சிவமகுடம் - பாகம் 2 - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆலவாய் ஆதிரையான் - ஓவியங்கள்: ஸ்யாம்

வைகைக் கரையில்...

பொழுது நன்கு புலர்ந்துவிட்டிருந்தது. அன்றாட வழக்கப்படி ஆதவன் தனது பொற்கிரணங்களை வீசி ஆலவாய் அண்ணலின் ஆலயக் கோபுரத்தைத் தழுவி வணங்கி ஆறேழு நாழிகைகள் ஆகிவிட்டிருந்தன. தளர்நடை போட்டுக்கொண்டிருந்த அந்தப் புரவியைக் கடிவாளம் பற்றி இறுக்கி, மேலும் நடக்கவொட்டாது நிறுத்திய அந்த வாலிபன், புரவியின் முதுகிலிருந்து தரையில் குதித்தான். ஓடோடிச் சென்றான் வைகையை நோக்கி!

 வைகையைக் கண்டுவிட்டால்போதும்; தாயைக் கண்டதுபோல் துள்ளிக்குதிக்கும் அவன் உள்ளம். நதிக்கரையை நெருங்கியவன் பாதச் சரடுகளைக் கழற்றினான். கரையில் மெள்ள முழந்தாளிட்டு அமர்ந்து குனிந்து  வைகையின் நீரில் கைவைத்தவன், சட்டென்று கரங்களை விலக்கி ஒருமுறை உதறவும் செய்தான். `அப்பப்பா என்ன குளிர்’ என்று அவன் வாய்சொன்னதே தவிர, மனம் அலுத்துக்கொள்ளவில்லை என்பதை அவனுடைய முகமலர்ச்சிக் காட்டியது. மீண்டும் கைகளால் ஓரிரு முறை வைகையின் நீரை அளாவியவன், பின்னர் இரண்டு கரங்களாலும் நீரை முகந்து முகத்தில் தெளித்துக்கொண்டான். அக்கணத்திலேயே, மூன்று நாள்களாக இடைவிடாமல் தொடர்ந்த நெடும்பயணத்தின் விளைவால் எழுந்த ஒட்டுமொத்த களைப்பும் காணாமல்போனது.

வேறொரு தருணமாக இருந்திருந்தால் வைகைத் தாயின்  மடியில் சிறிது நேரமாவது குதித்து விளையாடியிருப்பான்; நீந்திக் களித்திருந்திருப்பான். ஆனால், இப்போது அதற்கு நேரம் வாய்க்காததால், ஏக்கப் பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவன், வைகையின் நீரை முகத்தில் தெளித்துக் கொண்டதோடு, சிறிது அள்ளிப்பருகவும் செய்தான். அங்ஙனம் இரண்டு மூன்று முறை நீரெடுத்துப் பருகியவனுக்குப் பசியும் மட்டுப்பட்டதாகத் தோன்றியது. `எப்போதும் என் அன்னை, அன்னைதான்’ எனப் புளகாங்கிதத்தோடும் திருப்தியோடும் திரும்ப யத்தனித்தவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாக இடைக்கச்சையைத் தொட்டுப் பார்த்தான். அதில் பொதிந்து  முடிச்சிட்டு வைக்கப்பட்டிருந்த அந்த வஸ்து மிகப் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டவன், அந்தத் திருப்தியோடு புரவியை நோக்கினான். அதுவும் நீரைப்பருகி தனது களைப்பை ஆற்றிக்கொண்டிருந்தது.

ஒரு புன்னகையை வெளிப்படுத்திக் கொண்டவன்  வைகையின் கரையாகத் தென்பட்ட அந்த மண்மேட்டைக்கண்டு, பாதம் புதையும் அதன் மணற்பரப்பின்மீது கால்பதித்துச் சிறிது சிரமத்துடன் ஏறத் தொடங்கினான். அதன் உச்சியை அவன் அடைந்ததும் வேறோர் உச்சம் தென்பட்டது அவனுக்கு.

ஆம்... ஆழிசூழ் உலகின் நாகரிகங்களுக் கெல்லாம் உச்சம் அதுதான். மாண்பின் உச்சம்; பண்பாட்டின் உச்சம்.

பரந்துபட்ட இவ்வுலகில் எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் தழைத்தோங்கித் திகழ்ந்திருக்கின்றன. ஏதென்ஸ், ரோம் என்பவை போன்ற அந்த ராஜ்ஜியங்களின் ராஜதானிகளைப் பற்றிச் சொல்வதானால்... `ஒரு காலத்தில்...’ என்றே தொடங்கவேண்டியிருக்கிறது.  ஏனெனில் ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு காரணத்தால் அந்த நகரங்களெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், யுக யுகாந்திரங்களைக் கடந்து, மனித நாகரிகத் தொட்டிலின் ஆதி மடியாகத் திகழ்ந்து, இதோ இப்போது நாம் வாழும் சமகாலத்திலும் தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கும் ராஜதானி எதுவென்றால், அது நம்  மாமதுரை மட்டும்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick