சித்திர ராமாயணம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பி.ஸ்ரீ.

எழுந்தனர் எய்தினர்

ண்டகாரண்யத்து முனிவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கும்படியாக அமைந்தது ராமனின் பேச்சு.

‘‘சூர் அறுத்தவனும் சுடர்நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும்
ஆர் அறத்தினொடு அன்றிநின்றார் அவர்
வேர் அறுப்பேன் வெருவன்மின் நீர்’’ என்றான் ராமன்.


‘‘தருமதேவதை மட்டும் என் கட்சியில் இருந்தால் போதும்; வேறு தேவதைகள் எதிர்க்கட்சியில் இருந்தபோதிலும் கவலையே இல்லை. தரும விரோதிகளை வேரறுத்துவிடுவேன், பயப்படாதீர்கள்’’  என்ற ராமனின் அபய தானத்தைப் பெற்றுக்கொள்ளும் முனிவர்கள் அடைந்த ஆனந்தப் பரவசத்தை என்னவென்பது?!

விசேஷ  கெளரவம் வாய்ந்த  தங்கள் ஆசிரம தருமத்தின் அறிகுறியாக வுள்ள கோல்களை - தண்டங்களைப் பம்பரம் சுழற்றுவது போல் சுழற்றி விடுகிறார்கள். அந்த ஆனந்தப் பரவசத்திலேயே ஆடுகிறார்கள். தங்களை மறந்து குழந்தைகளைப் போல் நடந்துகொள்கிறார்கள்.

அதுமட்டுமா? தங்கள் உள்ளங்களில் பொங்கிய காதலைக் குடங்குடமாக மொண்டு அபிஷேகம் செய்கிறவர்களைப்போல மொய்த்துக்கொண்டார்கள் ராமனை. அவன், அவர்களைத் தனித் தனியே ஆசை தீரத் தொழுதான். அவன் தொழத் தொழ வாய் குளிர ஆசி சொன்னார்கள் முனிவர்கள்.

எழுந்தனர் எய்தினர் இருண்ட மேகத்தின்
கொழுந்தென நின்றஅக் குரிசில் வீரனைப்
பொழிந்தெழு காதலிற் பொருந்தினார் அவன்
தொழுந்தொறும் தொழுந்தொறும்
ஆசி சொல்லுவார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick