கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சுமங்கலியாக மறைந்துவிட்ட என் அம்மாவின் திருமாங்கல்யத்தை, வரப்போகும் மருமகளுக்காகப் பயன்படுத்தலாமா?

- சி.கேசவன், திருவிடைமருதூர்

திருமாங்கல்யத்தை, `கல்யாணம் ஆகும் பெண்ணின் தகப்பனார் போட வேண்டுமா, பையனின் வீட்டில் போட வேண்டுமா?' இப்படி ஒரு கேள்வி உண்டு. மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளைதான் தன் செலவில் மாங்கல்யம் வாங்கித் தர வேண்டும். சம்பிரதாயத்தில் ‘நம் பெண்ணுக்குத்தானே செய்கிறோம்’ என்கிற எண்ணத்தில் பெண் வீட்டாரே மாங்கல்யம் போடுவது வழக்கமாகிவிட்டது. சட்டப்படி பார்த்தால் மாங்கல்யம், கூறைப் புடைவை வாங்க வேண்டியது மாப்பிள்ளைதான். ‘எப்போது கன்னிகாதானமாகப் பெண்ணை வாங்கிக் கொண்டாயோ, அப்போதே பெண்ணுக்கு மாங்கல்யத்தையும் புத்தாடையையும் கொடுத்து சுத்தப்படுத்தி உன்னுடையவளாக ஏற்றுக்கொள்!’ என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. மருமகளுக்கு என்று புதிதாகத்தான் பண்ணிப் போட வேண்டும். மாமியாரின் மாங்கல்யத்தைப் போட வேண்டியதில்லை. அப்படியே புதுத் தங்கம் வாங்கவில்லை என்றால், மாமியாரின் மாங்கல்யத்தை உருக்கிப் புதிதாகச் செய்து போடலாம்.

நம் மனது எப்போதும் எதிரிடையான எண்ணங் களையே சிந்திக்கும். வேறு சஞ்சலங்களும் தோன்றக்கூடும். அவற்றுக்கெல்லாம் இடங் கொடுப்பானேன்? ‘எனக்கு அப்படி எல்லாம் தோன்றாது’ என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ‘பண்ணலாமா?’ என்று கேட்கும்போதே உங்களுக்கு ஏதோ நெருடுகிறது என்பதுதானே பொருள்? நெருடுவதைத் தவிர்த்துவிடுங்கள்!

‘இரணிய வேளை’ என்றால் என்ன?

- கே.முருகானந்தம், பெரம்பலூர்

மரணம் வரக் கூடாது என்பதற்காக இரணியன் பகவானிடம் சில வரங்கள் கேட்டான். ‘என்னை யாரும் ஆயுதத்தால் கொல்லக் கூடாது. மனிதனோ, மிருகமோ கொல்லக் கூடாது. வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ மரணம் வரக் கூடாது. பகலிலோ, இரவிலோ நான் சாகக் கூடாது!’ என்றெல்லாம் கேட்டான். பகலும் இல்லாமல் இரவும் வராமல் இருக்கும் நேரம் மாலை. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் இருப்பது நிலைப்படி. மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் இருப்பது நரசிம்மம். இப்படி இரணியனை வதம் செய்தார் பகவான். மாலை வேளையான அந்தச் சந்தியா காலத்தை, இரணிய வேளை, என்று சொல்லத் தொடங்கினார்கள். மற்றபடி அதில் எந்த விசேஷமும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick