குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

பிரபுநந்த கிரிதர்

வ்வோர் ஆண்டும் ஆனித் திருமஞ்சனத்துக்கும் திருவாதிரை திருவிழாவுக்கும் வெளியூர் அன்பர்கள் பலர் வடலூருக்கு வந்து வள்ளலாரோடு சேர்ந்து சிதம்பரம் சென்று, நடராஜப் பெருமானைத் தரிசிப்பது வழக்கம்.
ஒரு சமயம் அவ்வாறே பலர் வந்து, சிதம்பரம் செல்லக் காத்திருந்தனர். விழா நாள் நெருங்கியும் வள்ளலார் புறப்படுவதாகத் தெரியவில்லை. பலர் காத்திருந்து பார்த்து விட்டு, வள்ளலாருக்குத் தெரியாமல் சத்தமின்றிக் கிளம்பி விட்டனர். சிலர் மட்டும் காத்திருந்தனர். விழா நாளும் வந்தது. அன்றும் பெருமானார் வடலூரை விட்டுக் கிளம்புவதற்கான அறிகுறியே இல்லை! ‘சிதம்பர தரிசனம் தவறியதே’ என்று அந்தச் சிலரும் மனதுக்குள் வருந்தினர்.

அவர்களது வருத்தத்தைக் குறிப்பால் உணர்ந்த  வள்ளலார், தருமசாலையின் ஒருபக்கத்தில் வெண் திரையிடச் சொன்னார். எல்லோரையும் அந்தத் திரைக்கு முன்னே வரச்சொன்ன அவர், ‘‘சிதம்பர தரிசனம் இதோ பாருங்கள்!’’ என்றார். என்ன ஆச்சர்யம்! வள்ளலார் கையை அசைத்ததும் அந்தத் திரையில் சிதம்பர தரிசனம் காட்சி தந்தது. தில்லையம்பலத்தில் நிற்பதுபோலவே உணர்ந்து களித்தனர் அவர்கள்.

வள்ளல் பெருமானார் தனிமையைப் பெரிதும் விரும்பினார். தியானமும் இறைவனை நோக்கிய மன ஒருமைப்பாடும் தனிமையிலேயே சாத்தியம் என நினைத்தார். ஆனால், தருமசாலையில் எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick