அன்பில் அழகர்!

லங்காரப்பிரியரான திருமாலே அழகுதான்! அவர் `அழகர்' என்ற திருப்பெயர்கொண்டு காட்சி தரும் தலங்களாகப் பிரசித்தி பெற்றுத் திகழ்பவை மூன்று. அவை பழமுதிர்ச்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர், அன்பில் வடிவழகிய நம்பி. இவர்கள் மூவர்களில் யார் மிக்க அழகு கொண்டவர் என்று கேட்டால், `அன்பில் வடிவழகிய நம்பிதான்' என்று சொல்வார்கள் வைணவ அன்பர்கள், அதற்கு ஒரு தல வரலாற்றையும் சொல்வார்கள்.

ஒருமுறை ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கும் நான்முகனுக்கும் ஒரு சந்தேகம் உண்டானதாம். வைகுண்டத்தில் சயனக்கோலத்தில் இருக்கும் அழகிய பெருமாளுக்கு ஒப்பான திருமேனி பூவுலகில் எங்காவது உண்டா என்றும், அது வைகுண்டவாசனின் அதே அழகைக் கொண்டிருக்கிறதா என்றும் கேள்வி எழும்பியதாம். அதை பெருமாளிடம் கேட்க, அவரோ அன்பில் திருத்தலம் சென்று காணுமாறும் அங்கே இருக்கும் வடிவழகிய நம்பி அழகே உருவானவர் என்றும் கூறினாராம். அது மட்டுமா? உயிர்களைப் படைத்து முடித்த நான்முகனுக்குத் தான் படைத்த உயிரினங்கள் குறித்து கர்வம் உண்டானதாம்.

தன்னுடைய படைப்புகள்தான் எத்தனை அழகு... இதை மிஞ்சும் அழகை இனி யாரேனும் உருவாக்க முடியுமா என்று எண்ணினாராம். ஆணவம் வந்தால் படைப்புக் கடவுளே ஆனாலும் அது ஆபத்துதான் இல்லையா? பிரம்மனின் ஆணவத்தை அடக்க பெருமாள் அவர் முன்னே வடிவழகிய நம்பி ரூபமாகத் தோன்றினாராம். பெருமாளின் திவ்ய எழிலைக் கண்ட நான்முகன் திகைத்து ‘`நான் உங்களைப் படைக்கவில்லையே? நீங்கள் யார்?'' என்று கேட்க, பெருமாள் ``நான் அன்பில் சுந்தரராஜ பெருமாள்'' என்று கூறி, பிரம்மனின் ஆணவத்தை அடக்கினாராம் திருமால். நான்முகன்மீது அன்புகொண்டு பெருமாள் காட்சி தந்ததால் இத்தலம் `அன்பில்' எனப்படுகிறது என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick