கேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? வருடம்தோறும் நானும் என் சகோதரியும் சேர்ந்து வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கிறோம். ஆனால், `திருமணம் ஆகிவிட்டதால் தனித்தனியே அவரவர் வீட்டில் வைத்து இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்’ என்கிறார்கள் சிலர். இதுகுறித்து தங்களது வழிகாட்டல் தேவை.

- நித்யா நாராயணன், மதுரை-1

சதுர்த்தி, ரிஷிபஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, ச்ரவண விரதம் போன்ற விரதங்கள், தனி மனிதனை வைத்தே அறிமுகமானவை.  இவற்றை, விளக்குபூஜை போல சேர்ந்து செய்யும் சடங்காகச் சித்திரிக்கவில்லை, தர்ம சாஸ்திரம்.

‘என்னுடைய தவறுகள் மறைந்து,  நற்குணங்கள் பெருக வேண்டும்’ எனும் கருத்தில்தான் பூஜைக்குப் பயன்படும் செய்யுள் இருக்கும்; பன்மையில் இருக்காது. கோயில் உற்ஸவம், நதி நீராடல் ஆகியவற்றைக் கூட்டாகச் சேர்ந்து செய்யலாம். கூட்டுக்குடும்பம் எனில், அனை வரும் ஒன்றாகச் சேர்ந்து வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாம். தனிக்குடித்தனமாக வாழ்கிறபோது, விரதத்துக்கு மட்டும் ஒன்று சேருவதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை.

அறம் வளர, ஒவ்வொரு பெண்ணும் தனித் தனியே விரதம் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், முழுமையான பலனும் கிடைக்கும். பக்தியோடும் சிரத்தையோடும் செயல்பட தனியாகச் செயல்படுவது பொருந்தும். ‘நான் விரதம் இருக்கிறேன்’ என மனதுள் சங்கல்பம் செய்கிறோம்தானே?! எனவே, பூஜையைத் தனித்தனியே செயல் படுத்துவதே சிறப்பு.

? ‘புத்திரன் இல்லாதவருக்கு நற்கதி கிடைப்பதரிது’ என்று கருட புராணம் சொல்வதாகச் சொல்கிறார்களே... உண்மையா?


- வே.சரவணகுமார், காஞ்சிபுரம்


‘புத்’ எனும் துயரில் இருந்து கரையேற்றுபவன் புத்திரன் என்றே கருட புராணம் விளக்கம் தருகிறது. ஆனால், ‘புத்திரர் இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்று தவறாகப் புரிந்துகொண்டவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் போலும். இது தவறு. புத்திரன் இல்லை என்றால் மோட்சமும் இல்லை என்று தர்ம சாஸ்திரம் சொல்லாது. மோட்சத்துக்கும், புத்திரனுக்கும் சம்பந்தம் இல்லை. இறந்தவரின் அறம் அவரைக் கரையேற்றி விடும். ஆனாலும், அவரிடமிருந்து வந்த நாம், அவருக்குச் செய்யும் கடமைகளில் இருந்து நழுவக் கூடாது என்கிறது சாஸ்திரம்.

அவரின் ஜீவ அணுக்களால் நம் உடல் தோன்றியது. ஆக... அவரின் ஜீவ அணுக்களில் ஒரு பகுதி நம்மிலும் உண்டு. இந்தத் தொடர்பை அறிந்து, இறப்புத் தீட்டைக் கடைப்பிடிக்கிறோம். மரணம் தவிர்க்கமுடியாதது. துயரம் ஒருபுறம் இருந்தாலும் அதிலேயே ஆழ்ந்துவிடாமல், ஈமச் சடங்குகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். ‘அவர் கரையேறி விட்டார்’ என்ற எண்ணம் நம் மனதில் பதியும்போது, நமது செயல்பாடுகள் சிறப்பு பெறும்.

‘காசியில் உயிர் துறந்தால் மோட்சம்’ என்கிறது புராணம். நம் முன்னோர்கள் இதற்காகவே காசிக்குச் செல்வர். அவர்களில், புத்திர பாக்கியம் வாய்த்தவர்களும் உண்டு; வாய்க்காதவர்களும் உண்டு. புராண விளக்கங்களைத் தெரிந்து கொள்ள குறிப்பிட்ட அணுகுமுறை தேவை. குறிப்பிட்ட ஒரு விஷயத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அதற்கு முன்னும் பின்னும் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

வம்ச விருத்திக்குப் புத்திரன் வேண்டும். புத்திரனைப் பெற்றுக் கொள்வது சிறப்பு என்பதை அறிவுறுத்துவதே சாஸ்திரத்தின் நோக்கம். புத்திரர் இல்லாதவர்களுக்கு, மகள் வயிற்றுப் பேரன் மூலம் ஈமச் சடங்கை நிகழ்த்தச் சொல்லும். பேரனும் இல்லையெனில், மகள் ஈமச் சடங்கைச் செய்யலாம் என்கிறது சாஸ்திரம். இப்படி புத்திரரில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக ஒவ்வொருவராகக் குறிப்பிடும் சாஸ்திரம்... உறவுகள் எவரும் இல்லையெனில், தொடர்பு இல்லாத ஒருவனும் ஈமச் சடங்கு செய்யலாம் என்றும் ஒரு வாய்ப்பு தருகிறது.

இந்த மண்ணில் தோன்றியவன் ஈமச் சடங்கை இழக்கக் கூடாது என்பதே சாஸ்திரத்தின் நோக்கம். அநாதைகளுக்கும் ஈமச் சடங்கை நிறைவேற்ற வற்புறுத்துகிறது அது. ஆகையால், மனக் குழப்பம் தேவையில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick