ஊர்வலம்! - திருச்சி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சென்னை- கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை யில் சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது திருச்சி மாநகரம். இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி. புராணங்களும் சரித்திரக் குறிப்புகளும் பெரிதும் போற்றும் ஊர் திருச்சி.

* ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர்.

* மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுக்கைகள், சுமார் 5-ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களது வசிப்பிடமாக விளங்கினவாம். சமண முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரது பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, ‘சிராப்பள்ளி’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திரு’ என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என மாறியதாகவும் கூறுவர்.

* சமண மதத்தில் இருந்து அப்பர் பெருமானால் சைவத்துக்கு மாறிய முதலாம் மகேந்திரவர்மனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான லலிதாங்குரன் நினைவாக ஒரு காலத்தில் திருச்சி ‘லலிதாங்குர பல்லவேச்சர கிருகம்’ எனப்பட்டது. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் ‘சிராமலை’ என்றும், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமானவரும் (ஸ்ரீதாயுமானவர் அருளால் பிறந்ததால் இவருக்கு இந்தப் பெயர்) ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.

* அருள்திரு சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர்கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் திருச்சியின் தொன்மை மற்றும் தலப் பெருமை குறித்து நூல்களை இயற்றியுள்ளனர். மேலும் தாயுமான அடிகள், அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகியோரும் இந்தத் தலத்தை போற்றிப் பாடியுள்ளனர்.

* சோழப் பேரரசர்களின் தலைநகராகத் திகழ்ந்த உறையூர், தற்போது திருச்சி மாநகரின் ஒரு பகுதியாக திகழ்கிறது. உறையூருக்கு ‘கோழியூர்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஒரு காலத்தில் பகைவர்களின் படையைச் சேர்ந்த யானை போரில் ஈடுபட்டபோது, உறையூர்க் கோழி ஒன்று அந்த யானையைத் தன் அலகினாலும் கால் நகங்களினாலும் கீறி, யானையின் கண்களைக் குருடாக்கி ஓடச் செய்தது. அன்று முதல் உறையூருக்கு கோழியூர் என்ற பெயர்  ஏற்பட்டது.

* திருச்சி உறையூரில்தான் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் அவதரித்தார்.

* திருச்சியின் புகழுக்கு மணிமகுடமாகத் திகழ்கிறது மலைக்கோயில். இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர்.

* பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு. சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு. இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

* ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் கொண்டு உன் பலத்தால் முடிந்தால் அகற்றிப் பார்!’’ என்றார் ஆதிசேஷன். வாயுவால் அந்த நிலையில் மேருவை அசைக்கக் கூட முடியவில்லை. அதனால் வாயுவுக்கு உதவ தேவர்கள் முன்வந்தனர். அவர்கள் ஆதிசேஷனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்து, ஆதிசேஷனது கவனத்தைச் சிதறடித்தனர். அதன் மூலம் வாயுவின் வீரியம் மலையைப் பெயர்த்து வீசியது. அதனால் மேரு பர்வதத்தின் பகுதிகள் ஆங்காங்கே சிதறி விழுந்தன! அப்படி சிதறி விழுந்த பகுதிகளில் ஒன்றுதான் சிரா மலை. மற்றவை திருக்காளத்தியும், திரிகோண மலையும் (இலங்கை) என்று கூறுவர்.

* மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை. மட்டுவார்குழலம்மை உடனாய ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை. குடைவரைக் கோயிலான உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை. இப்படி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதால், இதற்கு முத்தலை மலை என்றும் பெயருண்டு.

* மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும். உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.

* மலையின் உயரம் நில மட்டத்திலிருந்து உச்சிப் பிள்ளையார் சிகரம் வரை 273 அடி. 178 படிகள் ஏறி முடித்தால் ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை அடையலாம். அடிவாரத்தில் இருந்து 417 படிகள் ஏறினால் உச்சிப்பிள்ளையார் கோயிலை அடையலாம். அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து படி ஏறினால், மௌன சுவாமிகள் மடம், முருகன் சந்நிதி, நூற்றுக் கால் மண்டபம், இன்னும் பல மண்டபங்கள், தாயுமானவரின் கோயில் மண்டபம், கம்பத்தடி விநாயகர், ஆறுமுகன், அறுபத்துமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை ஆகியோரை தரிசித்த பிறகு மூலவர் ஸ்ரீதாயுமானவரை தரிசிக்கலாம்.

* சிவபெருமானை மணம் செய்ய விரும்பிய உமாதேவியார், தாமரை மலரில் சிறிய பெண் குழந்தையாக வடிவெடுத்தாள். காத்தியாயன முனிவர் அவளை வளர்த்து வந்தார். அவளின் கூந்தலில் நல்மணம் வீசியதால் அவள் மட்டுவார்குழலி என அழைக்கப்பட்டாள். பருவமெய்திய மட்டுவார்குழலி சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி, அருகில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டு தவம் செய்தாள். இந்த இடம் நாகநாத சுவாமி கோயில். பெருமான் அவளுக்குக் காட்சி கொடுத்து மணம் புரிந்தார். சித்திரைத் திருவிழாவின் 6-வது நாளில் இந்தத் திருமண விழா இங்கு நடைபெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்