சகலமும் சாயி!

படங்கள்: சிதம்பரம் - ஒவியங்கள்: ரவி

‘உண்பதற்கு முன்  ஒருவருக்கு உணவிடு!’

ஆ.சிவசூரியன், தூத்துக்குடி

‘சாயியின் அருள்பெற்ற இன்னோர் அடியார் உண்டு. அவரைப் பார்க்கும் தருணங்களில், சாட்சாத் சாயியையே நேரில் தரிசித்த பரவசம் பொங்கும் எனக்குள்’ என்று குறிப்பிட்டுச் சென்ற இதழில் எழுதியிருந்தார் வாசகர் சிவசூரியன்.

அந்த அடியாரைப் பற்றி...

`ஷீர்டி சாயிபாபா’ திருமந்திர நகர் எனும் தூத்துக்குடியின் திருவீதிகளில் தினசரி உலா வருகிறார். அதுவும் ஒரு வேளையல்ல; இரு வேளைகள். ஆம், காலை 8 முதல் 9 மணிக்குள்ளும், நண்பகலில் 12:30-க்கு மேல் 1:30-மணிக்குள்ளும் உலா வரும் இரண்டு சக்கர வாகனம் ஒன்று தூத்துக்குடி பேருந்து நிலையம், ஆலய வளாகம் போன்ற இடங்களில் நிற்கும். அதன் இருபுறமும் பச்சை வண்ணத்திலான பெட்டிகள் இருக்கும்.

வாகனத்தை ஓட்டிவரும் அன்பர் அந்தப் பெட்டிகளில் இருந்து உணவுப் பொட்டலங்களை எடுத்து மனநலம் குன்றியவர்கள், ஏழை எளிய ஆதரவற்றோருக்கு வழங்குவார். அவர்தான் ‘இயற்கை சாரிட்டபிள் டிரஸ்ட்’டின் நிறுவனர் சாய் இயற்கை ராஜாராம். தினசரி குறைந்தபட்சம் 250 நபர்களுக்கு உணவு எனும் இந்தச் சேவையை, கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்கிறார் ராஜாராம். தோற்றத்திலும் ஏறக்குறைய பாபாவைப் போன்றே காட்சித்தரும் இவர், தூத்துக்குடியில் ‘தென்னகத்தின் ஷீர்டி’ எனுமளவுக்கு மூன்றுதள அமைப்பில் பாபாவுக்கு ஆலயம் நிர்மாணித்துத் தொண்டாற்றி வருகிறார். தினமும் சாயி பக்தர்களால் நிரம்பிவழிகிறது அந்த ஆலயம்.

உணவுப் பணி மட்டுமின்றி, இயற்கையைப் பேணும்விதமாக மரக்கன்றுகள் நடுதல், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளோரின் பிள்ளைகள் கல்வியைத் தொடர உதவுதல், மருத்துவ உதவிகள் என நீள்கிறது இயற்கை ராஜாராமின் நற்பணிகள். மன நோயாளியைக் குளிப்பாட்டிச் சுத்தப்படுத்தி ஆடை மாற்றுகிறார். மனச்சிதைவுக்கு ஆளான சிலரை பௌர்ணமி, அமாவாசை தினங்களில் நெருங்கவே முடியாது. ஆனால், இவரது அன்புக்குத் தலைவணங்கி அவர்கள் உணவுப் பொதியை அமைதியாக வாங்கிக்கொள்கிறார்கள். சமூக மாற்றத்துக்கான முன்னோடியாக வழிகாட்டிவரும் சாய் இயற்கை ராஜாராமின் தாரக மந்திரம் - ‘நீ உண்பதற்கு முன் ஒருவருக்கு உணவிடு!’ சாயிபாபா மறையவில்லை இப்போதும் நம்மோடு வாழ்கிறார், இதுபோன்ற அடியவர்களின் உருவில்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick