திருப்பதி பிரார்த்தனையை இங்கே நிறைவேற்றலாம்!

ஜெ.நிவேதா

கும்பகோணம் நகரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது உப்பிலியப்பன் திருக்கோயில். ராகு தலமான திருநாகேஸ்வரம் தலத்துக்கு மிக அருகில் உள்ளது இக்கோயில். இங்கு திருமால், உப்பிலியப்பனாக, பூமிதேவி தாயாருடன் தரிசனம் தருகிறார். இந்த உப்பிலியப்பன் கோயில், 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில், பூமாதேவி தனக்கு மகளாகவும், திருமால் மருமகனாகவும் வர வேண்டும் என்ற வேண்டுதலோடு, கடுமையான தவம் இருந்தார் மார்க்கண்டேய மகரிஷி. அதன் பலனாக, மார்க்கண்டேயரின் இல்லத்தில், துளசி  மாடத்தின் கீழ் அவதரித்தாள் பூமித்தாய். அப்படிக் கிடைக்கப் பெற்றவளை மகளாக எடுத்து வளர்த்து வந்தார் மார்க்கண்டேயர். பூமாதேவி திருமண வயதை எட்டியவுடன், திருமால் பூமியில் அவதரிக்கும் காலமும் வந்தது. முதிய அந்தணர் வேடம் பூண்டு, மார்க்கண்டேய மகரிஷியைச் சந்தித்தார் திருமால். பூமாதேவியை தனக்கு மணம் புரிந்து தரும்படி கேட்டார்.

முதியவருக்குத் தன் மகளை மணமுடித்துத் தருவதா என்று தயங்கிய மகரிஷி, ஏதேதோ காரணங்களைக் கூறித் தவிர்க்கப் பார்த்தார். இருந்தாலும், முதியவர் விடுவதாக இல்லை.

எனவே, மார்க்கண்டேய மகரிஷி, “ஐயா, உங்களுக்கு இந்த வயதில் வாய்க்கு ருசியாக, பக்குவமாகச் சமைத்துப் போட வேண்டும். ஆனால், என் மகளுக்குச் சுவை அறிந்து சமைக்கத் தெரியாது. சரியான அளவில் உப்பு போடக்கூடத் தெரியாது. அதனால், நன்றாகச் சமைக்கத் தெரிந்த பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றார். ஆனால், முதியவராக வந்த திருமாலோ, பூமாதேவியைத் திருமணம் செய்துகொள்ளாவிடில், தான் உயிரை விட்டு விடப்போவதாகச் சொல்லிப் புலம்பினார்.

ஒப்பில்லாத பெருமாளுக்கு உப்பில்லாத பட்சணங்கள்!

செய்வதறியாது தவித்த மார்க்கண்டேயர், எம்பெருமானை நினைத்து மனம் உருகி, கண்மூடி வேண்டினார். பின்பு, கண் விழித்துப் பார்த்தபோது, முதியவர் நின்றிருந்த இடத்தில் எம்பெருமான் திருமால் காட்சி அளித்ததைக் கண்டு, சொல்லவொண்ணாத மகிழ்ச்சியில் திளைத்தார். திருமாலுக்குத் தன் மகளை மணமுடித்துத் தரவும் ஒப்புக் கொண்டார்.

அப்போது திருமால் மகரிஷியிடம் ஒரு புன்னகையோடு, “பூமாதேவிக்குச் சரியாக உப்பு போட்டுச் சமைக்கத் தெரியாது என்று சொன்னீரல்லவா? பாதகமில்லை. அவள் உப்பில்லாமல் சமைத்துப் போடும் உணவே எமக்கு அமிர்தம் போன்றது. உப்பிலா உணவே இன்று முதல் எமக்கு நைவேத்தியம்” என்றார்.

அதனாலேயே இன்றளவும், இங்கு அருள்பாலிக் கும் திருமாலுக்கு உப்பில்லாத பண்டங்கள் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகின்றன. உப்பிட்ட பொருட்களைக் கொண்டு வருவதும், இங்குள்ள இறைவனுக்குப் படைப்பதும் இங்கு பாவமாகக் கருதப்படுகிறது. உப்பில்லாத பண்டங்களை விரும்பி ஏற்பதன் காரணமாகவே இங்கு அருள்புரியும் திருமாலுக்கு ‘உப்பிலியப்பன்’ என்னும் திருநாமம் அமைந்ததாகக் கூறுவர்.

இங்கு எழுந்தருளியுள்ள உப்பிலியப்பர், கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையிலும், பூமாதேவி வடதிசை நோக்கி அமர்ந்த நிலையிலும் இருக்க, அவருக்கு எதிராக மார்க்கண்டேயர் தென் திசை நோக்கி அமர்ந்து கன்யாதானம் செய்து தருவது போன்ற நிலையில் காட்சி தருகிறார்.

மார்க்கண்டேய மகரிஷியின் தவத்தினால் எம்பெருமானும் பூமாதேவியும் இங்கு அவதரித் தனர். இதனால் இத்தலம் மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்றும் வழங்கப்படுவதுண்டு. இங்கு அவதரித்த பூமிதேவி, துளசிச் செடியின் அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால், துளசியை இங்கு தல விருட்சமாகக் கருதி, வழிபடுகிறார்கள். எனவே, இத்தலத்தை, ‘துளசி வனம்’ என்றும் கூறுவதுண்டு. மார்க்கண்டேயரின் துளசிவனத்தில்தான் எம்பெருமானும் பூமாதேவியும் மணம் புரிந்துள்ளனர்.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கை யாழ்வார், பேயாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம் இது. குறிப்பாக நம்மாழ்வார் தனது பாடல் ஒன்றில், இந்தத் தலத்தின் திருமாலை ‘வேறு எவருக்கும் ஒப்பு இல்லாதவன்’ என்று போற்றிப் பாடியுள்ளார். இதன் காரணமாக, இத் திருக்கோயில் ஒப்பிலியப்பன் கோயில் என்றும், இங்கு உறையும் திருமால் ஒப்பிலியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். எம்பெருமான் பூமிதேவியுடன் எழுந்தருளும் இத்தலத்தை ஆகாசநகரம், திருவிண்ணகரம், மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைப்பர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்