சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியங்கள்:சித்ரலேகா

குகன் வளர்ச்சி!

ராம லட்சுமணர் சீதையுடன் நாடு துறந்து காடு புகுந்த வரலாற்றை அறிய விரும்புகிறான் குகன். அந்தத் துன்பக் கதையைத் தம்பி சொல்லுகிறான். (ராமன் சொன்னால் அதுதான் துன்பக் கதையாக இராதே, கைகேயி அம்மாளும் ஒரு மகோபகாரியாகக் காட்சி அளிப்பாளே!) அந்த வரலாற்றைக் குகன் கேட்கத்தான் செய்கிறானா? இல்லை, அந்தச் சோக நாடகத்தில் வரும் தாயின் துன்பம், தந்தையின் சோகம், நகர மாந்தர் துயரம் முதலியவற்றையெல்லாம் குகன் ஒருவனாகவே இப்பொழுது அனுபவித்துத் தீர்க்கிறான்.

மாலை நேரம் வந்தது. அனுஷ்டானங்களை முறைப் படி செய்து கொண்டார்கள் சீதையும் ராமனும். (சீதையும் அனுஷ்டானங்களை ராமனைப் போல் செய்து கொண்டாள் என்று முதல் முதல் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது.) படுக்கிற நேரம் வந்தது. தரையே பாயாக நாணற் புல்லை விரித்துப் படுத்துக் கொள்கிறார்கள். ‘இவர்களுக்கு எவ்வித இடையூறும் நேரிடலாகாதே’ என்று அதி ஜாக்கிரதையாக லட்சுமணன் வில்லும் கையுமாய் விடியுமட்டும் இமை கொட்டாமல் ‘பாரா’க் கொடுத்து நிற்கிறான்.

மாலைவாய் நியமம், செய்து
மரபுளி இயற்றி, வைகல்
வேலைவாய் அமுதன் னாளும்
வீரனும்; விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல்
வைகினர்; - வரிவில் ஏந்திக்
காலைவாய் அளவும் தம்பி
இமைப்பிலன், காத்து நின்றான்.


கண்கொட்டாமல் லட்சுமணன் காத்துக் கொண்டிருக்க, குகன் என்ன செய்கிறான்? ராமன் தரையில் கிடப்பதையும், தம்பி காவல் செய்து நிற்பதையும் பார்த்த வண்ணம் நெஞ்சழிந்து கண்ணீர் அருவியாகச் சொரிய, தொடுத்த அம்போடும் விழித்த கண்ணோடும் நின்று கொண்டிருக்கிறான். இந்நிலையில் குகன் காதல் எத்தகைய பெரு வளர்ச்சி அடைந்திருக்கிறது, பாருங்கள்!

வேடன்தானா? வேடசரீரம் என்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் ஆழ்வாரைப் போன்ற ஒரு பக்திக் காதலனா?!

ராமனையும் சீதையையும் லட்சுமணன் காத்து நிற்க, இவனையும் சேர்த்துக் காத்து நிற்பதுபோல் குகன் நிற்கிறான்; இந்த வேடனையும் சேர்த்துக் காவல் செய்வதுபோல் சுற்றத்தார்களான வேடர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம் யானைக் கூட்டம் போலே, மூன்று ஜீவ அரண்கள் சீதா ராமரைச் சுற்றி; இந்த அரண்களின் நடு நாயகம் குகன்;

தம்பிநின் றானை நோக்கித்,
தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவிசோர் குன்றின் நின்றான்.


‘தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி’னான் குகன். தம்பி இப்படிக் காத்து நிற்க வேண்டுமென்றால், தமையனது தன்மைதான் எப்படி யிருக்க வேண்டும்! பஞ்ச சயன மெத்தையிலே படுத்துறங்க வேண்டிய மகாசுகுமாரன், - ராஜ்ய குலாவி மகிழ வேண்டிய செல்வம் - இப்படி நாணற்புல் நிரப்பிய வெறுங்காட்டுத் தரையில் தன் மனைவியோடு அநாதைபோல் படுத்திருக்கிறானே! இப்படி அண்ணனுக்கு நேர்ந்த நிலையை நினைத்து நினைத்துக் கண் கொட்டாமல் வில்லுங் கையுமாய் இளவரசு சாதாரணக் காவற்காரன் போல் காத்து நிற்கிறானே! இப்படியெல்லாம் எண்ணமிடும் வேடனது கண்களிலிருந்து சோகம் கண்ணீராகத் தாரை தாரையாகப் பெருகுகின்றதாம். இப்படிக் கண்ணீர் பெருக விட்டு நிற்கும் குன்று போன்ற அந்த முரட்டுச் சரீரத்தை அப்படியே பார்த்துவிடுகிறான் கவிஞன். (‘கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்’.)

‘ராமனுடைய வடிவ ழகும் தியாக சௌந்தரியமும் ஒரு நாள் முகத்திலே விழித்த வேடனையும் இந்தப் பாடு படுத்துகின்றனவா?’ என்று அதிசயிக்கிறோம். ஆனால், குன்று போன்ற உடம்பில் குடியிருக்கும் உள்ள அன்பின் ‘பொங்குமா கடல்’ அல்லவா?

முதுகிலிட்ட அம்பறாத் தூணியும் நடுக்கோத்துப் பிடித்த வில்லுமாய் நடையாடத் தயாராய்க் கோட்டைச் சுவர் நின்று கொண்டிருப்பதுபோல நிற்கும் லட்சுமணனைக் காட்டிலும் குகன் அதி ஜாக்கிரதையாகக் காவல் செய்து நிற்கிறானாம். இப்படி ஒரு ஜாமமா? இரண்டு ஜாமமா? ஜாமம் ஜாமமாக இரவு கழிந்து போகிறது.

உதயகாலத்தில் செய்ய வேண்டிய நியமங்களை விரும்பிச் செய்து ராமன் புறப்படுகிறான். அப்போது முனிவர்களும் வருகிறார்கள். ராமன் குகனை நோக்கி, ‘ஐயா! அன்பா! நாங்கள் கங்கையைக் கடந்து செல்லத் தோணி கொண்டு வா, விரைவில் கொண்டு வா’ என்று வேண்டிக் கொள்கிறான். இக்கட்டளையைக் கேட்டதும் குகனுக்கு அழுகை வந்து விட்டது. ‘இவனுக்குக் குற்றேவல் செய்வதை விட்டு எப்படிப் பிரிந்து வாழப்போகிறோம்!' என்ற ஏக்கம் உயிரையே நடுங்கச் செய்கிறது, அவனும் தனக்கு வாழ்வு ராமனுடன்தான் என்று கருதுகிறான். அந்தச் சூரிய ஒளியிலே ‘நீலக்கடலோ, நீலமேகமோ, நீலமலர்ச் சோதியோ? என்று பிரமிக்கும்படி மிளிரும் அந்த அழகைக் குகனும் சீதையைப் போல் ஆசையாய் நோக்குகிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்