கார்த்திகை தரிசனம்!

கே.புவனா

அருணாசல மகிமை!

ருணாசல மகாத்மியமும் அருணாசல புராணமும் திருவண்ணா மலையின் மகத்துவத்தைச் சொல்கின்றன. ஸ்காந்தம் எனப்படும் வடமொழி ஸ்காந்த புராணத்தின் மாஹேஸ்வர காண்டத்தில் சுமார் 37 அத்தியாயங்களில் அமைகிறது அருணாசல மகாத்மியம். அருணாசலபுரக் கதையை குத்சர், உரோமசர், குமுதர், குமுதாட்சர், சகடாயர், அகத்தியர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தித் தேவரும் மார்க்கண்டேயரும் கூறியுள்ளனர்.

முக்தி கொடுக்கும் ஏழு நகரங்களான காசி, காஞ்சி, மதுரா, மாயா, அவந்தி, அயோத்தியா, துவாரகை ஆகியவற்றை ஒரு தட்டிலும் அண்ணாமலையை மற்றொரு தட்டிலும் இட்டால், தராசு சமமாக நிற்கும்.

இத்தகுச் சிறப்புமிக்க திருவண்ணாமலை, `சத்ய யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் செப்பு மலையாகவும், இனிவரும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இலங்கும்’ என்பது ஞானப் பெரியவர்களின் வாக்கு.

பிற இடங்களில் மலைமீது பரமன் வீற்றிருப்பார். இங்கோ, மலையாகவே இருக்கிறார். மலையாகவே நின்றுவிட்டால், சாதாரண பக்தர்களால் உணர இயலாது, பூஜைகளும் அபிஷேகமும் கொள்ள முடியாது என்பதால் சின்னஞ்சிறு லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றி நின்ற இடமே அண்ணாமலையார் திருக்கோயில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick