பூச்சரம்!

பலசாலியும் முதலையும்!

ஓர் ஊரில் பெரிய பலசாலி ஒருவன் இருந்தான். அவன், தன்மீது  ஊராருக்கு இருந்த பயத்தையும் மரியாதையையும் இன்னும் அதிகப்படுத்த விரும்பினான். ஏதேனும் பயங்கரமான பிராணியை எடுத்து வளர்த்து வந்தால், ஊரார் மத்தியில் தன் மீதான பயமும் மரியாதையும் அதிகரிக்கும் என்று கருதினான்.

ஒருநாள் அவன் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது, முதலைக் குட்டி ஒன்று கரை ஒதுங்கியது. ஆவலுடன் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் பலசாலி. முதலைக் குட்டியைக் கண்டு அவனது வீட்டார் பயந்தார்கள். பலசாலிக்கோ, அப்போதே தனது எண்ணம் நிறைவேறிவிட்டதாக பெருமிதம். முதலையை மிக செல்லமாக வளர்க்கத் துவங்கினான். எங்கு சென்றாலும் முதலைக் குட்டியையும் எடுத்துச் சென்றான்.  ஊரார் அவனை நெருங்கவே பயந்தனர். தெருமுனையில் அவனைக் கண்டதுமே விலகி ஓடினார்கள். பலசாலிக்கோ மட்டற்ற மகிழ்ச்சி!

நாளுக்கு நாள் முதலை வளர்ந்த போதிலும், அவன் அதைத் தூக்கி சுமப்பதை விடவேயில்லை. அதனால் அவனது வீட்டாரும் அவனை விட்டு விலகிச் சென்றார்கள். ஆனாலும் மற்றவர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவது அவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு நாள் முதலைக்குத் தீனி போதவில்லை. அவனோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். பசியில் அவனையே கடித்துத் தின்னத் துவங்கியது. நன்கு வளர்ந்துவிட்ட முதலையின்  வலிமையோடு அவனால் போராட முடியவில்லை. இரண்டே கடியில் அவன் உயிர் பிரிந்தது.

தீய பழக்கங்களும் இப்படித்தான்... முதலில், ஆபத்து இல்லாததுபோல் நமக்குள் நுழைந்தாலும், பிறிதொருநாள் நம்மையே அது விழுங்கி விடும்!

- கீர்த்தனா ராம்


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்