ல வரன் அமைவதும், வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் உறுதி’’ என்ற முன்னோட்டத்துடன் இந்த தலத்தின் மகிமையைப் பகிர்ந்துகொண்ட, கோயிலின் குருக்கள் செல்வமுத்துக்குமார், தொடர்ந்து வெகுசிறப்பாக திருவிளக்கு பூஜையை நடத்திவைத்தார்.

மணப்பாறை வாசகி மனோன்மணி கூறும்போது, ‘‘நான் காலையில் பத்தரை மணிக்கு மணப்பாறையில் இருந்து புறப்பட்டேன். நல்ல மழைவேறு. குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து பூஜையில் கலந்துகொள்ளமுடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. இதுவரை சக்தி விகடன் நடத்திய எல்லா பூஜைகளிலும் கலந்து கொண்டிருக்கும் எனக்கு, எங்கே இந்த பூஜையில் கலந்து கொள்ளமுடியாமல் போகுமோ என்று கவலை யாக இருந்தது. ஆனால், மீனாட்சி அம்மன் அருளால் சரியான நேரத்துக்கு வந்து பூஜையில் கலந்துகொண்டது மனசுக்கு மிகவும் நிறைவாக இருக்கு’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

திருவிந்தளூர் வாசகி சாகித்யா, ‘‘இப்பதான் முதல்முறையா சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜையில கலந்துக்கறேன். இங்கே நடந்த பூஜையைப் பார்த்ததுமே, இனிமேல் சக்தி விகடன் நடத்தும் எல்லா பூஜைகளிலும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்’’ என்றார் பூரிப்புடன்.

மேலும், பிள்ளைகளின் படிப்பு, கணவரின் உத்தியோகம், குடும்ப நலன் என்று தங்களின் பிரார்த்தனைகள் குறித்து தனித் தனியே நம்மிடம் பகிர்ந்து கொண்ட வாசகியர்கள் சிலர், சக்தி விகடனின் விளக்குபூஜை மூலம் தங்களின் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்ற தங்களின் நம்பிக்கையையும் முகமலர்ச்சியோடு வெளிப்படுத்தினார்கள்.

நம்பினார் கெடுவதில்லை. அன்னை மீனாட்சியின் அனுக்கிரகத்தால் அவர்கள் எல்லோரது நம்பிக்கையும் நிச்சயம் மெய்ப்படும்.

கட்டுரை மற்றும் படங்கள்: க.சதீஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்