அருட்களஞ்சியம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சந்திரசேகரர்

- தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சிவபெருமானின் திருவடிவங்களுள் சந்திரசேகர திருவடிவமும் ஒன்று. பிறைநிலவைத் தன் திருமுடியில் சூடிக் கொண்டிருக்கும் வடிவமே சந்திரசேகர வடிவம்.

பிரம்மதேவனது புத்திரர்களில் ஒருவன் தட்சன். அவனுக்கு 27 புதல்வியர். அனைவருக்கும் மாப்பிள்ளைமார் தேடுவது என்றால் எளிதான காரியமா? ஆதலால், அத்திரி முனிவருக்கும் அநசூயைக்கும் பிறந்த சந்திரனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கே 27 பெண்களையும் மணமுடித்துக் கொடுத்து, கஷ்டத்தை ஒருவகையாகச் சமாளித்துக் கொள்கிறான், தட்சன்.

சந்திரனோ அந்த 27 பேரில், அழகு மிக்க கார்த்திகை, ரோகிணி இருவரிடமும் அதிக அன்பு பாராட்டுகிறான். அதனால் மற்ற பெண்கள் எல்லாம் தந்தையிடம் சென்று முறையிடுகின்றனர். தட்சனுக்கோ ஒரே கோபம். மருமகனை அழைத்து, அவன் நாளொரு கலையாகத் தேய்ந்து அழியட்டும் என்று சாபமிடுகிறான்.

சாப விமோசனத்துக்காக பிரம்மன், விஷ்ணு இவர்களிடம் நடையாய் நடக்கிறான், சந்திரன். அவர்களால் ஒன்றும்  செய்ய முடியவில்லை. அதற்குள் 14 நாட்கள் கழிந்துவிடுகின்றன. நாளொரு கலையாகத் தேய்ந்து வருகிறான் சந்திரன். கடைசி ஒரு கலை இருக்கும்போது, கயிலையை அடைகிறான். சிவபிரான் திருவடி களில் விழுகிறான். அவரும் அடைக்கலம் என்று வந்தவனுக்கு அபயம் அளித்து, அந்த ஒற்றைக் கலைச் சந்திரனை எடுத்துத் தன் திருமுடி மீது அணிந்துகொள்கிறார். அவனுடைய கலை நாளும் வளரவும் அருள்புரிகிறார். இப்படி, சந்திரன் கலை தேயவும், வளரவும் செய் கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன.

தன் தலையில் சந்திரனைச் சூடிய இறை வனையே சந்திரசேகரன், பிறைசூடி என்றெல்லாம் அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள் பக்தர்கள், கலைஞர்கள் எல்லாரும்.

இந்தச் சந்திரசேகர மூர்த்த வரலாற்றைக் கூறுகிறது கந்த புராணம்.

‘தீர்ந்தன அன்றியே திங்கள தன்னிடை
ஆர்ந்திரு கலையினை அங்கையில் சேர்த்தினால்
சாந்தில அவ்வழித் தக்கன் சாபமே' - என்பது பாடல். இதுவே புராணம் கூறும் வரலாறு.

பழைய புராணம், புதிய விஞ்ஞானம் எல்லாம் கற்றறிந்த கவிஞர் ஒருவர், மாலைப்பொழுதில் ஒரு நாள் செக்கர் வானை நோக்கியிருக்கிறார். பொழுது இருட்டிக்கொண்டே வருகிறது. அந்த நேரத்தில் மூன்றாம் பிறைச் சந்திரன், வானவெளியில் தோன்றுகிறான். அதனைப் பார்த்துப் பாடுகிறார் கவிஞர்.

‘வான வெளி தனிலே
கவிந்து ஏழு மாலைப்
பொழுதினிலே
கூனப் பிறை வரவே
சிவன் திருக்கோலம் தெளிவேனடி'


- என்ற பாடல் உதயமாகிறது. பாடிய கவிஞர் அமரர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. இப்படித்தான் புராணத்தில் உருவான சந்திரசேகரர், கவிஞர் உள்ளத்திலும் உருவாகி இருக்கிறார்.

இந்தச் சந்திரசேகரன் சிற்பக்கலை உலகில் எப்படி உருவாகியிருக்கிறான் என்றும் பார்ப்போமே!

தமிழகத்துக் கோயில்களில் சிலை வடிவில் சந்திரசேகரர் அதிகம் இல்லை. அதே நேரம், உற்ஸவ மூர்த்தியாக சந்திரசேகரர் இல்லாத சிவன் கோயிலும் இல்லை. சில இடங்களில் அவரைச் சந்திரசேகரர் என்பார்கள்; சில இடங்களில் பிரதோஷ மூர்த்தி என்பார்கள். ‘கஸ்யப சில்பம்' என்னும் சிற்ப நூலிலே சந்திரசேகரர் தனியாகவும் இருக்கலாம், அன்னை கௌரியுடன் சேர்ந்தும் இருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

நானறிந்த மட்டிலே, சந்திரசேகரர் தனியாக நிற்கக் காணோம். அன்னையும் அத்தனும் இணைந்து நிற்கும் திருக்கோலமே செப்புச் சிலை வடிவில் இருக்கின்றது, எல்லாக் கோயில்களிலும், மழுவும் மானும் ஏந்திய கையராயும், வரதமும், அபயமும் அருளும் திருக்கரங்களோடும் சமபங்க நிலையில்தான் அவர் நிற்பதைப் பார்க்கிறோம். தலையில் சடா மகுடம் இருந்தால் அதில் இளம் பிறை விளக்கமாக இருக்கும். மணி மகுடம் இருந்தால் பிறை நன்றாகத் தெரிவதில்லை. அன்னையும் அத்தனும் எட்டி நிற்கும் கோலமே பொதுவாய் எல்லா இடத்தும் இருக்கும். என்றாலும், அன்னையை அணைத்துக் கொண்டு நிற்கும் கோலமும் உண்டு. அதனையே ‘ஆலிங்கன சந்திரசேகரர்' என்று அழைப்பர்.

* 1961 - ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்