பிள்ளையார் கோயிலில் எல்லாமே பதினாறு!

நெல்லைச் சீமையில் நவதிருப்பதிகள் எனப் போற்றப்படும் வைணவ திருத்தலங்களில் முதல் திருப்பதியாகத் திகழ்வது ஸ்ரீவைகுண்டம். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் இந்தத் திருத்தலம், தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்கு கோயில்கொண்டிருக்கும் வைகுண்ட நாதனின் திருவருளாலும்... அவரின் திருக்கோயிலுக்கு இடப்புறத்தில் நூறு மீட்டர் தூரத்தில் ஒரே கோயிலில் குடியிருக்கும் பதினாறு கணபதியரின் அருட்கடாட்சத்தாலும் சிறப்புற்றுத் திகழ்கிறது, இந்த ஊர்.   பதினாறு கணபதியர் ஆலயத்தை ‘ஷோடச விநாயகர் ஆலயம்’ என்று அழைக்கிறார்கள் ஊர்மக்கள்.

17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானச் செல்வராம் குமரகுருபரர் பிறந்தது இவ்வூரில் தான். அவர், தமது ஐந்து வயது வரையிலும் வாய் பேசாமல் இருக்கவே, அவருடைய பெற்றோரான சண்முக சிகாமணிக் கவிராயரும், சிவகாமசுந்தரி அம்பாளும் மிகவும் வருந்தினர். தங்கள் பிள்ளையை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று, அங்கே முருகப்பெருமானின் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருந்து, மகனுக்குப் பேசும் சக்தியை அருளும்படி முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டனர்.

அவர்களின் வேண்டுதல் விரைவில் பலித்தது. செந்தூர் முருகனின் திருவருளால் பேசத் துவங்கிய குமரகுருபரர், முருகப்பெருமான் குறித்த பாடல்களை மடை திறந்த வெள்ளம் போல பாடினாராம். இதுவே பின்னாளில் ‘கந்தர் கலிவெண்பா’வாக தொகுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’, `சகலகலாவல்லி மாலை’ முதலான பல ஞானநூல்களை அருளிய குமரகுருபரர், வடக்கே காசியம்பதிக்கும் சென்றார். அங்கே மடம் ஒன்றை நிறுவினார். பிறகு, கும்பகோணம் அருகிலுள்ள திருப்பனந்தாளில் கிளை மடம் ஒன்றையும் நிறுவினார். காசி மடத்தில் அவர், பதினாறு அம்சமுள்ள ‘ஷோடச விநாயகர்’ சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாராம்.

காசியில் இருப்பதைப் போலவே, குமரகுருபர ரின் பிறந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்திலும் ஷோடச விநாயகர்கள் அருள வேண்டும் என்று எண்ணம் கொண்ட, ‘திருப்பனந்தாள்’ காசி மடத்தின் அன்றைய ஆதீனம் அருள்நந்தி தம்பிரான் ஸ்வாமிகள், இந்த ஊரிலும் ஷோடச விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்