கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹம்பிமகுடேசுவரன் - படங்கள்: கா.பாலமுருகன்

ம்பி என்னும் பெயர் பம்பா என்னும் கன்னடப் பெயரிலிருந்து மருவியது. துங்கபத்திரை ஆற்றங்கரையி லிருந்த அந்த இடத்துக்குப் பம்பக்ஷேத்ரம் என்பது முற்காலப்பெயர். பம்பை என்பவள் பிரம்மனின் மகள், பிற்பாடு சிவனை மணந்துகொண்டவள் என்கிறது புராணம். துங்கபத்திரைக்கும் ‘பம்பா நதி’ என்பது பெயர். அதிலிருந்தே ஹம்பி என்னும் பெயரை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள். வற்றாத நீர்ப் பாய்வால் அந்நிலத்தை வளமாக்கிய துங்கபத்திரை ஆறுதான் ஹம்பி அங்கு உருவான வரலாற்றுக்கு முதற்காரணம்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் துங்கை, பத்திரை ஆகிய இரண்டு ஆறுகளும் சேர்ந்ததுதான் துங்கபத்திரை ஆறு. கர்நாடத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களை வளப்படுத்திப் பாயும் இந்த ஆறு, சுமார் 147 கி.மீ  நீளமுடையது. துங்கபத்திரை ஆறு தெற்கிலிருந்து வடக்காகப் பாய்ந்து, வடகிழக்காக ஊர்ந்து, பிறகு கிழக்கு நோக்கித் திரும்பி ஆந்திரத்தின் கர்நூலுக்கு அருகே கிருட்டிணை ஆற்றோடு கலக்கிறது. கிருட்டிணைக்கு இது துணை ஆறு என்பது ஆறு கலக்கும் தன்மையால்தான், உள்ளபடியே இந்த ஆறு ஒரு பேராற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்த தில்லை. ஜீவநதி என்பார்கள். துங்கபத்திரையின்மீது ஹோஸ்பேட்டையில் கட்டப்பட்டுள்ள துங்கபத்திரை அணையை முழுக்கொள்ளளவோடு கண்டால் அதனை ‘நிலம் சூழ்கடலோ’ என்று வியக்கவேண்டியிருக்கும். அந்தப் பெருவளம்தான் அங்கே மாபெரும் பேரரசுகளைத் தோற்றுவித்தது. முன்னதாக, துங்கை நதிக்கரையில்தான் சிருங்கேரி மடம் அமைந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick