சனங்களின் சாமிகள் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அ.கா.பெருமாள் ஓவியம்: ரமணன்

து கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயிலில் எங்கே வியர்த்து விடுமோ என அஞ்சியதுபோல மரங்கள் லேசாகக் கூட இலைகளை அசைக்காமல் நின்றிருந்தன. சூரியன் உச்சிக்கு வருவதற்கு இன்னமும் நேரமிருந்தது. திறந்த வெளியில் காற்று வீசுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

அவன் தளர்ந்துபோயிருந்தான். நடு ஜாமத்தில் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தான். முதல் நாள் மதியம் சிறிய கும்பாவில் கம்பஞ்சோறு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

நடந்த களைப்போடு தாகமும் பசியும் சேர்ந்துகொண்டு அவனை வாட்டி எடுத்தன. சாலையில் இருந்து விலகி, ஒரு வேப்ப மரத்தின் அடியில் உட்கார்ந்தான். அவன் தன்னையே ஒருமுறை பார்த்துக்கொண்டான். ஆண்டிக் கோலம் அவனுக்குப் பொருத்தமாக இருந்தது. இடுப்பை இறுக்கிப்பிடித்துக் கட்டியிருந்த காவி வேட்டி; தோளின் ஒருபுறமாகத் துவண்டுகிடந்த காவித்துண்டு; நெற்றி, புஜங்கள், மார்பு, வயிறு எனத் தீட்டியிருந்த விபூதிப் பட்டை. அந்த நிலையிலும் அவன் தன்னை வேறு யாரோ என்பதுபோல உணர்ந்தான். 

சாலையில் ஆளரவம் கேட்டது. இரண்டு மாட்டு வண்டிகள் மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தன. அதன் முன்னும் பின்னுமாக வேல்கம்பும், கம்பும் ஏந்தியபடி சில ஆட்கள். பார்க்க திருமணக் கூட்டம்போல் தெரிந்தது. ``அது யாருடா மரத்தடியில... போய்ப் பாருலே...’’ - ஒருவன் கம்பைத் தூக்கிக் கொண்டு பரபரப்பாக ஓடி வந்தான். வேம்பு மரத்தடியில் சோர்ந்துபோய் அமர்ந்திருந்த அவனைப் பார்த்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick