முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நீண்ட ஆயுள், உடல் வலிமை, உள்ளத்தெளிவு இவை மட்டும் போதாது. அன்றாட வாழ்வில் குறையின்றி செயல்பட செல்வமும் வேண்டும். செல்வம் ஒரு பொருட்டல்ல என்று சொல்பவர்களுக்கும், வாழ்க்கையை நிறைவு செய்ய பணம் வேண்டும். பிறக்கும்போதே அவன் செல்வச் சீமானாக இருப்பதை ஜாதகம் சுட்டிக் காட்டும். அவனது சிந்தனை, பணம் ஈட்டுவதில் முனைப்பாக இருக்கும். முயற்சி இல்லாமல் எதுவும் நடைபெறாது. அதேநேரம், முயன்றும் பலன் அடையாதவர்களும் உண்டு. அவனது முயற்சி வெற்றி பெறுமா என்பதை, ஜாதகத்தில் தென்படும் 11-ம் வீடு சுட்டிக்காட்டும். உழைக்காமல் ஊதியம் பெறும் அதிர்ஷ்டத்தை அது சொல்லாது; உழைத்து ஊதியம் பெறுவது மனித இலக்கணத்தில் ஒன்று.

11-ம் வீட்டை `லாப ஸ்தானம்' என்கிறது ஜோதிடம். விரும்பியதை அடைவது `லாபம்' என்கிறது அது. 11-ம் வீட்டுக்கு உடையவன் கேந்திரம் (1, 4, 7, 10-ம் வீடுகள்) அல்லது த்ரிகோணம் (1, 5 , 9 -ம் வீடுகள்) அதில் இருக்கவேண்டும். 11-ம் வீட்டில் பாப கிரகங்கள் ஒதுங்கவேண்டும். அப்படியிருந்தால், பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை அமையும் என்கிறது ஜோதிடம் (லக்னேச்வரே கேத்திரகாத த்ரிகோணேவா ஸமன்விதே...). அளவுக்கு அதிகமான பணம், வாழ்க்கையின் அமைதியைக் குலைத்துவிடும். தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் பணம் இருப்பதை 'தட்டுப்பாடு இல்லாத' என்ற சொல் சுட்டிக்காட்டும். வாழ்வின் இலக்கு மகிழ்ச்சி. அதை ஈட்ட உதவும் வகையில் பணம் இருப்பது அதன் அளவு.

11-ம் வீட்டுக்கு, மற்றவற்றுக்கு இல்லாத ஒரு தனித்தகுதி உண்டு.அதில் ஒதுங்கிய பாப கிரகங்களும் நன்மையைச் செய்யும் தகுதியைப் பெற்று விளங்கும் (ஸர்வேஷாம் சுப ஏகாதச ஸ்தான பலஸித்தி...). வாழ்க்கைத் தேவைகளின் ஒட்டுமொத்த செழிப்பை சுட்டிக் காட்டும் 11-ம் வீடு. குறிப்பாக தன லாபத்தை 11-ம் வீடு இறுதி செய்யும்.

தாம்பத்திய வாழ்வின் செழிப்புக்கு தன லாபத்தின் பங்கும் தேவைப்படும். தேவையான பொருத்தங்களில் நிறைவு இருந்தாலும், தன லாபத்தின் பங்கு இல்லை எனில், முழு வெற்றியை எட்ட இயலாது. ஆண், பெண் ஜாதகங்களை திருமண இணைப்புக்குத் தகுதி நிர்ணயம் செய்யும்போது, 11-ம் வீட்டையும் ஆராயவேண்டும். அதன் பங்கும் இணையும் போதுதான் செழிப்பு உறுதியாகும். ஆண், பெண் ஆகிய இருவரது 7, 8-ம் வீடுகளை மட்டும் ஆராய்ந்து முடிவெடுக்கும் எண்ணம், ஜோதிட பிரபலங்களில் தென்படக் கூடாது. மன ஒற்றுமை இருந்தாலும், செயல்பாட்டில் வெற்றி பெற பணம் வேண்டும். அதைப் புரிந்துகொள்ள 11-ம் வீட்டின் ஆராய்ச்சியும் தேவை.

லக்னாதிபதி கேந்திரத்திலோ, த்ரிகோணத் திலோ அமைவது என்பது, அவனது திறமையின் வலுவைச் சுட்டிக்காட்டும். விரும்பியதை அடைந்து சுவைக்கும் தகுதி இருப்பதை வரையறுக்கும். அதை ஈட்டித் தரும் வகையில், 11-ம் வீடு லாபத்தைப் பெறும் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இரண்டுக்கு உடையவன், கேந்திரத்தில் இருக்கவேண்டும். 11-ம் வீட்டுக்கு உடையவன் இரண்டில் இருக்கவேண்டும். இரண்டுக்கு உடையவனும், 11-க்கு உடையவனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் அமையப்பெற்றாலும் செல்வச்செழிப்பு இருக்கும். இரண்டுக்கு உடையவன் 1, 4, 7, 10-ல் அமைய வேண்டும். இரண்டுக்கு உடையவனின் 1, 4, 7, 10-ல், 11-க்கு உடையவன் இருக்க வேண்டும். ஆக, இரண்டுக்கு உடை யவனும், 11-க்கு உடையவனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் (1, 4, 7, 10) இடம் பெற்றிருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். லாபாதிபதியின் (11-க்கு உடையவன்) தொடர்பு, தனாதிபதிக்கு (2-க்கு உடையவன்) இருப்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் தொடர்பு உடையவர்களாக மாறுவதும் செல்வச் செழிப்பை இடையூறின்றி நிறைவு செய்யும்.

ஜாதகத்தில் ஒன்றிலிருந்து ஏழாம் வீடு வரை ஒரு பகுதி; 8-ல் இருந்து 12 வரை ஒரு பகுதி. முதல் பகுதி கண்ணுக்குப் புலப் படும்; இரண்டாவது புலப்படாத பகுதி (த்ருச்யார்த்தம், அத்ருச்யார்த்தம்). இவற்றை இணைப்பது லக்னமும், ஏழும். இப்படியும் ஒரு விளக்கம் உண்டு. ஒன்றில் இருந்து 7 வரை ஒரு பகுதி; 7-ல் இருந்து ஒன்று வரை மறு பகுதி. லக்னத்தின் தகுதியை 7-ஐ வைத்து நிர்ணயிக்க வேண்டும். 7-ன் தகுதியை லக்னத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும். இரண்டு பகுதியும் ஒன்றிணைந்து பலனை இறுதியாக்க வேண்டும். ஒன்றுக்கும் ஏழுக்கும் தொடர்பு, இரண்டுக்கும் பதினொன்றுக்கும் தொடர்பு, மூன்றுக்கும் எட்டுக்கும் தொடர்பு, நான்குக்கும் பத்துக்கும் தொடர்பு, ஐந்துக்கும் ஒன்பதுக்கும் தொடர்பு, ஆறுக்கும் பன்னிரண்டுக்கும் தொடர்பு உண்டு. புலப்படும் பகுதியும், புலப்படா பகுதியும் இணைந்தே பலனை இறுதி செய்யும். லாபத்தைப் (11-ஐ) பார்த்துதான் பண வரவை (இரண்டை) நிர்ணயிக்கவேண்டும். 8-ஐ ஆராய்ந்து மூன்றின் ஒத்துழைப்பை தெரிந்துகொள்ளவேண்டும். 10-ஐ (வேலையை) ஆராய்ந்து, அவனது மகிழ்ச்சியை எடைபோட வேண்டும். 9-ஐ (அதிர்ஷ்டம்) ஆராய்ந்து, 5-ஐ (பூர்வ புண்ணியத்தை) தெரிந்துகொள்ள வேண்டும். 12-ஐ ஆராய்ந்து (இழப்பை) 6-ஐ (இடையூறு) இறுதி செய்ய வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத பகுதியை விரிவாக ஆராய்ந்து, புலப்படும் பகுதியின் தரத்தை நிர்ணயிக்கவேண்டும்.

2, 3, 4, 5, 6 ஆகியவற்றின் பலன்களை, 11, 8, 10, 9, 12 ஆகிய வீடுகளில், அவற்றின் அதிபர்களின் தரத்தை இணைந்து ஆராய்ந்தால் மட்டுமே இறுதி பலனைத் தெரிந்து கொள்ள முடியும். பன்னிரண்டுக்கு 6-ம், பதினொன்றுக்கு 2-ம், பத்துக்கு 4-ம், ஒன்பதுக்கு 5-ம், எட்டுக்கு மூன்றும் - ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத தொடர்பு உடையவை. அதுபோல், லக்னமும் 7-ம் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத தொடர்பு உடையவை. பன்னிரண்டு வீடுகளில் ஒரு வீட்டின் பலனை ஆராய, அதனுடன் தொடர்புடைய வீடுகளின் அதிபதிகளுடைய தரத்தை ஆராய்ந்து, அந்த பலனை இணைத்துப் பார்த்து, இறுதி முடிவெடுக்க வேண்டும்.

லக்னத்தை வைத்து ஆயுளை நிர்ணயிக்கும் போது 7-யும் (அதாவது மாரக ஸ்தானம்) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி யிருக்கும். தனாதிபதியின் தரத்தை (செல்வ அளவு) நிர்ணயிக்க, 11-ம் பாவாதிபதியின் தரத்தை (லாபாதிபதி) இணைத்து பலனை இறுதியாக்க வேண்டும். சந்திர கேந்திரத்தில் குரு; பணம் தேவைக்கு அதிகமாகக் குவிந்து விடும். 5-க்கு உடையவன் உச்சம்; அதிர்ஷ்டம் கொட்டும். இரண்டுக்கு உடையவன் குருவோடு இணைந்திருக்கிறான்; செல்வச் செழிப்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழியும் - இப்படியெல்லாம் ஜோதிட பிரபலங்கள் பலன் சொல்ல முற்படக் கூடாது.

திருமணப் பொருத்தத்தில் கிடைக்கும் பலன்கள், கிரகங் களின் ஆராய்ச்சியில் மலர்ந்த முடிவில் வெற்றி பெறும். பத்துப் பொருத்தம் பயனற்றது. அதைப் பயனுள்ளதாகச் செய்ய, அந்தந்த வீட்டின் அதிபதியின் ஆராய்ச்சியில் விளைந்த பலன்தான் அதைப் பயனுள்ளதாக்கும். வாழ்க்கைக்குத் தேவையான உருப்படிகளை ஈட்டித் தரும் கிரகங்களின் திறமைதான் பொருத்தத்தைப் பயனுள்ளதாக்கும். ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் மனநிலை, வாழ்க்கையைச் செழிப்பாக்காது. வாழ்க் கைக்குத் தேவையானவற்றை அடைவதில் வெற்றி பெற்றால்தான், ஒத்துப்போகும் மன நிலையும் பொருளுடையதாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்